Friday, July 27, 2012

ஜூலை 29, 2012

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
யோவான் 6:1-15

   அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திர ளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர் கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந் திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார்.
   அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந் திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்க போகிறார் கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஐந்தா யிரம் பேருக்கு உணவளிக்கிறார். இங்கு இயேசுவின் சீடர்களில் நிலவும் இரண்டு விதமான மனநிலைகளைப் பார்க்கிறோம். இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் யாருக் கும் பசியாற்ற முடியாது என்று பிலிப்பு நினைக்கிறார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசுவால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அந்திரேயா நம்பு கிறார். பிலிப்பின் மனித சிந்தனை அல்ல, அந்திரேயாவின் இறை நம்பிக்கையே வெற்றி பெற்றது. நாமும் மனித சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு முழு மனதோடு ஆண்டவரை நம்பும் பொழுது, நமது வாழ்வில் அற்புதங்களைக் காண முடியும்.

Friday, July 20, 2012

ஜூலை 22, 2012

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
மாற்கு 6:30-34

   அக்காலத்தில் திருத்தூதர்கள் இயேசுவிடம் வந்து கூடித் தாங்கள் செய்தவை, கற்பித்தவையெல்லாம் அவருக்குத் தெரிவித்தார்கள். அவர் அவர்களிடம், "நீங்கள் பாலை நிலத் திலுள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்று சற்று ஓய்வெடுங்கள்'' என்றார். ஏனெனில் பலர் வருவதும் போவ துமாய் இருந்ததால், உண்பதற்குக்கூட அவர்களுக்கு நேரம் கிடைக்கவில்லை.
   அவ்வாறே அவர்கள் படகேறிப் பாலை நிலத்தில் உள்ள தனிமையான ஓர் இடத்திற்குச் சென்றார்கள். அவர்கள் புறப்பட்டுப் போவதை மக்கள் பார்த்தார்கள். பலர் அவர் களை இன்னாரென்று தெரிந்துகொண்டு, எல்லா நகர்களி லிருந்தும் கால்நடையாகவே கூட்டமாய் ஓடி, அவர்களுக்கு முன் அங்கு வந்து சேர்ந்தனர். அவர் கரையில் இறங்கியபோது பெருந்திரளான மக்களைக் கண்டார். அவர்கள் ஆயரில்லா ஆடுகளைப் போல் இருந்ததால் அவர்கள்மீது பரிவு கொண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தனது சீடர்களை ஓய்வெடுக்க சொல்கிறார். உழைப்ப வர்கள் அனைவருக்கும் ஒய்வு தேவை. கிறிஸ்து அனுப்பிய பணியாளர்கள், தங்கள் பணிக்கு பின் ஒய்வெடுக்கின்றனர். பணியாளர்கள் ஓய்வில் இருந்தாலும், ஆண்டவர் இயேசு ஓய் வெடுக்கவில்லை. அவர் மக்கள் ஆயரில்லா ஆடுகளைப் போன்று இருப்பதைக் கண்டு, அவர்களுக்குப் பலவற்றைக் கற்பித்தார். மக்களை நல்வழிப்படுத்த ஆண்டவர் எப்பொழுதும் செயலாற்றிக்கொண்டே இருக்கிறார். ஆயர்கள் மந்தையை சிதறடிக்கும்போது, அவர் புதிய ஆயர்களை அனுப்புவதுடன் தாமும் இரக்கமுள்ள ஆயராக செயல்படுகிறார். இறைவன் நமக்கு தந்துள்ள ஆயர்கள் (திருப்பணியாளர்கள்) வழியாக, அவர் நம்மை வழிநடத்துவார். அவர்களை ஏற்று ஆண்டவரின் அரவணைப்பில் வாழும்போது, நாம் அவருக்கு உண்மை யான சாட்சிகளாக திகழ முடியும்.

