Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

மத்தேயு 1:18-24
   இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்ட வரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்புக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப் படும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா கூடி வாழும் முன்பே கருவுற்றிருப்பதை அறிந்து யோசேப்பு கலங்குகிறார். இருந்தாலும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்குவது எப்படி என்பது குறித்த சிந்தனையில் ஆழ்கிறார். அதே நேரத்தில் தூக்கம் அவரை ஆட்கொள்ள, ஆண்டவரின் தூதர் அவருக்கு கன வில் தோன்றுகிறார். மரியா தூய ஆவியால் கருவுற்றிருப்பதையும், அவர் உலக மீட்பரைப் பெற்றெடுக்க இருப்பதையும் யோசேப்பு அறிந்து கொள்கிறார். கனவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் திட்டத்தை ஏற்று, மரியாவுக்கும் இயேசுவுக்கும் பாதுகாவலராக வாழ முடிவெடுக் கிறார். யோசேப்பைப் போன்று நாமும் இறைத்திட்டத்தை உணர்ந்து வாழ்ந்தால் கடவுள் நம் வீட்டில் பிறப்பதைக் காண முடியும்.

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

மத்தேயு 11:2-11
   அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியா வின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்ப வர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழி யாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்ற னர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்'' என்றார்.
   அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: "நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசை யும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவே வரவிருந்த மெசியா என்பதை உறுதி செய்ய, திருமுழுக்கு யோவான் தனது சீடர்களை அனுப்புகிறார். ஆண்டவரின் நாளில் நிகழும் என இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்தவை தம் வழியாக நிறைவேறுவதை இயேசு அந்த சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். "இயேசுவைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்ற வாக்குறுதியும் இங்கு வழங்கப்படுகிறது. அதே வேளையில் திருமுழுக்கு யோவானே ஆண்டவரின் முன்னோடி என்பதை மக்களுக்கு உணர்த்த இயேசு விரும்புகிறார். "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றிய தில்லை" என்று கூறி, இயேசு அவரை பெருமைப்படுத்துகிறார். நாமும் யோவானைப் போல ஆண்டவரின் வழியைத் தயார் செய்தால், விண்ணரசில் பெருமையுடன் நுழைய முடியும்.

Friday, December 6, 2013

டிசம்பர் 8, 2013

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
மத்தேயு 3:1-12
   அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்று பறைசாற்றி வந்தார். இவரைக் குறித்தே, "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக் குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந் தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட் டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமி லும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத் துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை யிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.
   பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற் கேற்ற செயல்களால் காட்டுங்கள். 'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளை களைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப் பட்டுத் தீயில் போடப்படும். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் முன்னோடியான திருமுழுக்கு யோவான், இயேசு வின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வதைக் காண்கிறோம். கடவுளின் பாதையைச் செம்மையாக்குமாறு வந்த அவர், மக்கள் அனைவரும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப் படுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். நீதியுள்ள கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க பாவங் களை விட்டு மனந்திரும்புமாறும், நமது மனமாற்றத்தை நற்செயல்கள் மூலம் வெளிப்படுத்து மாறும் யோவான் வலியுறுத்துகிறார். நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும் என்ற எச்சரிக்கையும் நமக்குத் தரப்படுகிறது. அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்ட ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்தால், அவரது களஞ்சி யத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக நாம் வாழ முடியும்.

Sunday, December 1, 2013

டிசம்பர் 1, 2013

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
மத்தேயு 24:37-44
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திரு மணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல் லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்ப டியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற் றவர் விட்டுவிடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத் துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப் பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரி யாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாள ருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத் தில் மானிடமகன் வருவார்."

சிந்தனை:
   இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற் செய்தியில் இயேசு, தனது இரண்டாவது வருகையைப் பற்றி சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். மக்கள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில், ஆண்டவர் திடீரென தோன்றுவார் என்ற எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. அவரது வருகை நிகழும் நேரம் தெரியாது என்பதால், எப்பொழுதும் அவரை எதிர்கொள்ள எப்பொழுதும் நாம் தயாராய் இருக்குமாறு அழைக்கப் படுகிறோம். ஆண்டவரின் அரசில் பங்கேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒருவராக இருக்க, எப்பொழுதும் நம்மைத் தயாரித்து வாழ வேண்டும் என்பதே இயேசு நமக்கு தரும் அறிவுரை. ஆண்டவரின் நெறியில் உண்மையுடன் நடந்தால், நினையாத நேரத்தில் வரும் மானிடமகனை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.

Friday, November 22, 2013

நவம்பர் 24, 2013

கிறிஸ்து அரசர் பெருவிழா
லூக்கா 23:35-43
   அக்காலத்தில் இயேசு சிலுவையில் தொங்கிக் கொண்டி ருந்ததை மக்கள் பார்த்துக்கொண்டு நின்றார்கள். ஆட்சியா ளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியா வும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடு வித்துக்கொள்ளட்டும்'' என்று கேலி செய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக்கொள்'' என்று எள்ளி நகையாடினர். "இவன் யூதரின் அரசன்'' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று'' என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்துகொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகி றோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில்லையே!'' என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்'' என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மனிதகுலத்தின் மீட்புக்காக சிலுவையில் தொங்கும் அரசராக காட்சி அளிக்கிறார். இயேசுவின் அரசத்தன்மையைப் புரிந்துகொள்ளாத ஆட்சியாளர் களும், மக்களும் அவரை ஏளனம் செய்கிறார்கள். இயேசு உண்மையான அரசர் என்றால் சிலுவை மரணத்தில் இருந்து தப்பி வருமாறு அவர்கள் எள்ளி நகையாடுகின்றனர். அதிகா ரத்தில் இருந்தவர்கள் மட்டுமல்ல, மரண தண்டனை விதிக்கப்பட்ட ஒரு கள்வனும் இயேசு வைக் கேலி செய்கிறதை இங்கு காண்கிறோம். அந்த நேரத்தில்தான், மற்றொரு கள்வன் அவனைக் கடிந்துகொண்டு இயேசுவின் மாசின்மையை எடுத்துரைக்கிறான். மேலும் அவர் ஆட்சியுரிமையுடன் மீண்டும் வருவார் என்ற நம்பிக்கையையும் அறிக்கையிடுகிறான். அத னால் இயேசு அவனுக்கு அன்றே விண்ணகத்தைப் பரிசளித்தார். நாமும் இயேசுவின் அரசுக்கு சான்று பகர்பவர்களாய் வாழும்போது, பேரின்ப வீட்டை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

Friday, November 15, 2013

நவம்பர் 17, 2013

பொதுக்காலம் 33-ம் ஞாயிறு

லூக்கா 21:5-19

   அக்காலத்தில் கோவிலைப் பற்றிச் சிலர் பேசிக்கொண்டி ருந்தனர். கவின்மிகு கற்களாலும், நேர்ச்சைப் பொருள்களா லும் கோவில் அழகுபடுத்தப் பட்டிருக்கிறது என்று சிலர் பேசிக் கொண்டிருந்தனர். இயேசு, "இவற்றையெல்லாம் பார்க்கிறீர்கள் அல்லவா? ஒரு காலம் வரும்; அப்போது கற்கள் ஒன்றின் மேல் ஒன்று இராதபடி இவையெல்லாம் இடிக்கப்படும்'' என்றார். அவர்கள் இயேசுவிடம், "போதகரே, நீர் கூறியவை எப்போது நிகழும்? இவை நிகழப்போகும் காலத்திற்கான அறிகுறி என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நீங்கள் ஏமாறாதவாறு பார்த்துக் கொள்ளுங் கள்; ஏனெனில் பலர் என் பெயரை வைத்துக்கொண்டு வந்து, 'நானே அவர்' என்றும், 'காலம் நெருங்கி வந்துவிட்டது' என்றும் கூறுவார்கள்; அவர்கள் பின்னே போகாதீர்கள். ஆனால் போர் முழக்கங்களையும் குழப்பங்களையும் பற்றிக் கேள்விப்படும்போது திகிலுறாதீர்கள்; ஏனெ னில் இவை முதலில் நிகழத்தான் வேண்டும். ஆனால் உடனே முடிவு வராது'' என்றார். மேலும் அவர் அவர்களிடம் தொடர்ந்து கூறியது: "நாட்டை எதிர்த்து நாடும் அரசை எதிர்த்து அரசும் எழும். பெரிய நிலநடுக்கங்களும் பல இடங்களில் பஞ்சமும் கொள்ளை நோயும் ஏற்படும்; அச்சுறுத்தக்கூடிய பெரிய அடையாளங்களும் வானில் தோன்றும். இவை அனைத் தும் நடந்தேறுமுன் அவர்கள் உங்களைப் பிடித்துத் துன்புறுத்துவார்கள்; தொழுகைக்கூடங் களுக்குக் கொண்டு செல்வார்கள்: சிறையில் அடைப்பார்கள்; என் பெயரின் பொருட்டு அரச ரிடமும் ஆளுநரிடமும் இழுத்துச் செல்வார்கள். எனக்குச் சான்று பகர இவை உங்களுக்கு வாய்ப்பளிக்கும். அப்போது என்ன பதில் அளிப்பது என முன்னதாகவே நீங்கள் கவலைப்பட வேண்டாம். இதை உங்கள் மனத்தில் வைத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் நானே உங்களுக்கு நாவன்மையையும் ஞானத்தையும் கொடுப்பேன்; உங்கள் எதிரில் எவராலும் உங்களை எதிர்த்து நிற்கவும் எதிர்த்துப் பேசவும் முடியாது. ஆனால் உங்கள் பெற்றோரும் சகோதரர் சகோதரிகளும் உறவினர்களும் நண்பர்களும் உங்களைக் காட்டிக்கொடுப்பார்கள்; உங்களுள் சிலரைக் கொல்வார்கள். என் பெயரின் பொருட்டு எல்லாரும் உங்களை வெறுப்பார்கள். இருப் பினும் உங்கள் தலைமுடி ஒன்றுகூட விழவே விழாது. நீங்கள் மன உறுதியோடு இருந்து உங்கள் வாழ்வை காத்துக்கொள்ளுங்கள்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, ... முடியும்.

