Friday, February 22, 2013

பிப்ரவரி 24, 2013

தவக்காலம் 2-ம் ஞாயிறு
லூக்கா 9:28-36
   அக்காலத்தில் இயேசு பேதுருவையும் யோவானையும் யாக்கோபையும் கூட்டிக் கொண்டு இறைவனிடம் வேண்டு வதற்காக ஒரு மலைமீது ஏறினார். அவர் வேண்டிக்கொண் டிருந்தபோது அவரது முகத்தோற்றம் மாறியது; அவரு டைய ஆடையும் வெண்மையாய் மின்னியது. மோசே, எலியா என்னும் இருவர் அவரோடு பேசிக்கொண்டிருந்த னர். மாட்சியுடன் தோன்றிய அவர்கள் எருசலேமில் நிறை வேற இருந்த அவருடைய இறப்பைப்பற்றிப் பேசிக்கொண் டிருந்தார்கள். பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்க கலக்கமாய் இருந்தார்கள். அவர்கள் விழித்தபோது மாட்சி யோடு இலங்கிய அவரையும் அவரோடு நின்ற இருவரையும் கண்டார்கள்.
   அவ்விருவரும் அவரைவிட்டுப் பிரிந்து சென்றபோது, பேதுரு இயேசுவை நோக்கி, "ஆண் டவரே, நாம் இங்கேயே இருப்பது நல்லது. உமக்கு ஒன்றும் மோசேக்கு ஒன்றும் எலியாவுக்கு ஒன்றுமாக மூன்று கூடாரங்களை அமைப்போம்'' என்று தாம் சொல்வது இன்னதென்று தெரியாமலே சொன்னார். இவற்றை அவர் சொல்லிக்கொண்டிருக்கும் போது ஒரு மேகம் வந்து அவர்கள்மேல் நிழலிட்டது. அம்மேகம் அவர்களைச் சூழ்ந்தபோது அவர்கள் அஞ்சினார் கள். அந்த மேகத்தினின்று, "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவ ருக்குச் செவிசாயுங்கள்'' என்று ஒரு குரல் ஒலித்தது. அந்தக் குரல் கேட்டபொழுது இயேசு மட்டும் இருந்தார். தாங்கள் கண்டவற்றில் எதையும் அவர்கள் அந்நாள்களில் யாருக்கும் சொல்லாமல் அமைதி காத்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி இயேசு உருமாற்றம் அடைந்த நிகழ்வை நமக்கு எடுத்துரைக்கிறது. இறைமகன் இயேசுவின் உருமாற்றம் அவரது மாட்சியை வெளிப்படுத்தினாலும், இக்காட்சி யின் பின்னணியில் அவரது சிலுவை பாடுகளின் மறைபொருளை காண முடிகிறது. இயேசு பேதுரு, யோவான், யாக்கோபு ஆகியோரோடு ஒரு மலைமீது வேண்டிக்கொண்டிருந்தபோது, அவரது முகத்தோற்றம் மாறியதாக நற்செய்தி கூறுகிறது. அப்போது, அங்கு தோன்றிய மோசேயும், எலியாவும், எருசலேமில் நிறைவேற இருந்த இயேசுவின் இறப்பைப் பற்றிப் பேசிக்கொண்டிருந்தார்கள். இங்கே, இயேசுவின் வழியாக தந்தை கடவுள் திட்டமிட்டிருந்த மீட்புத் திட்டம் நம் கண் முன் கொண்டு வரப்படுகிறது. அந்நேரத்தில், பேதுருவும் அவரோடு இருந்தவர்களும் தூக்கக் கலக்கமாய், அதாவது இயேசுவின் சிலுவை மரணத்தைப் பற்றி புரிந்து கொள்ளாதவர்களாய் இருந்தார்கள். எனவேதான் பேதுரு, மாட்சியின் காட்சியை நிரந் தரமாக்க விரும்பி அங்கு கூடாரங்களை அமைக்கும் திட்டத்தை வெளியிடுகிறார். அந்த வேளையில், இறைத்தந்தையின் குரலை சீடர்கள் கேட்கிறார்கள்: "இவரே என் மைந்தர்; நான் தேர்ந்து கொண்டவர் இவரே. இவருக்குச் செவிசாயுங்கள்.'' நமது விருப்பத்திற்கு ஏற்ப செயல் படுவதில் அல்ல, இறைவனின் திருவுளத்தை நிறைவேற்றுவதிலேயே நிறைவு இருக்கிறது என்பதை உணரும்போது, நாம் கிறிஸ்துவுக்கு உரியவர்களாய் வாழ முடியும்.

