Friday, October 4, 2013

அக்டோபர் 6, 2013

பொதுக்காலம் 27-ம் ஞாயிறு
லூக்கா 17:5-10

   அக்காலத்தில் திருத்தூதர்கள் ஆண்டவரிடம், "எங்கள் நம்பிக்கையை மிகுதியாக்கும்'' என்று கேட்டார்கள். அதற்கு ஆண்டவர் கூறியது: "கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, 'நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்' எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும். உங்கள் பணியா ளர் உழுதுவிட்டோ மந்தையை மேய்த்துவிட்டோ வயல் வெளியிலிருந்து வரும்போது அவரிடம், 'நீர் உடனே வந்து உணவருந்த அமரும்' என்று உங்களில் எவராவது சொல் வாரா? மாறாக, 'எனக்கு உணவு ஏற்பாடு செய்யும்; உம் இடையை வரிந்துகட்டிக் கொண்டு, நான் உண்டு குடிக்கும் வரை எனக்குப் பணிவிடை செய்யும்; அதன் பிறகு நீர் உண்டு குடிக்கலாம்' என்று சொல்வா ரல்லவா? தாம் பணித்ததைச் செய்ததற்காக அவர் தம் பணியாளருக்கு நன்றி கூறுவாரோ? அது போலவே, நீங்களும் உங்களுக்குப் பணிக்கப்பட்ட யாவற்றையும் செய்தபின், 'நாங்கள் பயனற்ற பணியாளர்கள்; எங்கள் கடமையைத்தான் செய்தோம்' எனச் சொல்லுங்கள்."

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுள் மீது கொள்ளும் நம்பிக்கையால் நாம் எவ்வளவு நன்மைகளைப் பெற முடியும் என்று கற்றுத் தருகிறார். கடுகளவு நம்பிக்கை இருந்தால் நிலத் தில் நிற்கும் மரத்தை கடலில் வேரூன்றி நிற்கச் செய்ய முடியும் என்று இயேசு கூறுகிறார். நமது நம்பிக்கை மூலம் நாம் நற்செய்திக்கு சான்று பகர அழைக்கப்படுகிறோம். நற்செய்தி பணி என்பது கடவுளின் பரிசையும், பணத்தையும் பெறுவதற்காக செய்யப்படும் பணியல்ல, நமது கடமை என்று இயேசு கற்பிக்கிறார். கடவுளுக்கு முன்பு நாம் பயனற்ற பணியாளர்கள் என்பதை உணர ஆண்டவர் நம்மை அழைக்கிறார். பலனை எதிர்பாராமல் கடவுளின் நம்பிக் கைக்குரிய பணியாளர்களாக நாம் செயல்படும்போது, கடுகளவு நம்பிக்கை மூலம் மிகப் பெரிய அற்புதங்களைக் காண முடியும்.