Friday, November 8, 2013

நவம்பர் 10, 2013

பொதுக்காலம் 32-ம் ஞாயிறு
லூக்கா 20:27-38

   அக்காலத்தில் உயிர்த்தெழுதலை மறுக்கும் சில சதுசே யர் இயேசுவை அணுகி, "போதகரே, மணமான ஒருவர் மகப்பேறின்றி இறந்து போனால் அவர் மனைவியைக் கொழுந்தனே மனைவியாக ஏற்றுக்கொண்டு தம் சகோத ரருக்கு வழிமரபு உருவாக்க வேண்டும் என்று மோசே எழுதி வைத்துள்ளார். இங்குச் சகோதரர் எழுவர் இருந்த னர். மூத்தவர் ஒரு பெண்ணை மணந்து மகப்பேறின்றி இறந்தார். இரண்டாம், மூன்றாம் சகோதரர்களும் அவரை மணந்தனர். இவ்வாறே எழுவரும் மகப்பேறின்றி இறந்த னர்; கடைசியாக அப்பெண்ணும் இறந்தார். அப்படியானால் உயிர்த்தெழும்போது அவர் அவர்களுள் யாருக்கு மனைவி ஆவார்? ஏனெனில் எழுவரும் அவரை மனைவியாகக் கொண்டிருந்தனரே?'' என்று கேட்டனர். அதற்கு இயேசு சதுசேயரிடம், "இக்கால வாழ்வில் மக்கள் திருமணம் செய்து கொள்கின்றனர். ஆனால் வருங்கால வாழ்வைப் பெறத் தகுதி பெற்ற யாரும் இறந்து உயிர்த்தெழும்போது திருமணம் செய்துகொள்வதில்லை. இனி அவர்கள் சாக முடியாது; அவர்கள் வானதூதரைப் போல் இருப்பார்கள். உயிர்த்தெழுந்த மக்களாய் இருப்பதால் அவர்கள் கடவுளின் மக்களே. இறந்தோர் உயிருடன் எழுப்பப்படுவதைப் பற்றி மோசே முட்புதர் பற்றிய பகுதியில் எடுத்துக் கூறியிருக்கிறாரே, அங்கு அவர் ஆண்டவரை, 'ஆபிரகாமின் கடவுள், ஈசாக்கின் கடவுள், யாக்கோபின் கடவுள்' என்று கூறியிருக்கிறார். அவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள். ஏனெனில் அவரைப் பொறுத்தமட்டில் அனைவரும் உயிருள்ளவர் களே'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உயிர்த்தெழுதலுக்குப் பிந்திய வாழ்வைப் பற்றி நமக்கு கற்பிக்கிறார். இயேசுவை இக்கட்டுக்கு ஆளாக்கும் நோக்குடன் சதுசேயர்கள் சிலர் அவரிடம் ஒரு கேள்வியை எழுப்புகிறார்கள். தாங்கள் மறைநூலில் தேர்ந்தவர்கள் என்பதைக் காட்டு வதற்காக மோசேயின் சட்டத்தின் அடிப்படையில் பிரச்சனையைக் கிளப்புகிறார்கள். உயிர்த் தெழுதல் இல்லை என இயேசுவின் வாயில் இருந்தே மக்களுக்கு மெய்ப்பித்துவிடலாம் என்பது அவர்கள் நம்பிக்கையாக இருந்தது. ஆனால் மோசேயின் வாழ்க்கை நிகழ்வைக் கொண்டே அவர்கள் வாதம் தவறு என இயேசு விடை அளிக்கிறார். ஆபிரகாமின், ஈசாக்கின், யாக்கோபின் கடவுளாகிய ஆண்டவர் இறந்தோரின் கடவுள் அல்ல; மாறாக வாழ்வோரின் கடவுள் என்பதை இயேசு தெளிவுபடுத்துகிறார். உயிரும் உயிர்ப்புமான இயேசுவில் முழு நம்பிக்கை வைக்கும்போது, நாம் நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.

Friday, November 1, 2013

நவம்பர் 3, 2013

பொதுக்காலம் 31-ம் ஞாயிறு

லூக்கா 19:1-10

   அக்காலத்தில் இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டு வோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற் காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக்கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், "சக்கேயு, விரைவாய் இறங்கி வாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்'' என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற் றார். இதைக் கண்ட யாவரும், "பாவியிடம் தங்கப் போயிருக்கிறாரே இவர்'' என்று முணு முணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, "ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைக ளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க்குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந் திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்'' என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, "இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக் கிறார்'' என்று சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, சக்கேயுவின் வாழ்வில் இயேசு மாற்றத்தை ஏற்படுத்திய நிகழ்வை எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவைப் பற்றி கேள்விப்பட்ட சக்கேயு அவரைக் காண ஆவல் கொள்கிறார். மக்கள் கூட்டம் இயேசுவை சூழ்ந்திருந்ததும், சக்கேயு குள்ளமாக இருந்த தும் இயேசுவைக் காண சக்கேயுவுக்கு தடையாக இருந்தன. ஆனாலும் இயேசுவைக் காண் பதில் உறுதியாக இருந்த சக்கேயு சிறுபிள்ளைப் போன்று காட்டு அத்தி மரத்தின் மீது ஏறி இயேசுவைக் காணக் காத்திருக்கிறார். கடவுளைக் காண நாம் எந்த அளவுக்கு ஆர்வம் காட்டு கிறோம் என்பதை சிந்திக்க வேண்டும். தன்னை ஆவலோடு தேடிய சக்கேயுவை இயேசு பெயர் சொல்லி அழைக்கிறார். அவரோடு விருந்துண்ண செல்கிறார். சக்கேயுவின் வாழ்வில் இயேசு நுழைந்ததும் அவரிடம் மிகப்பெரிய மாற்றம் நிகழ்கிறது. நாமும் கடவுளை ஆவலு டன் தேடி, அவரை நம் வாழ்வில் நுழைய அனுமதிக்கும்போது, அவர் தரும் மீட்பைப் பெற் றுக்கொள்ள முடியும்.

Friday, October 25, 2013

அக்டோபர் 27, 2013

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு
லூக்கா 18:9-14

   அக்காலத்தில் தாங்கள் நேர்மையானவர் என்று நம்பி மற்றவர்களை இகழ்ந்து ஒதுக்கும் சிலரைப் பார்த்து இயேசு இந்த உவமையைச் சொன்னார்: "இருவர் இறைவனிடம் வேண்டக் கோவிலுக்குச் சென்றனர். ஒருவர் பரிசேயர், மற்றவர் வரிதண்டுபவர். பரிசேயர் நின்று கொண்டு, இவ் வாறு இறைவனிடம் வேண்டினார்: 'கடவுளே, நான் கொள் ளையர், நேர்மையற்றோர், விபசாரர் போன்ற மற்ற மக்க ளைப் போலவோ இந்த வரிதண்டுபவரை போலவோ இல் லாதது பற்றி உமக்கு நன்றி செலுத்துகிறேன்; வாரத்தில் இரு முறை நோன்பிருக்கிறேன்; என்வருவாயில் எல்லாம் பத்திலொரு பங்கைக் கொடுக்கிறேன்.' ஆனால் வரிதண்டு பவர் தொலையில் நின்று கொண்டு வானத்தை அண் ணாந்து பார்க்கக்கூடத் துணியாமல் தம் மார்பில் அடித்துக்கொண்டு, 'கடவுளே, பாவியாகிய என்மீது இரங்கியருளும்' என்றார்." இயேசு, "பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார். ஏனெனில் தம்மைத் தாமே உயர்த்துவோர் தாழ்த்தப்பெறு வர்; தம்மைத்தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, நமது செபத்தில் இருக்க வேண்டிய அடிப்படை பண்பு களைப் பற்றி விளக்குகிறார். உவமையில் வரும் பரிசேயர், கடவுள் முன்னிலையில் தன் னைத் தாழ்த்தாமல் மற்றவர்களைப் பற்றி குறை கூறுவதைக் காண்கிறோம். மேலும், கடவுளுக்காக பல்வேறு தியாகங்களை செய்வதாகவும் தன்னைப் பற்றி அவர் பெருமை பாராட்டிக் கொள்கிறார். அதே நேரத்தில் வரிதண்டுபவரோ, அடுத்தவர்களைப் பற்றி குறை கூரவில்லை, தன்னைப் பற்றி பெருமை பேசவும் இல்லை. கடவுள் முன்னிலையில் தான் ஒரு பாவி என்பதை உணர்ந்த அவர், கடவுளின் இரக்கத்துக்காக மன்றாடுகிறார். எனவே, பரிசேயரல்ல, வரிதண்டுபவரே கடவுளுக்கு ஏற் புடையவராகி வீடு திரும்பினார் என இயேசு கூறுகிறார். நாமும் கடவுள் முன்னிலையில் நம்மைத் தாழ்த்தும்போது, அவரால் உயர்த்தப் படுவதை உணர முடியும்.

