Friday, October 11, 2013

அக்டோபர் 13, 2013

பொதுக்காலம் 28-ம் ஞாயிறு
லூக்கா 17:11-19

   அக்காலத்தில் இயேசு எருசலேமுக்குப் போய்க்கொண் டிருந்தபோது கலிலேய, சமாரியப் பகுதிகள் வழியாகச் சென்றார். ஓர் ஊருக்குள் வந்தபொழுது, பத்துத் தொழு நோயாளர்கள் அவருக்கு எதிர்கொண்டு வந்து, தூரத்தில் நின்றுகொண்டே, "ஐயா! இயேசுவே, எங்களுக்கு இரங்கும்'' என்று உரக்கக் குரலெழுப்பி வேண்டினார்கள். அவர் அவர்க ளைப் பார்த்து, "நீங்கள் போய் உங்களைக் குருக்களிடம் காண்பியுங்கள்'' என்றார்.
    அவ்வாறே அவர்கள் புறப்பட்டுப் போகும் போது அவர்கள் நோய் நீங்கிற்று. அவர்களுள் ஒருவர் தம் பிணி தீர்ந்தி ருப்பதைக் கண்டு உரத்த குரலில் கடவுளைப் போற்றிப் புகழ்ந்துகொண்டே இயேசுவிடம் திரும்பி வந்தார்; அவருடைய காலில் முகங்குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார். அவரோ ஒரு சமாரியர். இயேசு அவரைப் பார்த்து, "பத்துப் பேர்களின் நோயும் நீங்கவில்லையா? மற்ற ஒன்பது பேர் எங்கே? கடவுளைப் போற்றிப் புகழ அன்னியராகிய உம்மைத் தவிர வேறு எவரும் திரும்பிவரக் காணோமே!'' என்றார். பின்பு அவரிடம், "எழுந்து செல்லும், உமது நம்பிக்கை உமக்கு நலமளித்தது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, சமூகத்தால் ஒதுக்கப்பட்ட பத்து தொழுநோயாளர்களை குணமாக்குகிறார். சமாரிய எல்லையில் தங்கியிருந்த இந்த தொழுநோயாளர்கள், அவ்வழி யாக பயணம் செய்த இயேசுவைக் கண்டு உதவி கோருகிறார்கள். அவர்களது நம்பிக்கையை கண்ட இயேசு, பத்து பேரின் தொழுநோயையும் குணப்படுத்துகிறார். சமூகத்தில் நுழையச் சென்ற வழியில் தொழுநோயாளர்கள் குணம் பெற்றார்கள். தொழுநோயாளர்களில் ஒன்பது பேர் யூதர்கள். அவர்கள் குருக்களிடம் தங்களைக் காட்டி சமூகத்தில் மீண்டும் இணைவதில் மட்டுமே அதிக ஆர்வம் காட்டினார்கள். ஆனால் சமாரியரான இறுதி நபரோ, தான் குணமாக காரணமான இயேசுவைக் காணத் திரும்பிச் செல்கிறார். அவர் இயேசுவின் காலில் முகங் குப்புற விழுந்து அவருக்கு நன்றி செலுத்தினார் என நற்செய்தி கூறுகிறது. நாம் கடவுளின் இரக்கத்தையும், குணமளிக்கும் அன்பையும் முழுமையாக உணர்ந்து கொள்ளும்போது அவ ருக்கு நன்றியுள்ளவர்களாய் திகழ முடியும்.