Friday, June 28, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
லூக்கா 9:51-62

   அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மா னித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
   அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர் கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர் கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய் யவா? இது உமக்கு விருப்பமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
   அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றி வாரும்'' என் றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பின்பற்றுமாறு நம் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே, தன் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த இயேசு, நாமும் இறைவனின் திருவுளத்தை நிறை வேற்ற அழைக்கிறார். ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரியரின் ஊரை அழித்து விட வேண்டுமென்று, யாக்கோபும் யோவானும் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் கடவுளின் விருப்பம் 'அழிவல்ல மனமாற்றமே' என்பதை இயேசு உணர்த்துகிறார். இவ்வுலகில் தலை சாய்க்கக்கூட இடம் இல்லாதவராக வாழ்நாட்களை செலவிட்ட இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால், உலகப் பொருட்களையும் உறவுகளையும் ஒன்றுமில்லாததாக கருதும் மனநிலை நம்மில் உருவாக வேண்டும். இயேசு வழங்கும் விடுதலை வாழ்வில் பங்கேற்க விரும்பினால், திரும்பி பார்க்காமல் அவரைப் பின் தொடர வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலுக்கு பணிந்து இயேசுவின் சீடர்களாக வாழும் போது, நாம் இறையரசை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.