Friday, October 18, 2013

அக்டோபர் 20, 2013

பொதுக்காலம் 29-ம் ஞாயிறு
லூக்கா 18:1-8

   அக்காலத்தில் சீடர்கள் மனந்தளராமல் எப்பொழுதும் இறைவனிடம் மன்றாட வேண்டும் என்பதற்கு இயேசு ஓர் உவமை சொன்னார். "ஒரு நகரில் நடுவர் ஒருவர் இருந் தார். அவர் கடவுளுக்கு அஞ்சி நடப்பதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. அந்நகரில் கைம்பெண் ஒருவரும் இருந் தார். அவர் நடுவரிடம் போய், 'என் எதிரியைத் தண்டித்து எனக்கு நீதி வழங்கும்' என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். நடுவரோ, நெடுங்காலமாய் எதுவும் செய்ய விரும்ப வில்லை. பின்பு அவர், 'நான் கடவுளுக்கு அஞ்சுவதில்லை; மக்களையும் மதிப்பதில்லை. என்றாலும் இக்கைம்பெண் எனக்குத் தொல்லை கொடுத்துக்கொண்டிருப்பதால் நான் இவருக்கு நீதி வழங்குவேன். இல்லையானால் இவர் என் உயிரை வாங்கிக்கொண்டே யிருப்பார்' என்று தமக்குள்ளே சொல்லிக்கொண்டார்.''
   பின் ஆண்டவர் அவர்களிடம், "நேர்மையற்ற நடுவரே இப்படிச் சொன்னாரென்றால், தாம் தேர்ந்துகொண்டவர்கள் அல்லும் பகலும் தம்மை நோக்கிக் கூக்குரலிடும்போது கடவுள் அவர்களுக்கு நீதி வழங்காமல் இருப்பாரா? அவர்களுக்குத் துணை செய்யக் காலம் தாழ்த்து வாரா? விரைவில் அவர்களுக்கு நீதி வழங்குவார் என நான் உங்களுக்குச் சொல்கிறேன். ஆயினும் மானிட மகன் வரும்போது மண்ணுலகில் நம்பிக்கையைக் காண்பாரோ?'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னம்பிக்கையுடன் நீதிக்காக போராடிய ஒரு கைம் பெண்ணைப் பற்றிய உவமையை எடுத்துரைக்கிறார். இயேசுவின் காலத்திய யூத சமூகத்தில் கைம்பெண்கள் மதிப்பற்றவர்களாக கருதி ஒதுக்கப்பட்டனர். அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமே முன்வரவில்லை. இப்படி கைவிடப்பட்ட ஒரு பெண், கடவுளுக்கு அஞ்சாத நேர்மை யற்ற ஒரு நடுவரிடம் தனது வழக்கை முடித்து தருமாறுக் கோருகிறார். நடுவர் காலம் தாழ்த்தினாலும், வேறு வழியில்லை என்பதால் அந்த கைம்பெண் அவரை விடாது தொந்தரவு செய்கிறார். அதைப் பொறுக்க முடியாமல் நடுவர் நீதி வழங்க முடிவு செய்வதாக இயேசு குறிப்பிடுகிறார். இந்த நேர்மையற்ற நடுவரைக் காட்டிலும், நம் தேவைகளை நிறைவேற்று வதில் கடவுள் ஆர்வம் கொண்டிருக்கிறார் என இயேசு விளக்குகிறார். எனவே கால தாமத மானாலும் உறுதியான நம்பிக்கையோடு செபித்தால், கடவுள் நமக்கு நீதி வழங்குவதைக் காண முடியும்.

Friday, October 11, 2013

அக்டோபர் 13, 2013

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
லூக்கா 17:11-19

   அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண் டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழு நோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்க ளைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார்.
    அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்தி ருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பத்து தொழுநோயாளர்களை குணமாக்குகிறார். சமாரிய எல்லையில் தங்கியிருந்த இந்த தொழுநோயாளர்கள், அவ்வழி யாக பயணம் செய்த இயேசுவைக் கண்டு உதவி கோருகிறார்கள். அவர்களது நம்பிக்கையை கண்ட இயேசு, பத்து பேரின் தொழுநோயையும் குணப்படுத்துகிறார். சமூகத்தில் நுழையச் சென்ற வழியில் தொழுநோயாளர்கள் குணம் பெற்றார்கள். தொழுநோயாளர்களில் ஒன்பது பேர் யூதர்கள். அவர்கள் குருக்களிடம் தங்களைக் காட்டி சமூகத்தில் மீண்டும் இணைவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சமாரியரான இறுதி நபரோ, தான் குணமாக காரணமான இயேசுவைக் காணத் திரும்பிச் செல்கிறார். அவர் இயேசுவின் காலில் முகங் குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார் என நற்செய்தி கூறுகிறது. நாம் கடவுளின் இரக்கத்தையும், குணமளிக்கும் அன்பையும் முழுமையாக உணர்ந்து கொள்ளும்போது அவ ருக்கு நன்றியுள்ளவர்களாய் திகழ முடியும்.

Friday, October 4, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
லூக்கா 17:5-10

   அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியா ளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல் வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல் வாரா? மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும் வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வா ரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கையால் நாம் எவ்வளவு நன்மைகளைப் பெற முடியும் என்று கற்றுத் தருகிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நிலத் தில் நிற்கும் மரத்தை கடலில் வேரூன்றி நிற்கச் செய்ய முடியும் என்று இயேசு கூறுகிறார். நமது நம்பிக்கை மூலம் நாம் நற்செய்திக்கு சான்று பகர அழைக்கப்படுகிறோம். நற்செய்தி பணி என்பது கடவுளின் பரிசையும், பணத்தையும் பெறுவதற்காக செய்யப்படும் பணியல்ல, நமது கடமை என்று இயேசு கற்பிக்கிறார். கடவுளுக்கு முன்பு நாம் பயனற்ற பணியாளர்கள் என்பதை உணர ஆண்டவர் நம்மை அழைக்கிறார். பலனை எதிர்பாராமல் கடவுளின் நம்பிக் கைக்குரிய பணியாளர்களாக நாம் செயல்படும்போது, கடுகளவு நம்பிக்கை மூலம் மிகப் பெரிய அற்புதங்களைக் காண முடியும்.