Friday, July 13, 2012

ஜூலை 15, 2012

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
மாற்கு 6:7-13

   அக்காலத்தில் இயேசு பன்னிருவரையும் தம்மிடம் வரவ ழைத்து, அவர்களை இருவர் இருவராக அனுப்பத் தொடங் கினார். அவர்களுக்கு தீய ஆவிகள்மீது அதிகாரமும் அளித் தார். மேலும், "பயணத்திற்குக் கைத்தடி தவிர உணவு, பை, இடைக்கச்சையில் செப்புக் காசு முதலிய வேறு எதையும் நீங்கள் எடுத்துக்கொண்டு போக வேண்டாம். ஆனால் மிதியடி போட்டுக் கொள்ளலாம்; அணிந்திருக்கும் அங்கி ஒன்றே போதும்'' என்று அவர்களுக்குக் கட்டளையிட்டார். மேலும் அவர், "நீங்கள் எங்கேயாவது ஒரு வீட்டுக்குள் சென்றால், அங்கிருந்து புறப்படும்வரை அவ்வீட்டிலேயே தங்கியிருங்கள். உங்களை எந்த ஊராவது ஏற்றுக்கொள்ளா மலோ உங்களுக்குச் செவிசாய்க்காமலோ போனால் அங்கி ருந்து வெளியேறும்பொழுது, உங்கள் கால்களில் படிந்துள்ள தூசியை உதறிவிடுங்கள். இதுவே அவர்களுக்கு எதிரான சான்றாகும்'' என்று அவர்களுக்குக் கூறினார். அப்படியே அவர்கள் புறப்பட்டுச் சென்று மக்கள் மனம் மாற வேண்டுமென்று பறைசாற்றினார்கள்; பல பேய்களை ஓட்டினார்கள்; உடல் நலமற்றோர் பலரை எண்ணெய் பூசிக் குணப்படுத்தினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையரசைப் பற்றிய நற்செய்தியை அறிவிக்க தனது சீடர்களை இருவர் இருவராக அனுப்புகிறார். அவர்களுக்கு நோய்களை குணமாக்கவும், பேய்களை ஓட்டவும் அதிகாரம் அளித்து, ஒருவருக்கு துணையாக மற்றொருவரை அனுப்பு கிறார். சீடர்கள் இயேசுவில் நம்பிக்கை கொண்டவர்களாக பல வல்ல செயல்களை செய் கிறார்கள். கடவுளால் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவரது பணியை செய்ய அழைக்கப்பட்டுள்ள நாம் ஒவ்வொருவரும் இயேசுவில் நம்பிக்கை கொண்டு வாழும்போது நாமும் இயேசுவுக்கு சான்று பகர்பவர்களாக வாழ்வோம். கிறிஸ்தவர்களாகிய நாம் ஒருவருக்கொருவர் உறு துணையாக செயல்படும்போது, மற்றவர்கள் நடுவில் பல அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