Friday, February 15, 2013

பிப்ரவரி 17, 2013

தவக்காலம் முதல் ஞாயிறு
லூக்கா 4:1-13
   அக்காலத்தில் இயேசு தூய ஆவியால் ஆட்கொள்ளப் பட்டு யோர்தான் ஆற்றைவிட்டுத் திரும்பினார். பின்னர் அவர் அதே ஆவியால் பாலைநிலத்திற்கு அழைத்துச் செல் லப்பட்டார். அவர் நாற்பது நாள் அலகையினால் சோதிக்கப் பட்டார். அந்நாள்களில் அவர் ஒன்றும் சாப்பிடவில்லை. அதன்பின் அவர் பசியுற்றார்.
   அப்பொழுது அலகை அவரிடம், "நீர் இறைமகன் என்றால் இந்தக் கல் அப்பமாகும்படி கட்டளையிடும்'' என்றது. அதனி டம் இயேசு மறுமொழியாக, "'மனிதர் அப்பத்தினால் மட் டும் வாழ்வதில்லை' என மறைநூலில் எழுதியுள்ளதே'' என் றார். பின்பு அலகை அவரை அழைத்துச் சென்று உலகத் தின் அரசுகள் அனைத்தையும் ஒரு நொடிப் பொழுதில் அவருக்குக் காட்டி, அவரிடம், "இவற் றின்மேல் முழு அதிகாரத்தையும் இவற்றின் மேன்மையையும் உமக்குக் கொடுப்பேன். இவை யாவும் என்னிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றன; நான் விரும்பியவருக்கு இவற்றைக் கொடுப்பேன். நீர் என்னை வணங்கினால் அனைத்தும் உம்முடையவையாகும்'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரை வணங்கி அவர் ஒருவ ருக்கே பணி செய்வாயாக' என்று மறைநூலில் எழுதியுள்ளது'' என்றார். பின்னர் அது அவரை எருசலேமுக்கு அழைத்துச் சென்று கோவிலின் உயர்ந்த பகுதியில் அவரை நிறுத்தி, "நீர் இறைமகன் என்றால் இங்கிருந்து கீழே குதியும்; 'உம்மைப் பாதுகாக்கும்படி கடவுள் தம் தூதருக்கு உம்மைக் குறித்துக் கட்டளையிடுவார்' என்றும் 'உமது கால் கல்லில் மோதாதபடி அவர்கள் தங்கள் கைகளால் உம்மைத் தாங்கிக்கொள்வார்கள்' என்றும் மறைநூலில் எழுதி யுள்ளது'' என்றது. இயேசு அதனிடம் மறுமொழியாக, "'உன் கடவுளாகிய ஆண்டவரைச் சோதிக்க வேண்டாம்' என்றும் சொல்லியுள்ளதே'' என்றார். அலகை சோதனைகள் அனைத் தையும் முடித்த பின்பு, ஏற்ற காலம் வரும்வரை அவரைவிட்டு அகன்றது.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, அலகையின் சோதனையை எதிர்கொள்கிறார். மனிதராக தோன்றிய இறைமகன் இயேசு, பாவம் தவிர மற்ற அனைத்திலும் நம்மைப் போன்று வாழ்ந் தார். பாவ சோதனைகளை நாம் எவ்வாறு வெற்றி கொள்வது என்பதை உணர்த்தவே, அவர் அலகையின் சோதனைக்கு தன்னை உட்படுத்தினார். மானிடராகிய நாம் சொந்த தேவை களை நிறைவு செய்வதிலும், பதவி, பட்டங்களைப் பெறுவதிலும் மேற்கொள்ளும் முயற்சிக ளால் சோதனைக்கு உள்ளாகிறோம். அலகை இயேசுவுக்கும் இத்தகைய சோதனைகளை கொடுக்கிறது. இயேசு பசியாய் இருந்தும், கல்லை அப்பமாய் மாற்ற வல்லமை உள்ளவராய் இருந்தும் தந்தையாம் கடவுளின் மேல் முழு நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார். உலகத் தின் அரசுகள் அனைத்தும் கிடைக்கும் என்ற நிலையிலும், தீமையின் வடிவமான அலகைக்கு அடிபணிய மறுக்கிறார். இறுதியாக, நாம் எந்த விதத்திலும் கடவுளை சோதிக்கக்கூடாது என்று கற்பிக்கிறார். நமது தேவைகளில் கடவுளை முழுமையாக சார்ந்து, அவரில் நம்பிக்கை வைக்கும்போது, இயேசுவைப் போன்று நாமும் அனைத்து சோதனைகளிலும் வெற்றி பெற முடியும்.