Friday, September 27, 2013

செப்டம்பர் 29, 2013

பொதுக்காலம் 26-ம் ஞாயிறு
லூக்கா 16:19-31

   அக்காலத்தில் இயேசு பரிசேயரிடம் கூறியது: "செல்வர் ஒருவர் இருந்தார். அவர் விலையுயர்ந்த மெல்லிய செந்நிற ஆடை அணிந்து நாள்தோறும் விருந்துண்டு இன்புற்றிருந்தார். இலாசர் என்னும் பெயர் கொண்ட ஏழை ஒருவரும் இருந்தார். அவர் உடல் முழுவதும் புண்ணாய் இருந்தது. அவர் அச்செல்வருடைய வீட்டு வாயில் அருகே கிடந்தார். அவர் செல்வருடைய மேசையிலிருந்து விழும் துண்டுகளால் தம் பசியாற்ற விரும்பினார். நாய்கள் வந்து அவர் புண்களை நக்கும். அந்த ஏழை இறந்தார். வானதூதர்கள் அவரை ஆபிரகாமின் மடியில் கொண்டு போய்ச் சேர்த்தார்கள்.
   செல்வரும் இறந்தார். அவர் அடக்கம் செய்யப்பட்டார். அவர் பாதா ளத்தில் வதைக்கப்பட்டபோது அண்ணாந்து பார்த்துத் தொலையில் ஆபிரகாமையும் அவரது மடியில் இலாசரையும் கண்டார். அவர், 'தந்தை ஆபிரகாமே, எனக்கு இரங்கும்; இலாசர் தமது விரல் நுனி யைத் தண்ணீரில் நனைத்து எனது நாவைக் குளிரச் செய்ய அவரை அனுப்பும். ஏனெனில் இந்தத் தீப்பிழம்பில் நான் மிகுந்த வேதனைப் படுகிறேன்' என்று உரக்கக் கூறினார். அதற்கு ஆபிரகாம், 'மகனே, நீ உன் வாழ்நாளில் நலன்களையே பெற்றாய்; அதே வேளையில் இலாசர் இன்னல்களையே அடைந்தார். அதை நினைத்துக்கொள். இப்பொழுது அவர் இங்கே ஆறுதல் பெறுகிறார்; நீயோ மிகுந்த வேதனைப்படுகிறாய். அன்றியும் எங்களுக்கும் உங்களுக்கும் இடையே பெரும் பிளவு ஒன்று உள்ளது. ஆகையால் இங்கிருந்து ஒருவர் உங்களிடம் வர விரும்பினாலும் கடந்து வர இயலாது. அங்கிருந்து நீங்கள் எங்களிடம் கடந்து வரவும் இய லாது' என்றார்.
   அவர், 'அப்படியானால் தந்தையே, அவரை என் தந்தை வீட்டுக்கு அனுப்புமாறு உம்மிடம் வேண்டுகிறேன். எனக்கு ஐந்து சகோதரர்கள் உண்டு. அவர்களும் வேதனை மிகுந்த இந்த இடத்திற்கு வராதவாறு அவர் அவர்களை எச்சரிக்கலாமே' என்றார். அதற்கு ஆபிரகாம், 'மோசேயும் இறைவாக்கினர்களும் அவர்களுக்கு உண்டு. அவர்களுக்குச் செவிசாய்க்கட்டும்' என்றார். அவர், 'அப்படியல்ல, தந்தை ஆபிரகாமே, இறந்த ஒருவர் அவர்களிடம் போனால் அவர்கள் மனம் மாறுவார்கள்' என்றார். ஆபிரகாம், 'அவர்கள் மோசேக்கும் இறைவாக்கினருக் கும் செவிசாய்க்காவிட்டால், இறந்த ஒருவர் உயிர்த்தெழுந்து அவர்களிடம் போனாலும் நம்பமாட்டார்கள்' என்றார்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பிறர்நலம் பேணும் சகோதர சகோதரிகளாக செயல்பட்டு நிலை வாழ்வைப் பெற்றுக்கொள்ள நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் செல் வரைப் போன்று, அருகில் துன்புறுவோரை கண்டும் காணாமல் வாழும் மனநிலையைக் கைவிட நாம் அழைக்கப்படுகிறோம். லாசர் ஏழையாய் இருந்தும், செல்வரின் மேசையில் இருந்து விழும் உணவுத் துண்டுகளால் பசியாற்றினாலும் அவற்றை சில நாய்களுக்கும் பகிர்ந்தளிக்கிறார். ஆகவே, அவர் இறந்ததும் ஆபிரகாமின் மடியில் இளைப்பாறுகிறார். உடல் முழுவதும் புண்களுடன் ஒரு ஏழை தன் வீட்டு வாயில் அருகே இருப்பதைக் கண்டும், அவருக்கு உதவ செல்வர் எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பதைக் காண்கிறோம். ஆத லால், அவர் பாதாளத்தில் வேதனையை அனுபவிக்கிறார். நம்மிடம் மிகுதியாக இருப்பதை இல்லாதவர்களோடு பகிர்ந்து கொள்ளும்போது, நாம் கடவுளுக்கு உகந்தவர்களாக வானக வீட்டில் நுழைய முடியும்.

Friday, September 20, 2013

செப்டம்பர் 22, 2013

பொதுக்காலம் 25-ம் ஞாயிறு
லூக்கா 16:1-13

   அக்காலத்தில் இயேசு தம் சீடர்களுக்குக் கூறியது: "செல் வர் ஒருவருக்கு வீட்டுப் பொறுப்பாளர் ஒருவர் இருந்தார். அவர் தம் தலைவரின் உடைமைகளைப் பாழாக்கியதாக அவர்மீது பழி சுமத்தப்பட்டது. தலைவர் அவரைக் கூப் பிட்டு, 'உம்மைப் பற்றி நான் கேள்விப்படுவது என்ன? உம் பொறுப்பிலுள்ள கணக்கை ஒப்படையும். நீர் இனி வீட்டுப் பொறுப்பாளராய் இருக்க முடியாது' என்று அவரிடம் கூறி னார். அந்த வீட்டுப் பொறுப்பாளர், 'நான் என்ன செய்வேன்? வீட்டுப் பொறுப்பிலிருந்து என் தலைவர் என்னை நீக்கி விடப் போகிறாரே! மண் வெட்டவோ என்னால் இயலாது; இரந்து உண்ணவும் வெட்கமாய் இருக்கிறது. வீட்டுப் பொறுப்பிலிருந்து என்னை நீக்கிவிடும் போது பிறர் என்னைத் தங்கள் வீடுகளில் ஏற்றுக்கொள்ளும்படி நான் என்ன செய்ய வேண்டும் என எனக்குத் தெரியும்' என்று அவர் தமக்குள்ளே சொல்லிக் கொண்டார்.
   பின்பு அவர் தம் தலைவரிடம் கடன்பட்டவர்களை ஒவ்வொருவராக வரவழைத்தார். முத லாவது வந்தவரிடம், 'நீர் என் தலைவரிடம் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், `நூறு குடம் எண்ணெய்' என்றார். வீட்டுப் பொறுப்பாளர் அவரிடம், 'இதோ உம் கடன் சீட்டு; உட்கார்ந்து ஐம்பது என்று உடனே எழுதும்' என்றார். பின்பு அடுத்தவரிடம், `நீர் எவ்வளவு கடன்பட்டிருக்கிறீர்?' என்று கேட்டார். அதற்கு அவர், 'நூறு மூடை கோதுமை' என்றார். அவர், 'இதோ, உம் கடன் சீட்டு; எண்பது என்று எழுதும்' என்றார். நேர்மையற்ற அந்த வீட்டுப் பொறுப்பாளர் முன்மதியோடு செயல் பட்டதால், தலைவர் அவரைப் பாராட்டினார். ஏனெனில், ஒளியின் மக்களைவிட இவ்வுலகின் மக்கள் தங்கள் தலைமுறையினரிடத்தில் மிக்க முன்மதியுள்ளவர்களாய் நடந்து கொள்ளுகிறார்கள்.
    ஆகையால், நான் உங்களுக்குச் சொல்கிறேன்: நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு உங்களுக்கு நண்பர்களைத் தேடிக்கொள்ளுங்கள். அது தீரும்பொழுது அவர்கள் உங்களை நிலையான உறைவிடங்களில் ஏற்றுக்கொள்வார்கள். மிகச் சிறியவற்றில் நம்பத் தகுந்தவர் பெரியவற்றிலும் நம்பத் தகுந்தவராய் இருப்பார். மிகச் சிறியவற்றில் நேர்மையற்றவர் பெரிய வற்றிலும் நேர்மையற்றவராய் இருப்பார். நேர்மையற்ற செல்வத்தைக் கையாளுவதில் நீங் கள் நம்பத் தகாதவராய் இருந்தால் யார் உங்களை நம்பி உண்மைச் செல்வத்தை ஒப்படைப் பார்? பிறருக்கு உரியவற்றைக் கையாளுவதில் நீங்கள் நம்பத் தகாதவர்களாய்ப் போனால் உங்களுக்கு உரியவற்றை உங்களுக்குக் கொடுப்பவர் யார்? எந்த வீட்டு வேலையாளும் இரு தலைவர்களுக்குப் பணிவிடை செய்ய முடியாது; ஏனெனில், ஒருவரை வெறுத்து மற்றவ ரிடம் அவர் அன்பு கொள்வார்; அல்லது ஒருவரைச் சார்ந்துகொண்டு மற்றவரைப் புறக்கணிப் பார். நீங்கள் கடவுளுக்கும் செல்வத்துக்கும் பணிவிடை செய்ய முடியாது.''


சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். உவமையில் வரும் வீட்டுப் பொறுப்பாளர் மீது தலைவரின் உடைமைகளை வீணாக்கியதாக குற்றச்சாட்டு வருகிறது. அவர் வீட்டுப் பொறுப்பில் இருந்து நீக்கப்படும் நிலை ஏற்படுகிறது. சூழ்நிலையை உணர்ந்துகொண்ட அவர், மற்றவர்களின் மன தில் இடம் பெறுவதற்காக நன்மை செய்வதைக் காண்கிறோம். தன் முன்மதியால் தலைவ ரின் பாராட்டையும் அவர் பெற்றதாக இயேசு கூறுகிறார். நாமும் நமது பாவ நிலையை உணரும்போது, நமது நற்செயல்களால் கடவுளை நெருங்கிச் செல்ல முயற்சிக்க வேண்டும். நேர்மையற்ற செல்வத்தைக் கொண்டு, நாம் நண்பர்களைத் தேடிக்கொள்ள வேண்டுமென ஆண்டவர் கூறுகிறார். அதேநேரத்தில் நிலையான உறைவிடமான விண்ணகத்தை அடையும் வழியைக் கண்டுணர நாம் அழைக்கப்படுகிறோம். கடவுளின் திருவுளத்தை நேரிய விதத்தில் நிறைவேற்றும்போது, நாம் அவரது நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ முடியும்.

