Friday, March 29, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா
யோவான் 20:1-9
   வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார்.
    இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப் பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவ ருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத் துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ள வில்லை.

சிந்தனை:
   இயேசுவின் உயிர்ப்பு இன்றும் பலரால் புரிந்துகொள்ள இயலாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. முதன்முதலில் உயிர்ப்பைப்பற்றி கேள்விப்பட்ட இயேசுவின் சீடர்கள் அதை புரிந்துகொள்ள முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இயேசுவுக்காக தங்கள் உயிரையே கையளிக்கும் அளவுக்கு அவர்கள் பெற்ற துணிவு, அவரது உயிர்ப்புக்கு இன்றளவும் சான்றாக திகழ்கிறது. மரணத்தை வென்ற இறைமகன் இயேசு என்றென்றும் வாழ்கிறார். அவர் மாட்சியுடன் மீண்டும் வரும் வேளையில் நாமும் மாட்சி பொருந்தியவர் களாய் தோன்றுவோம். நாமும் உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொள்ளும்போது உண்மை யான அவரது உயிர்ப்புக்கு உறுதியுடன் சான்று பகர முடியும்.

Friday, March 22, 2013

மார்ச் 24, 2013

திருப்பாடுகளின் குருத்து ஞாயிறு
லூக்கா 22:14-23:56
   
 இயேசுவின் சீடர்கள் பாஸ்கா விருந்துக்கு ஏற்பாடு செய்த பின் நேரம் ஆனதும் இயேசு திருத்தூதரோடு பந்தியில் அமர்ந்தார். அப்போது அவர் அவர்களை நோக்கி, "நான் துன்பங்கள் படுமுன் உங்களோடு இந்த பாஸ்கா விருந்தை உண்பதற்கு மிக மிக ஆவலாய் இருந்தேன். ஏனெனில் இறையாட்சியில் இது நிறைவேறும்வரை இதை நான் உண்ணமாட்டேன் என்று உங்களுக்குச் சொல்கிறேன்'' என் றார். பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, கடவுளுக்கு நன்றி செலுத்தி அவர்களிடம், "இதைப் பெற்று உங்களுக்குள்ளே பகிர்ந்துகொள்ளுங்கள். ஏனெனில் இதுமுதல் இறையாட்சி வரும்வரை, திராட்சைப் பழ இரசத்தைக் குடிப்பதில்லை என நான் உங்களுக்குச் சொல்கி றேன்'' என்றார். பின்பு அவர் அப்பத்தை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி, அதைப் பிட்டு, அவர்களுக்குக் கொடுத்து, "இது உங்களுக்காகக் கொடுக்கப்படும் எனது உடல். இதை என் நினைவாகச் செய்யுங்கள்'' என்றார். அப்படியே உணவு அருந்திய பின்பு அவர் கிண்ணத்தை எடுத்து, "இந்தக் கிண்ணம் உங்களுக்காகச் சிந்தப்படுகிற எனது இரத்தத்தால் நிலைப்படுத்தப் படும் புதிய உடன்படிக்கை. என்னைக் காட்டிக்கொடுப்பவன் இதோ, என்னோடு பந்தியில் அமர்ந்திருக்கிறான். மானிடமகன் தமக்கென்று குறிக்கப்பட்டபடியே போகிறார், ஆனால் ஐயோ! அவரைக் காட்டிக் கொடுக்கிறவனுக்குக் கேடு'' என்றார். அப்பொழுது அவர்கள், "நம் மில் இச்செயலைச் செய்யப்போகிறவர் யார்'' என்று தங்களுக்குள்ளே கேட்கத் தொடங்கினார் கள். மேலும் தங்களுக்குள்ளே பெரியவராக எண்ணப்பட வேண்டியவர் யார் என்ற விவாதம் அவர்களிடையே எழுந்தது.