Friday, February 8, 2013

பிப்ரவரி 10, 2013

பொதுக்காலம் 5-ம் ஞாயிறு
லூக்கா 5:1-11
   ஒரு நாள் இயேசு கெனசரேத்து ஏரிக்கரையில் நின்று கொண்டிருந்தார். திரளான மக்கள் இறைவார்த்தையைக் கேட்பதற்கு அவரை நெருக்கிக்கொண்டிருந்தனர். அப்போது ஏரிக்கரையில் இரண்டு படகுகள் நிற்கக் கண்டார். மீனவர் படகை விட்டு இறங்கி, வலைகளை அலசிக் கொண்டிருந்த னர். அப்படகுகளுள் ஒன்று சீமோனுடையது. அதில் இயேசு ஏறினார். அவர் கரையிலிருந்து அதை சற்றே தள்ளும்படி அவரிடம் கேட்டுக்கொண்டு படகில் அமர்ந்தவாறே மக்கள் கூட்டத்துக்குக் கற்பித்தார்.
   அவர் பேசி முடித்த பின்பு சீமோனை நோக்கி, "ஆழத் திற்கு தள்ளிக் கொண்டுபோய், மீன் பிடிக்க உங்கள் வலைகளைப் போடுங்கள்'' என்றார். சீமோன் மறுமொழியாக, "ஐயா, இரவு முழுவதும் நாங்கள் பாடுபட்டு உழைத்தும் ஒன்றும் கிடைக்கவில்லை; ஆயினும் உமது சொற்படியே வலைகளைப் போடுகிறேன்'' என்றார். அப்படியே அவர்கள் செய்து பெருந்திரளான மீன்களைப் பிடித்தார்கள். வலைகள் கிழியத் தொடங்கவே, மற்றப் படகிலிருந்த தங்கள் கூட்டாளிகளுக்குச் சைகை காட்டித் துணைக்கு வருமாறு அழைத்தார்கள். அவர்களும் வந்து இரு படகுகளையும் மீன்களால் நிரப்பினார்கள். அவை மூழ்கும் நிலையில் இருந்தன. இதைக் கண்ட சீமோன் பேதுரு, இயேசுவின் கால் களில் விழுந்து, "ஆண்டவரே, நான் பாவி, நீர் என்னை விட்டுப் போய்விடும்'' என்றார். அவரும் அவரோடு இருந்த அனைவரும் மிகுதி யான மீன்பாட்டைக் கண்டு திகைப்புற்றனர். சீமோனுடைய பங்காளிகளான செபதேயுவின் மக்கள் யாக்கோபும் யோவானும் அவ்வாறே திகைத்தார்கள். இயேசு சீமோனை நோக்கி, "அஞ்சாதே; இது முதல் நீ மனிதரைப் பிடிப்பவன் ஆவாய்'' என்று சொன்னார். அவர்கள் தங்கள் படகுகளைக் கரையில் கொண்டுபோய்ச் சேர்த்த பின் அனைத்தையும் விட்டுவிட்டு அவரைப் பின்பற்றினார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, இயேசுவின் வார்த்தைகளை கேட்பதற்கு திரளான மக்கள் ஆர்வம் காட்டியதைப் பற்றி பேசுகிறது. இயேசுவும் மக்கள் கூட்டத்தின் ஆவலை நிறைவேற்றும் வகையில் அவர்களுக்கு கற்பிக்கிறார். இயேசு தனது போதனைகளை வழங்க தேர்ந்தெடுத்த மேடை சீமோன் பேதுருவின் படகு. ஆண்டவரின் செயல்பாடுகள் பொருள் பொதிந்தவை என்பதை உணர்த்தும் வகையில் இயேசு இங்கு செயல்படுகிறார். தன்னைத் தேடி வரும் மக்களுக்கு பணி செய்யும் சீடர்களைத் தேர்ந்தெடுக்க விழைந்த இயேசு, சீமோனை அழைக்க விரும்புகிறார். மக்களுக்கான போதனை முடிந்ததும் சீடர்களுக்கான புதுமை ஆரம்பமாகிறது. படகை ஆழத்திற்கு கொண்டுபோய் வலைகளைப் போடுமாறு இயேசு கொடுத்த கட்ட ளைக்கு, சீமான் தாழ்ச்சியோடு கீழ்ப்படிந்ததை இங்கு காண்கிறோம். மீன்கள் கிடைக்காத அனுபவம் இருந்தும், இயேசுவுக்கு கீழ்ப்படிந்ததால் சீமான் புதுமையைக் காண்கிறார். அவரை மனிதர்களைப் பிடிப்பவராக இயேசு மாற்றுகிறார். எதுவும் நடக்க வாய்ப்பில்லை என்ற நம்பிக்கையற்ற நிலையிலும், கடவுளை முழு மனதோடு நம்பி மேற்கொள்ளும் செயல்களில் நாம் புதுமைகளை காண முடியும்.