Friday, September 13, 2013

செப்டம்பர் 15, 2013

பொதுக்காலம் 24-ம் ஞாயிறு
லூக்கா 15:1-32

   அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல்வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும் மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வர வேற்று அவர்களோடு உணவருந்துகிறாரே'' என்று முணு முணுத்தனர்.
    அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமையைச் சொன் னார்: "உங்களுள் ஒருவரிடம் இருக்கும் நூறு ஆடுகளுள் ஒன்று காணாமற் போனால் அவர் தொண்ணூற்றொன்பது ஆடுகளையும் பாலை நிலத்தில் விட்டுவிட்டு, காணாமற் போனதைக் கண்டுபிடிக்கும் வரை தேடிச்செல்ல மாட் டாரா? கண்டுபிடித்ததும், அவர் அதை மகிழ்ச்சியோடு தம் தோள்மேல் போட்டுக் கொள்வார்; வீட்டுக்கு வந்து, நண் பர்களையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணா மற்போன என் ஆட்டைக் கண்டுபிடித்துவிட்டேன்' என்பார். அது போலவே மனம் மாறத் தேவையில்லாத் தொண்ணூற்றொன்பது நேர்மையாளர்களைக் குறித்து உண்டாகும் மகிழ்ச்சி யைவிட, மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்து விண்ணுலகில் மிகுதியான மகிழ்ச்சி உண்டாகும் என நான் உங்களுக்குச் சொல்கிறேன்.
    பெண் ஒருவரிடம் இருந்த பத்துத் திராக்மாக்களுள் ஒன்று காணமாற் போய்விட்டால் அவர் எண்ணெய் விளக்கை ஏற்றி வீட்டைப் பெருக்கி அதைக் கண்டுபிடிக்கும்வரை கவனமாகத் தேடுவதில்லையா? கண்டுபிடித்ததும், அவர் தோழியரையும் அண்டை வீட்டாரையும் அழைத்து, 'என்னோடு மகிழுங்கள்; ஏனெனில் காணாமற்போன திராக்மாவைக் கண்டுபிடித்து விட்டேன்' என்பார். அவ்வாறே மனம் மாறிய ஒரு பாவியைக் குறித்துக் கடவுளின் தூத ரிடையே மகிழ்ச்சி உண்டாகும் என உங்களுக்குச் சொல்கிறேன்.''
    மேலும் இயேசு கூறியது: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக்கொண்டு, தொலை நாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண்டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார். பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்களுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை.
   அவர் அறிவு தெளிந்தவராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகுதியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத் துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக்கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தை யிடம் வந்தார். தொலையில் வந்துகொண்டிருந்தபோதே, அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டுவந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
   அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்துகொண் டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல் லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித் திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்ப ரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துகளை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார். அதற்குத் தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந் தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் அன்பையும் இரக்கத்தையும் பற்றி எடுத் துரைக்கிறார். வழி தவறிய ஆடுகளாக நாம் அலைந்து திரியும்போது, நம்மைத் தேடும் நல்ல ஆயராக ஆண்டவர் இருக்கின்றார். தொலைந்துபோன நாணயமாக நாம் இருக்கும்போது, நம்மை ஆர்வத்துடன் தேடிக் கண்டுபிடிக்கும் உரிமையாளராக ஆண்டவர் செயல்படுகின்றார். ஆண்டவரை விட்டு விலகிச் செல்லும் பிள்ளைகளாக நாம் நடக்கும்போது, நாம் திரும்பி வருவதற்காக காத்திருக்கும் அன்புநிறைத் தந்தையாக நடந்து கொள்கிறார். நாம் திருந்திய உள்ளத்தோடு ஆண்டவரை நோக்கி ஒரு அடி எடுத்துவைத்தால், அவர் நம்மை நோக்கி பல அடிகள் முன்னே வந்து நம்மை கட்டித் தழுவி அரவணைத்து ஏற்றுக்கொள்கிறார். நமது தன் னல விருப்பங்களை விட்டுவிட்டு, ஆண்டவரின் அரவணைப்புக்குள் திரும்பி வரும்போது விண்ணகத்தில் மகிழ்ச்சி ஏற்படும். அதன் வழியாக நாம் கடவுளின் அருள் உயிரைப் பெற்ற வர்களாக புதுவாழ்வைத் தொடங்க முடியும்.

Friday, September 6, 2013

செப்டம்பர் 8, 2013

பொதுக்காலம் 23-ம் ஞாயிறு
லூக்கா 14:25-33

   அக்காலத்தில் பெருந்திரளான மக்கள் இயேசுவோடு சென்று கொண்டிருந்தனர். அவர் திரும்பிப் பார்த்து அவர் களிடம் கூறியது: "என்னிடம் வருபவர் தம் தந்தை, தாய், மனைவி, பிள்ளைகள், சகோதரர் சகோதரிகள் ஆகியோரை யும், ஏன், தம் உயிரையுமே என்னை விட மேலாகக் கருதி னால், அவர் என் சீடராயிருக்க முடியாது. தம் சிலுவையை சுமக்காமல் என் பின் வருபவர் எனக்குச் சீடராய் இருக்க முடியாது. உங்களுள் யாராவது ஒருவர் கோபுரம் கட்ட விரும்பினால், முதலில் உட்கார்ந்து, அதைக் கட்டிமுடிக்க ஆகும் செலவைக் கணித்து, அதற்கான பொருள் வசதி தம்மிடம் இருக்கிறதா எனப் பார்க்கமாட்டாரா? இல்லாவிட் டால் அதற்கு அடித்தளமிட்ட பிறகு அவர் கட்டி முடிக்க இயலாமல் இருப்பதைப் பார்க்கும் யாவரும் ஏளனமாக, 'இம்மனிதன் கட்டத் தொடங்கினான்; ஆனால் முடிக்க இயலவில்லை' என்பார்களே! வேறு ஓர் அரசரோடு போர் தொடுக்கப்போகும் அரசர் ஒருவர், இருபதாயிரம் பேருடன் தமக்கு எதிராக வருபவரைப் பத்தாயிரம் பேரைக் கொண்டு எதிர்க்க முடியுமா என்று முதலில் உட்கார்ந்து சிந்தித்துப் பார்க்க மாட்டாரா? எதிர்க்க முடியாதெனில், அவர் தொலை யில் இருக்கும்போதே தூதரை அனுப்பி, அமைதிக்கான வழியை தேடமாட்டாரா? அப்படியே, உங்களுள் தம் உடைமையை எல்லாம் விட்டுவிடாத எவரும் என் சீடராய் இருக்க முடியாது.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தம்மைப் பின்பற்றுவதற்குரிய அடிப்படைத் தகுதிகளைப் பற்றி எடுத்துரைக்கிறார். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால் உலகு சார்ந்த எதன் மீதும் நாம் பற்று வைக்கக்கூடாது என்பதே அவரது முதல் அறிவுரை. உறவுகளையும், உடைமை களையும் மட்டுமல்ல நம் உயிரையும் இழக்கத் தயாராக இருந்தால் மட்டுமே நாம் இயேசு வைப் பின்பற்றும் தகுதியைப் பெற முடியும். இங்கு சீடத்துவ வாழ்வின் பொருளை இயேசு நமக்கு கற்பிக்கிறார். நாம் கிறிஸ்து இயேசுவின் சீடர்களாக இருக்க வேண்டுமென்றால், நமது சிலுவையை சுமந்துகொண்டு அவரைப் பின்தொடர வேண்டும். அப்போது இயேசுவின் விருப் பப்படி நாம் இவ்வுலகில் இறையரசைக் கட்டியெழுப்ப முடியும்.