Friday, July 6, 2012

ஜூலை 8, 2012

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
மாற்கு 6:1-6

   அக்காலத்தில் இயேசு தமது சொந்த ஊருக்கு வந்தார். அவருடைய சீடரும் அவரைப் பின்தொடர்ந்தனர். ஓய்வு நாள் வந்தபோது அவர் தொழுகைக்கூடத்தில் கற்பிக்கத் தொடங்கினார். அதைக் கேட்ட பலர் வியப்பில் ஆழ்ந்தனர். அவர்கள், "இவருக்கு இவை யெல்லாம் எங்கிருந்து வந் தன? என்னே இவருக்கு அருளப்பட்டுள்ள ஞானம்! என்னே இவருடைய கைகளால் ஆகும் வல்ல செயல்கள்! இவர் தச்சர் அல்லவா! மரியாவின் மகன்தானே! யாக்கோபு, யோசே, யூதா, சீமோன் ஆகியோர் இவருடைய சகோதரர் அல்லவா? இவர் சகோதரிகள் இங்கு நம்மோடு இருக்கி றார்கள் அல்லவா?'' என்றார்கள். இவ்வாறு அவரை ஏற்றுக் கொள்ள அவர்கள் தயங்கினார்கள். இயேசு அவர்களிடம், "சொந்த ஊரிலும் சுற்றத்திலும் தம் வீட்டிலும் தவிர மற்றெங்கும் இறைவாக்கினர் மதிப்புப் பெறுவர்'' என்றார். அங்கே உடல் நலமற்றோர் சிலர்மேல் கைகளை வைத்துக் குணமாக் கியதைத் தவிர வேறு வல்ல செயல் எதையும் அவரால் செய்ய இயலவில்லை. அவர்களது நம்பிக்கையின்மையைக் கண்டு அவர் வியப்புற்றார். அவர் சுற்றிலும் உள்ள ஊர்களுக்குச் சென்று கற்பித்து வந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சொந்த ஊர் மக்கள் அவரை ஏற்றுக்கொள்ள தயங்குவதைக் காண்கிறோம். அவர்களது நம்பிக்கையின்மை இயேசுவை புதுமைகள் செய்ய விடாமல் தடுக்கிறது. நாம் பிறர் இருக்கும் நிலையிலேயே அவர்களை ஏற்றுக்கொள்ளவும், நம்பிக்கையால் புதுமைகளைக் காணவும் அழைக்கப்படுகிறோம். ஏற்றுக்கொள்ளுதல், நம் பிக்கை ஆகிய இரு மதிப்பீடுகளை இன்றைய நற்செய்தி நமக்கு போதிக்கிறது. நம்பிக்கை யோடு நாம் கடவுளையும் பிறரையும் ஏற்றுக்கொள்ளும்போது, நமது வாழ்வில் புதுமை களைக் காண முடியும்.