   இயேசு அவர்களிடம், "பிற இனத்தவரின் அரசர்கள் மக்களை அடக்கி ஆளுகின்றார்கள்; அதிகாரம் காட்டுகின்றவர்கள் நன்மை செய்பவர்கள் என அழைக்கப்படுகின்றார்கள். ஆனால் நீங்கள் அப்படிச் செய்யலாகாது. உங்களுள் பெரியவர் சிறியவராகவும் ஆட்சிபுரிபவர் தொண்டு புரிபவராகவும் மாற வேண்டும். யார் பெரியவர்? பந்தியில் அமர்ந்திருப்பவரா? அல்லது பணிவிடை புரிபவரா? பந்தியில் அமர்ந்திருப்பவர் அல்லவா? நான் உங்கள் நடுவே பணிவிடை புரிபவனாக இருக்கிறேன். நான் சோதிக்கப்படும்போது என்னோடு இருந்தவர்கள் நீங்களே. என் தந்தை எனக்கு ஆட்சியுரிமை கொடுத்திருப்பதுபோல நானும் உங்களுக்குக் கொடுக்கிறேன். ஆகவே என் ஆட்சி வரும்போது நீங்கள் என்னோடு பந்தியில் அமர்ந்து உண்டு குடிப்பீர்கள்; இஸ்ரயேலின் பன்னிரு குலத்தவருக்கும் தீர்ப்பு வழங்க அரியணையில் அமர்வீர்கள். சீமோனே, சீமோனே, இதோ கோதுமையைப்போல் உங்களைப் புடைக்கச் சாத் தான் அனுமதி கேட்டிருக்கிறான். ஆனால் நான் உனது நம்பிக்கை தளராதிருக்க உனக்காக மன்றாடினேன். நீ மனந்திரும்பியபின் உன் சகோதரர்களை உறுதிப்படுத்து'' என்றார். அதற்குப் பேதுரு, "ஆண்டவரே, உம்மோடு சிறையிலிடப்படுவதற்கும் ஏன், சாவதற்கும் நான் ஆயத்த மாய் உள்ளேன்'' என்றார். இயேசு அவரிடம், "பேதுருவே, இன்றிரவு, 'என்னைத் தெரியாது' என மும்முறை நீ மறுதலிக்குமுன் சேவல் கூவாது என உனக்குச் சொல்கிறேன்'' என்றார். இயேசு சீடர்களிடம், "நான் உங்களைப் பணப்பையோ வேறு பையோ மிதியடியோ எதுவுமில்லாமல் அனுப்பியபோது, உங்களுக்கு ஏதாவது குறை இருந்ததா?'' என்று கேட்டார். அவர்கள், "ஒரு குறையும் இருந்ததில்லை'' என்றார்கள். அவர் அவர்களிடம், "ஆனால், இப்பொழுது பணப்பை உடையவர் அதை எடுத்துக்கொள்ளட்டும்; வேறு பை உடையவரும் அவ்வாறே செய்யட்டும். வாள் இல்லாதவர் தம் மேலுடையை விற்று வாள் வாங்கிக்கொள்ளட்டும். ஏனெனில் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: `கொடியவருள் ஒருவராகக் கருதப்பட்டார்' என்று மறைநூலில் எழுதப்பட்டுள்ளது என் வாழ்வில் நிறைவேற வேண்டும். என்னைப் பற்றியவை எல்லாம் நிறைவேறி வருகின்றன'' என்றார். அவர்கள், "ஆண்டவரே, இதோ! இங்கே இரு வாள்கள் உள்ளன'' என்றார்கள். இயேசு அவர்களிடம், "போதும்'' என்றார். இயேசு அங்கிருந்து புறப் பட்டுத் தம் வழக்கப்படி ஒலிவ மலைக்குச் சென்றார்.