Sunday, September 1, 2013

செப்டம்பர் 1, 2013

பொதுக்காலம் 22-ம் ஞாயிறு
லூக்கா 14:1,7-14

   அக்காலத்தில் ஓய்வு நாள் ஒன்றில் இயேசு பரிசேயர் தலைவர் ஒருவருடைய வீட்டிற்கு உணவருந்தச் சென்றி ருந்தார். அங்கிருந்தோர் அவரைக் கூர்ந்து கவனித்தனர். விருந்தினர்கள் பந்தியில் முதன்மையான இடங்களைத் தேர்ந்து கொண்டதை நோக்கிய இயேசு அவர்களுக்குக் கூறிய அறிவுரை: "ஒருவர் உங்களைத் திருமண விருந் துக்கு அழைத்திருந்தால், பந்தியில் முதன்மையான இடத் தில் அமராதீர்கள். ஒருவேளை உங்களை விட மதிப்பிற் குரிய ஒருவரையும் அவர் அழைத்திருக்கலாம். உங்களை யும் அவரையும் அழைத்தவர் வந்து உங்களிடத்தில், 'இவ ருக்கு இடத்தை விட்டுக்கொடுங்கள்' என்பார். அப்பொழுது நீங்கள் வெட்கத்தோடு கடைசி இடத்திற்குப் போக வேண்டியிருக்கும். நீங்கள் அழைக்கப்பட் டிருக்கும்போது, போய்க் கடைசி இடத்தில் அமருங்கள். அப்பொழுது உங்களை அழைத்தவர் வந்து உங்களிடம், 'நண்பரே, முதல் இடத்திற்கு வாரும்' எனச் சொல்லும்பொழுது உங்களு டன் பந்தியில் அமர்ந்திருப்பவர்கள் யாவருக்கும் முன்பாக நீங்கள் பெருமை அடைவீர்கள். தம்மைத் தாமே உயர்த்துவோர் யாவரும் தாழ்த்தப்பெறுவர்; தம்மைத் தாமே தாழ்த்துவோர் உயர்த்தப் பெறுவர்.''
   பிறகு தம்மை விருந்துக்கு அழைத்தவரிடம் இயேசு, "நீர் பகல் உணவோ இரவு உணவோ அளிக்கும்போது உம் நண்பர்களையோ, சகோதரர் சகோதரிகளையோ, உறவினர்களையோ, செல்வம் படைத்த அண்டை வீட்டாரையோ அழைக்க வேண்டாம். அவ்வாறு அழைத்தால் அவர்களும் உம்மைத் திரும்ப அழைக்கலாம். அப்பொழுது அதுவே உமக்குக் கைம்மாறு ஆகிவிடும். மாறாக, நீர் விருந்து அளிக்கும்போது ஏழைகளையும் உடல் ஊனமுற்றோரையும் கால் ஊனமுற்றோரையும் பார்வையற்றோரையும் அழையும். அப்போது நீர் பேறுபெற்றவர் ஆவீர். ஏனென்றால் உமக்குக் கைம்மாறு செய்ய அவர்களிடம் ஒன்றுமில்லை. நேர்மையா ளர்கள் உயிர்த்தெழும்போது உமக்குக் கைம்மாறு கிடைக்கும்'' என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, மற்றவர்கள் முன்னிலையிலும், கடவுள் முன்னிலை யிலும் நாம் பெருமை பெறுவதற்கான வழியைக் கற்றுத் தருகிறார். பிறர் முன்னிலையில் நாம் பெருமை அடைய விரும்பினால், நம்மை நாமே தாழ்த்திக்கொள்ள வேண்டும் என்பதே இயேசு நமக்கு கற்பிக்கும் முதல் பாடம். கடைசி இடத்தில் அமர்ந்திருக்கும் நாம் முதல் இடத்துக்கு அழைக்கப்படும் வேளையில் பெருமை அடைவோம். அவ்வாறே இருப்பவர்க ளுக்கு விருந்து படைப்பதை விட, இல்லாதவர்களோடு பகிர்ந்து வாழுமாறு இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். இவ்வாறு நாம் மனிதர்களின் கைம்மாறைப் புறக்கணிக்கும்போது, ஆண்டவர் நமக்கு கைம்மாறு அளிப்பார். அப்போது நாம் கடவுளின் முன்னிலையில் மாட்சி பெறுபவர்களாக திகழ முடியும்.

Friday, August 23, 2013

ஆகஸ்ட் 25, 2013

பொதுக்காலம் 21-ம் ஞாயிறு

லூக்கா 13:22-30

   அக்காலத்தில் இயேசு நகர்கள், ஊர்கள் தோறும் கற்பித் துக் கொண்டே எருசலேம் நோக்கிப் பயணம் செய்தார். அப் பொழுது ஒருவர் அவரிடம், "ஆண்டவரே, மீட்புப் பெறு வோர் சிலர் மட்டும்தானா?'' என்று கேட்டார். அதற்கு அவர் அவர்களிடம் கூறியது: "இடுக்கமான வாயில் வழியாக நுழைய வருந்தி முயலுங்கள். ஏனெனில் பலர் உள்ளே செல்ல முயன்றும் இயலாமற்போகும். 'வீட்டு உரிமையா ளரே, எழுந்து கதவைத் திறந்துவிடும்' என்று கேட்பீர்கள். அவரோ, 'நீங்கள் எங்கிருந்து வந்தவர்கள் என எனக்குத் தெரியாது' எனப் பதில் கூறுவார். அப்பொழுது நீங்கள், 'நாங் கள் உம்மோடு உணவு உண்டோம், குடித்தோம். நீர் எங்கள் வீதிகளில் கற்பித்தீரே' என்று சொல்வீர்கள். ஆனாலும் அவர், 'நீங்கள் எவ்விடத்தாரோ எனக் குத் தெரியாது. தீங்கு செய்வோரே, அனைவரும் என்னை விட்டு அகன்று போங்கள்' என உங்களிடம் சொல்வார். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் இறைவாக்கினர் யாவரும் இறை யாட்சிக்கு உட்பட்டிருப்பதையும் நீங்கள் புறம்பே தள்ளப்பட்டிருப்பதையும் பார்க்கும்போது அழுது அங்கலாய்ப்பீர்கள். இறையாட்சியின்போது கிழக்கிலும் மேற்கிலும் வடக்கிலும் தெற் கிலுமிருந்து மக்கள் வந்து பந்தியில் அமர்வார்கள். ஆம், கடைசியானோர் முதன்மையாவர்; முதன்மையானோர் கடைசியாவர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இடுக்கமான வாயில் வழியாக வருந்தி நுழைய அழைப்பு விடுக்கிறார். பேராசை, சுயநலம் போன்ற தீமைகளின் மூட்டைகளை சுமந்துகொண்டு செல் லும்போது, நமக்கு பெரிய வாயில் தேவைப்படுகிறது. அத்தகைய வாயில் வழியாக நாம் நுழைந்தால், அது நம்மை அழிவுக்கு கொண்டு செல்லும். தீமைகளை விடுத்து நன்மை செய் வோராய் வாழ இயேசு நமக்கு அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். கடவுளின் விருப்பத் துக்கு நம்மை முழுமையாக கையளித்து குழந்தைகளைப் போன்ற எளிய மனநிலையில் வாழும்போது, நாம் இடுக்கமான வாயில் வழியாக நுழைய முடியும். இயேசுவை நோக்கி நம்மை அழைத்துச் செல்லும் அந்த வாயிலில் நுழைந்தால், ஆண்டவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொண்டு இறையாட்சிப் பந்தியில் முதன்மையானவர்களாய் அமர முடியும்.

Friday, August 16, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
லூக்கா 12:49-53

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக் குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்ப டுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந் திருப்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையன்புத் தீயை மண்ணுலகில் மூட்ட வந்ததாக கூறுகிறார். கிறிஸ்தவர்கள் அனைவரின் இதயமும் இறையன்புத் தீயில் பற்றியெரிய வேண் டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். கிறிஸ்துவின் சீடர்கள் உலகப் போக்கின்படி வாழாமல், இறைவனுக்கு உகந்தவர்களாய் தனித்தன்மையுடன் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் கிறிஸ்துவுக்காக வாழ, உலகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறோம். நம் விசுவாசத்தைக் காக்க பெற்றோரையும் பிள்ளைகளையும் எதிர்க்க நேரிட் டாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்பதே இயேசு இன்று நமக்கு தரும் அழைப்பு. இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரும், நம்பிக்கை கொள்ளாதோரும் பிரிந்திருப்பர் என்பதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்து மூட்டிய இறையன்புத் தீ நம்மில் பற்றியெரிந்தால், அவர் மீதான நம்பிக்கையில் உறுதியாய் இருந்து நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, August 9, 2013