Friday, February 1, 2013

பிப்ரவரி 3, 2013

பொதுக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 4:21-30
   இயேசு தொழுகைக்கூடத்தில் இருந்தவர்களை நோக்கி, "நீங்கள் கேட்ட இந்த மறைநூல் வாக்கு இன்று நிறைவே றிற்று'' என்றார். அவர் வாயிலிருந்து வந்த அருள்மொழி களைக் கேட்டு வியப்புற்று, "இவர் யோசேப்பின் மகன் அல்லவா?'' எனக் கூறி எல்லாரும் அவரைப் பாராட்டினர். அவர் அவர்களிடம், "நீங்கள் என்னிடம், 'மருத்துவரே, உம்மையே நீர் குணமாக்கிக்கொள்ளும்' என்னும் பழமொழி யைச் சொல்லி, 'கப்பர்நாகுமில் நீர் செய்ததாக நாங்கள் கேள்விப்பட்டவற்றை எல்லாம் உம் சொந்த ஊராகிய இவ்விடத்திலும் செய்யும்' எனக் கண்டிப்பாய்க் கூறுவீர்கள். ஆனால் நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன். இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. உண்மையாக நான் உங்களுக்குச் சொல்கிறேன்: எலியாவின் காலத்தில் மூன்றரை ஆண்டுகளாக வானம் பொய்த்தது; நாடெங்கும் பெரும் பஞ்சம் உண்டானது. அக்காலத்தில் இஸ்ரயேலரிடையே கைம்பெண்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவரிடமும் எலியா அனுப்பப் படவில்லை; சீதோனைச் சேர்ந்த சாரிபாத்தில் வாழ்ந்த ஒரு கைம்பெண்ணிடமே அனுப்பப்பட்டார். மேலும், இறைவாக்கினர் எலிசாவின் காலத்தில் இஸ்ரயேலரிடையே தொழுநோயாளர்கள் பலர் இருந்தனர்; ஆயினும் அவர்களுள் எவருக்கும் நோய் நீங்கவில்லை. சிரியாவைச் சார்ந்த நாமானுக்கே நோய் நீங்கியது'' என்றார்.
    தொழுகைக்கூடத்தில் இருந்த யாவரும் இவற்றைக் கேட்டபோது, சீற்றங்கொண்டனர்; அவர்கள் எழுந்து, அவரை ஊருக்கு வெளியே துரத்தி, அவ்வூரில் அமைந்திருந்த மலை உச்சியிலிருந்து கீழே தள்ளிவிட இழுத்துச் சென்றனர். அவர் அவர்கள் நடுவே நடந்து சென்று அங்கிருந்து போய்விட்டார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் நம் ஆண்டவர் இயேசு, இறைவாக்கினர் எவரும் தம் சொந்த ஊரில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற உண்மையை எடுத்துரைக்கிறார். கடவுளின் பெய ரால் செய்யப்படும் இறைவாக்கு பணியின் சவால்கள் இன்றைய நற்செய்தியில் எடுத்துரைக் கப்படுகின்றன. எசாயாவின் இறைவாக்கு நிறைவேறிவிட்டது என்று இயேசு கூறியவுடன், ஏதோ ஓர் அற்புதம் நிகழ்ந்துவிட்டதாக எண்ணிய மக்கள் அவரைப் புகழ்கிறார்கள். அடுத்த தாக தங்கள் நடுவே அற்புதம் நிகழப்போகிறது என்று நினைத்திருந்த வேளையில், அப்படி எதுவும் நிகழப்போவதில்லை என்று இயேசு கூறியது அவர்களுக்கு பேரிடியாக இருந்தது. இதனால் வெகுண்டெழுந்த அவர்கள் இயேசுவைக் கொலை செய்ய திட்டமிடுகிறார்கள். ஆனால் அந்த கொள்கையற்ற மக்கள் கூட்டத்தின் நடுவில் நடந்து சென்று, இயேசு நழுவிப் போய்விடுகிறார். முழு மனதோடு இயேசுவை ஏற்றுக்கொள்ளும்போது, அவரது திட்டத்தை புரிந்துகொண்டு தெளிவான பாதையில் நம் வாழ்வை முன்னெடுத்து செல்ல முடியும்.