   சீடர்களும் அவரைப் பின்தொடர்ந்தார்கள். அந்த இடத்தை அடைந்ததும் அவர் அவர்களிடம், "சோதனைக்கு உட்படாதிருக்க இறைவனிடம் வேண்டுங்கள்,'' என்றார். பிறகு அவர் அவர்களை விட்டுக் கல்லெறி தூரம் விலகிச் சென்று, முழந்தாள்படியிட்டு, இறைவனிடம் வேண்டினார்: "தந்தையே, உமக்கு விருப்பமானால் இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்'' என்று கூறி னார். அப்போது விண்ணகத்திலிருந்து ஒரு தூதர் அவருக்குத் தோன்றி அவரை வலுப்படுத்தி னார். அவரோ மிகுந்த வேதனைக்குள்ளாகவே, உருக்கமாய் இறைவனிடம் வேண்டிக்கொண் டிருந்தார். அவரது வியர்வை பெரும் இரத்தத் துளிகளைப் போலத் தரையில் விழுந்தது. அவர் இறைவேண்டலை முடித்துவிட்டு எழுந்து சீடர்களிடம் வந்தபோது அவர்கள் துயரத்தால் சோர்வுற்றுத் தூங்கிக்கொண்டிருப்பதைக் கண்டார். அவர்களிடம், "என்ன, உறங்கிக்கொண்டா இருக்கிறீர்கள்? சோதனைக்கு உட்படாதிருக்க விழித்திருந்து இறைவனிடம் வேண்டுங்கள்'' என்றார். இயேசு தொடர்ந்து பேசிக்கொண்டிந்தபோது, இதோ! மக்கள் கூட்டமாய் வந்தனர். பன்னிருவருள் ஒருவனான யூதாசு என்பவன் அவர்களுக்குமுன் வந்து அவரை முத்தமிட நெருங்கினான். இயேசு அவனிடம், "யூதாசே, முத்தமிட்டா மானிடமகனை காட்டிக்கொடுக்க போகிறாய்?'' என்றார். அவரைச் சூழ நின்றவர்கள் நிகழப்போவதை உணர்ந்து, "ஆண்டவரே, வாளால் வெட்டலாமா?'' என்று கேட்டார்கள். அப்பொழுது அவர்களுள் ஒருவர் தலைமைக் குருவின் பணியாளரைத் தாக்கி அவருடைய வலக் காதைத் துண்டித்தார். இயேசு அவர் களைப் பார்த்து, "விடுங்கள், போதும்'' என்று கூறி அவருடைய காதைத் தொட்டு நலமாக்கி னார். அவர் தம்மிடம் வந்த தலைமைக் குருக்களையும் கோவில் காவல் தலைவர்களையும் மூப்பர்களையும் பார்த்து, "ஒரு கள்வனைப் பிடிக்க வருவதுபோல நீங்கள் வாள்களோடும் தடிகளோடும் வந்தது ஏன்? நான் நாள்தோறும் கோவிலில் உங்களோடு இருந்தும் நீங்கள் என்னைப் பிடிக்கவில்லையே. ஆனால் இது உங்களுடைய நேரம்; இப்போது இருள் அதிகாரம் செலுத்துகிறது'' என்றார். பின்னர் அவர்கள் இயேசுவைக் கைது செய்து இழுத்துச் சென்று தலைமைக் குருவின் வீட்டுக்குக் கொண்டுபோனார்கள்.