ஆகஸ்ட் 11, 2013

பொதுக்காலம் 19-ம் ஞாயிறு
லூக்கா 12:32-48

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "சிறு மந்தையாகிய நீங்கள் அஞ்ச வேண்டாம்; உங்கள் தந்தை உங்களைத் தம் ஆட்சிக்கு உட்படுத்தத் திருவுளம் கொண்டுள்ளார். உங்கள் உடைமைகளை விற்றுத் தர்மம் செய்யுங்கள்; இற்றுப்போகாத பணப்பைகளையும் விண்ணு லகில் குறையாத செல்வத்தையும் தேடிக் கொள்ளுங்கள்; அங்கே திருடன் நெருங்குவதில்லை; பூச்சியும் அரிப்பது இல்லை. உங்கள் செல்வம் எங்கு உள்ளதோ அங்கே உங்கள் உள்ளமும் இருக்கும். உங்கள் இடையை வரிந்து கட்டிக் கொள்ளுங்கள். விளக்குகளும் எரிந்துகொண்டிருக் கட்டும். திருமண விருந்துக்குப் போயிருந்த தம் தலைவர் திரும்பி வந்து தட்டும்போது உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் காத்திருக்கும் பணியாள ருக்கு ஒப்பாய் இருங்கள். தலைவர் வந்து பார்க்கும்போது விழித்திருக்கும் பணியாளர்கள் பேறுபெற்றவர்கள். அவர் தம் இடையை வரிந்து கட்டிக் கொண்டு அவர்களைப் பந்தியில் அமரச் செய்து, அவர்களிடம் வந்து பணிவிடை செய்வார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். தலைவர் இரவின் இரண்டாம் காவல் வேளையில் வந்தாலும் மூன்றாம் காவல் வேளையில் வந்தாலும் அவர்கள் விழிப்பாயிருப்பதைக் காண்பாரானால் அவர்கள் பேறுபெற்றவர்கள். எந்த நேரத்தில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாளருக்குத் தெரிந்திருந்தால் அவர் தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். நீங்களும் ஆயத்தமாய் இருங்கள்; ஏனெனில் நீங்கள் நினையாத நேரத்தில் மானிட மகன் வருவார்.''
   அப்பொழுது பேதுரு, "ஆண்டவரே, நீர் சொல்லும் இந்த உவமை எங்களுக்கா? அல்லது எல்லாருக்குமா?'' என்று கேட்டார். அதற்கு ஆண்டவர் கூறியது: "தம் ஊழியருக்கு வேளா வேளை படியளக்கத் தலைவர் அமர்த்திய நம்பிக்கைக்கு உரியவரும் அறிவாளியுமான வீட்டுப் பொறுப்பாளர் யார்? தலைவர் வந்து பார்க்கும்போது தம் பணியைச் செய்துகொண் டிருப்பவரே அப்பணியாளர். அவர் பேறுபெற்றவர். அவரைத் தம் உடைமைக்கெல்லாம் அதிகாரியாக அவர் அமர்த்துவார் என உண்மையாக உங்களுக்குச் சொல்கிறேன். ஆனால் அதே பணியாள் தன் தலைவர் வரக் காலந்தாழ்த்துவார் எனத் தன் உள்ளத்தில் சொல்லிக் கொண்டு ஆண், பெண் பணியாளர்கள் அனைவரையும் அடிக்கவும் மயக்கமுற உண்ணவும் குடிக்கவும் தொடங்கினான் எனில் அப்பணியாள் எதிர்பாராத நாளில், அறியாத நேரத்தில் அவனுடைய தலைவர் வந்து அவனைக் கொடுமையாகத் தண்டித்து நம்பிக்கைத் துரோகி களுக்கு உரிய இடத்திற்குத் தள்ளுவார். தன் தலைவரின் விருப்பத்தை அறிந்திருந்தும் ஆயத்தமின்றியும் அவர் விருப்பப்படி செயல்படாமலும் இருக்கும் பணியாள் நன்றாய் அடி படுவான். ஆனால் அவர் விருப்பத்தை அறியாமல் அடிவாங்க வேண்டிய முறையில் செயல் படுபவன், அவரது விருப்பத்தை அறியாமல் செயல்படுவதால் சிறிதே அடிபடுவான். மிகுதி யாகக் கொடுக்கப்பட்டவரிடம் மிகுதியாகவே எதிர்பார்க்கப்படும். மிகுதியாக ஒப்படைக்கப் படுபவரிடம் இன்னும் மிகுதியாகக் கேட்கப்படும்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, வீட்டுப் பொறுப்பாளரான கடவுளுக்கு நம்பிக்கைக்குரிய பணியாளர்களாக வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். தம் தலைவர் திரும்பி வந்து தட்டும் போது, உடனே அவருக்குக் கதவைத் திறக்கக் விழிப்புடன் காத்திருக்கும் பணியாளர்கள் பேறு பெற்றவர்கள். விண்ணகத்தில் வாழும் நம் தலைவராகிய இயேசு, மீண்டும் இவ்வுலகிற்கு வரும்போது அவரை வரவேற்க விழிப்புடன் காத்திருப்பவர்களாய் வாழ நாம் அழைக்கப் படுகிறோம். "தலைவர் வரக் காலந்தாழ்த்துவார்" என உள்ளத்தில் சொல்லிக் கொண்டு, உலகு சார்ந்த தீமையான செயல்களில் நாம் ஈடுபட்டால், எதிர்பாராத நேரத்தில் வரும் நம் தலைவ ரால் கொடுமையாகத் தண்டிக்கப்பட்டு நம்பிக்கைத் துரோகிகளுக்குரிய இடத்திற்குத் தள்ளப் படுவோம் என்ற எச்சரிக்கை நமக்குத் தரப்படுகிறது. நம் தலைவர் நமக்குத் தந்த பணியை அர்ப்பண உணர்வுடன் செய்தால், அவர் வந்து நம்மைப் பந்தியில் அமரச் செய்து, நமக்கு பணி விடை செய்வதைக் காண முடியும்.

Friday, August 2, 2013

ஆகஸ்ட் 4, 2013

பொதுக்காலம் 18-ம் ஞாயிறு
லூக்கா 12:13-21

   அக்காலத்தில் கூட்டத்தில் இருந்த ஒருவர் இயேசுவிடம், "போதகரே, சொத்தை என்னோடு பங்கிட்டுக் கொள்ளுமாறு என் சகோதரருக்குச் சொல்லும்'' என்றார். அவர் அந்த ஆளை நோக்கி, "என்னை உங்களுக்கு நடுவராகவோ பாகம் பிரிப்பவராகவோ அமர்த்தியவர் யார்?'' என்று கேட்டார். பின்பு அவர் அவர்களை நோக்கி, "எவ்வகைப் பேராசைக் கும் இடங்கொடாதவாறு எச்சரிக்கையாய் இருங்கள். மிகுதி யான உடைமைகளைக் கொண்டிருப்பதால் ஒருவருக்கு வாழ்வு வந்துவிடாது'' என்றார்.
   அவர்களுக்கு அவர் ஓர் உவமையைச் சொன்னார்: "செல் வனாய் இருந்த ஒருவனுடைய நிலம் நன்றாய் விளைந் தது. அவன், 'நான் என்ன செய்வேன்? என் விளைபொருள்களைச் சேர்த்து வைக்க இடமில் லையே!' என்று எண்ணினான். 'ஒன்று செய்வேன்; என் களஞ்சியங்களை இடித்து இன்னும் பெரிதாகக் கட்டுவேன்; அங்கு என் தானியத்தையும் பொருள்களையும் சேர்த்து வைப்பேன்'. பின்பு, 'என் நெஞ்சமே, உனக்குப் பல்லாண்டுகளுக்கு வேண்டிய பலவகைப் பொருள்கள் வைக்கப்பட்டுள்ளன; நீ ஓய்வெடு; உண்டு குடித்து, மகிழ்ச்சியில் திளைத்திடு' எனச் சொல் வேன் என்று தனக்குள் கூறிக்கொண்டான். ஆனால் கடவுள் அவனிடம், 'அறிவிலியே, இன்றிரவே உன் உயிர் உன்னை விட்டுப் பிரிந்துவிடும். அப்பொழுது நீ சேர்த்து வைத்தவை யாருடையவையாகும்?' என்று கேட்டார். கடவுள் முன்னிலையில் செல்வம் இல்லாதவ ராய்த் தமக்காகவே செல்வம் சேர்ப்பவர் இத்தகையோரே.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, உலகப் பொருட்கள் மீது பற்று வைக்காமல் கடவுள் முன்னிலையில் செல்வம் மிகுந்தோராய் வாழ நமக்கு அழைப்பு விடுக்கிறார். இயேசு தன் பொதுவாழ்வில் பல்வேறு ஆன்மீக, சமயம் சார்ந்த கேள்விகளுக்கு விடை அளிப்பதைக் காண்கிறோம். இயேசுவின் திறமையைக் கண்ட ஒருவர், அவரது சொத்து பிரச்சனையில் தலையிடுமாறு இயேசுவுக்கு அழைப்பு விடுக்கிறார். விண்ணரசைப் பற்றி போதிக்க வந்த இயேசு, மண்ணக சொத்துக்களில் பற்று வைக்க வேண்டாம் என்ற போதனையை வழங்கு கிறார். சேர்த்து வைக்கவும் இடம் இல்லாத அளவுக்கு அதிக விளைச்சலை காண்கிறது ஒரு செல்வனின் நிலம். அவன் அதைக் கொண்டு, பல்லாண்டுகள் மகிழ்ச்சியாக வாழலாம் எனத் திட்டமிடுகிறான். ஆனால் வாழ்க்கை அவன் கையில் இல்லை, கடவுளின் திட்டப்படி அவன் உயிர் பிரியும் நேரம் வந்துவிட்டது என இயேசு கூறுகிறார். எனவே உலக செல்வங்கள் மீது பற்று கொள்ளாமல் நன்மை செய்பவர்களாய் வாழும்போது, கடவுள் முன்னிலையில் செல் வம் உடையவர்களாய் திகழ முடியும்.

Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
லூக்கா 11:1-13

   அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண் டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்க ளுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்க ளிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ் வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன் னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.
   மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவ ருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடி யாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட் டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல் கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெ னில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டு வோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப் பது எத்துணை உறுதி!''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்களுள் ஒருவர், செபிக்க (இறைவனிடம் வேண்ட) கற்றுக் கொடுக்குமாறு கேட்கிறார். உடனே இயேசு, இறைத் தந்தையை நோக்கி வேண்டல் செய்ய சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதைக் காண்கிறோம். செபங்களில் சிறந்த செபமாக இது உள்ளது. இறைப்புகழ்ச்சி, இறையாட்சியை வரவேற்றல், உணவு, மன்னிப்பு, மீட்புக்காக வேண்டல் ஆகியவை இந்த செபத்தின் பாடமாக அமைந்துள்ளன. செபிக்க கற்றுக் கொடுக்கும் இயேசு, அதன் பயனையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்க ளுக்குத் திறக்கப்படும்" என்ற வாழ்க்கை பாடம் இங்கு கற்பிக்கப்படுகிறது. விடாமுயற்சியு டன் செபம் செய்தால் நாம் விரும்பும் நன்மைகளை உறுதியாக பெற்றுக்கொள்வோம் என்பதை இயேசு நமக்கு தெளிவுபடுத்துகிறார். இயேசு விரும்புவது போன்று நாம் தூய ஆவியைக் கேட்டு பெற்றுக்கொண்டால், கடவுளின் திருவுளத்தை இம்மண்ணில் நிறை வேற்றுபவர்களாக வாழ முடியும்.

Friday, July 19, 2013

ஜூலை 21, 2013

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
லூக்கா 10:38-42

   அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒரு வர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக் குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளி டம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியா -வோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது பற்றியப் பாடத்தைக் கற்றுத் தருகிறார். பெத்தானியாவில் உள்ள லாசரின் வீட்டுக்கு இயேசு செல் கிறார். அங்கு லாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும் இருக்கிறார்கள். இயேசுவை வரவேற்றதும், அவருக்கு விருந்து படைக்கும் பணியில் மார்த்தா மும்முரமாக இறங்கு கிறார். மார்த்தாவுக்கு உதவி செய்யாமல், மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரியா மீதான தனது ஆதங்கத்தை, மார்த்தா, இயேசுவிடம் வெளிப்படுத்துகிறார். அனைத்தையும் செய்ய வல்ல ஆண்டவர் அரு கில் இருக்கும்போது, எதைப் பற்றியும் கலைப்படத் தேவையில்லை என்பதை மார்த்தாவுக்கு இயேசு தெளிவுபடுத்துகிறார். மரியாவைப் போன்று இறைவன் முன்னிலையில் அமர்ந்து, அவரது வார்த்தைக்கு செவிகொடுப்பது முக்கியம் என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். ஆண் டவரின் திருவுளத்தை உவப்புடன் நிறைவேற்றும்போது, நமது வாழ்வை கவலையின்றி எதிர் கொள்ள முடியும்.

Friday, July 12, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
லூக்கா 10:25-37

   அக்காலத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக் கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாய்ச் சொன் னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
   அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலே மிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடை களை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத் திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறி ஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, "தேவையில் உதவி செய்பவரே அடுத்திருப்பவர்" என்ற விளக்கத்தைத் தருவதுடன், நாமும் அடுத்திருப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். எரிகோவுக்குப் போகும் வழியில் கள்வர் கையில் அகப்பட்டவரின் கதையைக் கூறும் இயேசு, அதன் நாயகராக யூதர்களால் தாழ்வாக கருதப்பட்ட ஒரு சமாரியரை முன்னிறுத்துகிறார். இறைப்பணி செய்யும் யூத குருவும், லேவியரும் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளவில்லை என்று இயேசு சாடுகிறார். இறையன்பால் மட்டும் ஒருவர் கடவுளின் கட்டளையை நிறைவு செய்தவர் ஆக முடியாது; இறையன்போடு பிறரன்பும் இணையும் பொழுதுதான் கடவுளின் கட்டளைகள் ஒருவரது வாழ்வில் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை இயேசு தெளிவு படுத்துகிறார். உவமையில் வரும் நல்ல சமாரியர், அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டு உதவி செய்ததைக் காண்கிறோம். நாமும் அவ்வாறே தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கூறிய வழியில் அடுத்திருப்பவர்களாய் இருக்கும்போது, நாமும் கடவுளின் கட்டளைகளை நிறைவு செய்கிற நேர்மையாளர்களாய் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, July 5, 2013

ஜூலை 7, 2013

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
லூக்கா 10:1-12,17-20

   அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப் பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகை யால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள் களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன் றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட் டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்பு கிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டி லேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்க ளுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறை யாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 'எங்கள் கால்களில் ஒட்டி யுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறை யாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."
   பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். அதற்கு அவர், "வானத்தி லிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, அவர்களைத் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்புவதைக் காண்கிறோம். ஆண்டவருக்குரிய அறுவடை மிகுதியாக இருந்தும், அதை செய்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார். ஆண்டவரின் பணிக்காக அனுப்பப்பட இருப்பவர்களை, அதற்காக செபிக்கு மாறும் பணிக்கிறார். கடவுளுக்காக அறுவடை பணியை செய்பவர்கள், ஓநாய்களிடையே அனுப்பப்படும் ஆட்டுக் குட்டிகளை போன்று இருப்பதாக இயேசு விளக்குகிறார். கிறிஸ்து வுக்காக உழைப்பவர்கள் பிறருக்கு பயப்படத் தேவையில்லை; தங்கள் உழைப்புக்கேற்ற கூலிக்கு அவர்கள் உரிமை உடையவர்களே; கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு அமை தியை வாக்களிக்கவும், அவரை புறக்கணிப்போருக்கு எதிராக தீர்ப்பளிக்கவும் நம் ஆண்டவர் அதிகாரம் அளித்துள்ளார். எழுபத்திரண்டு சீடர்களும், ஆண்டவரின் பெயரால் நோய்களை குணமாக்கியதையும், பேய்களை ஓட்டியதையும் இயேசுவிடம் பகிர்ந்துகொள்வதை இங்கு காண்கிறோம். நாம் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து வாழும்போது, நம் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறதை குறித்து மகிழ்ச்சியடைய முடியும்.

Friday, June 28, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
லூக்கா 9:51-62

   அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மா னித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
   அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர் கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர் கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய் யவா? இது உமக்கு விருப்பமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
   அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றி வாரும்'' என் றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பின்பற்றுமாறு நம் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே, தன் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த இயேசு, நாமும் இறைவனின் திருவுளத்தை நிறை வேற்ற அழைக்கிறார். ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரியரின் ஊரை அழித்து விட வேண்டுமென்று, யாக்கோபும் யோவானும் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் கடவுளின் விருப்பம் 'அழிவல்ல மனமாற்றமே' என்பதை இயேசு உணர்த்துகிறார். இவ்வுலகில் தலை சாய்க்கக்கூட இடம் இல்லாதவராக வாழ்நாட்களை செலவிட்ட இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால், உலகப் பொருட்களையும் உறவுகளையும் ஒன்றுமில்லாததாக கருதும் மனநிலை நம்மில் உருவாக வேண்டும். இயேசு வழங்கும் விடுதலை வாழ்வில் பங்கேற்க விரும்பினால், திரும்பி பார்க்காமல் அவரைப் பின் தொடர வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலுக்கு பணிந்து இயேசுவின் சீடர்களாக வாழும் போது, நாம் இறையரசை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, June 21, 2013

ஜூன் 23, 2013

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

லூக்கா 9:18-24

   அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கி றார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கி றீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோ ரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப் படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவ ரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையாம் கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தவராய் பேசுவதைக் காண்கிறோம். தனது மரணத்துக்கு முன், தன்னை சீடர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை சோதித்தறிகிறார். அவர்களைப் பற்றித் தனக்கு தெரியாது என்பதற்காக அன்று, தன்னைப் பற்றிய விழிப்பு ணர்வை சீடர்கள் பெறுவதற்காகவே இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார். இவ்வளவு காலம் தன்னோடு இருந்தும், தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் வாழ்ந்திருப்பதை சீடர் கள் புரிந்துகொள்ளச் செய்கிறார். இயேசுவோடு இருந்தால் அற்புதங்களையும், அதிசயங் களையும் அனுபவிக்கலாம் என்று அலைந்து திரிந்த சீடர்களுக்கு தன் வாழ்வின் உண்மை நோக்கத்தை விளக்குகிறார். "மானிட மகன் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப் படவும் வேண்டும்." நம் ஆண்டவரைப் பின்பற்ற விரும்பும் எவரும் சிலுவையை தூக்கிக் கொண்டே அவரைப் பின்பற்ற முடியும். இயேசுவின் பொருட்டு உயிரை இழக்க முன்வரும் போது, அவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.