Sunday, July 1, 2012

ஜூலை 1, 2012

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
மாற்கு 5:21-43

   அக்காலத்தில் இயேசு படகேறி, கடலைக் கடந்து மீண்டும் மறு கரையை அடைந்ததும் பெருந்திரளான மக்கள் அவரி டம் வந்து கூடினர். அவர் கடற்கரையில் இருந்தார். தொழு கைக்கூடத் தலைவர்களுள் ஒருவரான யாயிர் என்பவர் வந்து, அவரைக் கண்டு அவரது காலில் விழுந்து, "என் மகள் சாகும் தறுவாயில் இருக்கிறாள். நீர் வந்து அவள்மீது உம் கைகளை வையும். அப்போது அவள் நலம் பெற்றுப் பிழைத்துக் கொள்வாள்'' என்று அவரை வருந்தி வேண்டி னார். இயேசுவும் அவருடன் சென்றார். பெருந்திரளான மக்கள் அவரை நெருக்கிக்கொண்டே பின்தொடர்ந்தனர்.
   அப்போது பன்னிரு ஆண்டுகளாய் இரத் தப்போக்கினால் வருந்திய பெண் ஒருவர் அங்கு இருந்தார். அவர் மருத்துவர் பலரிடம் தமக்கு உள்ளதெல்லாம் செலவழித்தும் ஒரு பயனும் அடையாமல் மிகவும் துன்பப்பட்டவர். அவர் நிலைமை வரவர மிகவும் கேடுற்றது. அவர் இயேசுவைப் பற்றிக் கேள்விப்பட்டு, மக்கள் கூட்டத்துக்கிடையில் அவருக்குப் பின்னால் வந்து, அவரது மேலுடையைத் தொட்டார். ஏனெனில், "நான் அவருடைய ஆடையைத் தொட்டாலே நலம் பெறுவேன்'' என்று அப்பெண் எண்ணிக்கொண்டார். தொட்ட உடனே அவருடைய இரத்தப்போக்கு நின்றுபோயிற்று. அவ ரும் தம் நோய் நீங்கி, நலம் பெற்றதைத் தம் உடலில் உணர்ந்தார். உடனே இயேசு தம்மிடமிருந்து வல்லமை வெளியேறியதைத் தம்முள் உணர்ந்து மக்கள் கூட்டத்தைத் திரும்பிப் பார்த்து, "என் மேலுடையைத் தொட்டவர் யார்?'' என்று கேட்டார். அதற்கு அவருடைய சீடர்கள் அவரிடம், "இம்மக்கள் கூட்டம் உம்மைச் சூழ்ந்து நெருக்குவதைக் கண்டும், 'என்னைத் தொட்டவர் யார்?' என்கிறீரே!'' என்றார்கள். ஆனால் அவர் தம் மேலுடையைத் தொட்டவரைக் காணும்படி சுற்றிலும் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அப்பெண் தமக்கு நேர்ந்ததை அறிந்தவராய், அஞ்சி நடுங்கிக்கொண்டு, அவர்முன் வந்து விழுந்து, நிகழ்ந்தது அனைத்தையும் அவரிடம் சொன்னார். இயேசு அவரிடம், "மகளே, உனது நம் பிக்கை உன்னைக் குணமாக்கிற்று. அமைதியுடன் போ. நீ நோய் நீங்கி நலமாயிரு'' என்றார்.
   அவர் தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தபோது, தொழுகைக் கூடத் தலைவருடைய வீட்டிலி ருந்து ஆள்கள் வந்து, அவரிடம், "உம்முடைய மகள் இறந்துவிட்டாள். போதகரை ஏன் இன்னும் தொந்தரவு செய்கிறீர்?'' என்றார்கள். அவர்கள் சொன்னது இயேசுவின் காதில் விழுந்ததும், அவர் தொழுகைக்கூடத் தலைவரிடம், "அஞ்சாதீர், நம்பிக்கையை மட்டும் விடாதீர்'' என்று கூறினார். அவர் பேதுரு, யாக்கோபு, யாக்கோபின் சகோதரரான யோவான் ஆகியோரைத் தவிர வேறொருவரையும் தம்முடன் வரவிடவில்லை. அவர்கள் தொழுகைக் கூடத் தலைவரின் வீட்டிற்குச் சென்றார்கள். அங்கே அமளியையும் மக்கள் அழுது ஓல மிட்டுப் புலம்புவதையும் இயேசு கண்டார். அவர் உள்ளே சென்று, "ஏன் இந்த அமளி? ஏன் இந்த அழுகை? சிறுமி இறக்கவில்லை, உறங்குகிறாள்'' என்றார். அவர்கள் அவரைப் பார்த்து நகைத்தார்கள். ஆனால் அவர் அனைவரையும் வெளியேற்றிய பின், சிறுமியின் தந்தை யையும் தாயையும் தம்முடன் இருந்தவர்களையும் கூட்டிக்கொண்டு, அச்சிறுமி இருந்த இடத்திற்குச் சென்றார். சிறுமியின் கையைப் பிடித்து அவளிடம், "தலித்தா கூம்'' என்றார். அதற்கு, 'சிறுமி, உனக்குச் சொல்லுகிறேன், எழுந்திடு' என்பது பொருள். உடனே அச்சிறுமி எழுந்து நடந்தாள். அவள் பன்னிரண்டு வயது ஆனவள். மக்கள் பெரிதும் மலைத்துப்போய் மெய்ம்மறந்து நின்றார்கள். "இதை யாருக்கும் தெரிவிக்கக் கூடாது'' என்று அவர் அவர்க ளுக்குக் கண்டிப்பாய்க் கட்டளையிட்டார்; அவளுக்கு உணவு கொடுக்கவும் சொன்னார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இரத்தபோக்குடைய ஒரு பெண் தனது நம்பிக்கையால் குணம் பெறுவதையும், இறந்துப்போன ஒரு சிறுமி அவளது தந்தையின் நம்பிக்கையால் உயிர்த் தெழுந்ததையும் காண்கிறோம். இங்கே நலமளிக்கும் பணியை செய்பவர் இறைமகன் இயேசுவே என்றாலும், அதற்கு காரணம் தொடர்புடையவர்களின் நம்பிக்கையே என்பது தெளிவு. நாமும் முழு நம்பிக்கையோடு கடவுளை நாடிச் செல்லும்போது, நமது நம்பிக்கை நம்மை நலமாக்கும். நமது நம்பிக்கை பிறரையும் நலமாக்கும் போது, நாம் இயேசுவின் சிறந்த சாட்சிகளாக வாழ முடியும்.