   பேதுரு தொலையில் அவரைப் பின்தொடர்ந்தார். வீட்டு உள்முற்றத்தின் நடுவில் நெருப்பு மூட்டி, அதைச் சுற்றி அவர்கள் உட்கார்ந்திருந்தார்கள். பேதுருவும் அவர்களோடு இருந்தார். அப்போது பணிப்பெண் ஒருவர் நெருப்பின் அருகில் அவர் அமர்ந்திருப்பதைக் கண்டு, அவரை உற்றுப்பார்த்து, "இவனும் அவனோடு இருந்தவன்'' என்றார். அவரோ, "அம்மா, அவரை எனக்குத் தெரியாது'' என்று மறுதலித்தார். சிறிது நேரத்திற்குப்பின் அவரைக் கண்ட வேறு ஒருவர், "நீயும் அவர்களைச் சேர்ந்தவன்தான்" என்றார். பேதுரு, "இல்லையப்பா" என்றார். ஏறக்குறைய ஒரு மணிநேரத்திற்குப்பின்பு மற்றொருவர், "உண்மையாகவே இவனும் அவ னோடு இருந்தான்; இவனும் கலிலேயன்தான்" என்று வலியுறுத்திக் கூறினார். பேதுருவோ, "நீர் குறிப்பிடுபவரை எனக்குத் தெரியாது" என்றார். உடனேயே, அவர் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தபோதே, சேவல் கூவிற்று. ஆண்டவர் திரும்பி, பேதுருவைக் கூர்ந்து நோக்கி னார்; 'இன்று சேவல் கூவு முன் நீ என்னை மும்முறை மறுதலிப்பாய்' என்று ஆண்டவர் தமக்குக் கூறியதைப் பேதுரு நினைவுகூர்ந்து, வெளியே சென்று மனம் நொந்து அழுதார். இயேசுவைப் பிடித்துவைத்திருந்தவர்கள் அவரை ஏளனம் செய்து நையப்புடைத்தார்கள். அவரது முகத்தை மூடி, "உன்னை அடித்தவர் யார்? இறைவாக்கினனே, சொல்" என்று கேட்டார்கள். இன்னும் பலவாறு அவரைப் பழித்துரைத்தார்கள்.
   பொழுது விடிந்ததும் மக்களின் மூப்பர்களும் தலைமைக்குருக்களும் மறைநூல் அறிஞர் களும் கூடிவந்தார்கள்; இயேசுவை இழுத்துச் சென்று தங்கள் மூப்பர் சங்கத்தின்முன் நிறுத்தினார்கள். அவர்கள், "நீ மெசியா தானா? எங்களிடம் சொல்" என்று கேட்டார்கள். அவர் அவர்களிடம், "நான் உங்களிடம் சொன்னால் நீங்கள் நம்பமாட்டீர்கள்; நான் உங்களிடம் கேட்டாலும் பதில் சொல்ல மாட்டீர்கள். இதுமுதல் மானிடமகன் வல்லவராம் கடவுளின் வலப்புறத்தில் வீற்றிருப்பார்" என்றார். அதற்கு அவர்கள் அனைவரும், "அப்படியானால் நீ இறைமகனா?" என்று கேட்டனர். அவரோ, "நான் இறைமகன் என நீங்களே சொல்லுகிறீர்கள்" என்று அவர்களுக்கு சொன்னார். அதற்கு அவர்கள், "இன்னும் நமக்கு சான்றுகள் தேவையா? இவன் வாயிலிருந்து நாமே கேட்டோமே" என்றார்கள்.
   திரண்டிருந்த மக்கள் அனைவரும் எழுந்து இயேசுவைப் பிலாத்தின்முன் கொண்டு சென்ற னர். "இவன் நம் மக்கள் சீரழியக் காரணமாக இருக்கிறான்; சீசருக்குக் கப்பம் கட்டக்கூடாது என்கிறான்; தானே மெசியாவாகிய அரசன் என்று சொல்லிக் கொள்கிறான். இவற்றையெல் லாம் நாங்களே கேட்டோம்" என்று அவர்கள் இயேசுவின் மேல் குற்றம் சுமத்தத் தொடங்கி னார்கள். பிலாத்து அவரை நோக்கி, "நீ யூதரின் அரசனா?" என்று கேட்க, அவர், "அவ்வாறு நீர் சொல்கிறீர்" என்று பதில் கூறினார். பிலாத்து தலைமைக் குருக்களையும் மக்கள் கூட்டத் தையும் பார்த்து, "இவனிடம் நான் குற்றம் ஒன்றும் காணவில்லை" என்று கூறினான். ஆனால் அவர்கள், "இவன் கலிலேயா தொடங்கி யூதேயா வரை இவ்விடம் முழுவதிலும் மக்களுக்குக் கற்பித்து அவர்களைத் தூண்டிவிடுகிறான்" என்று வலியுறுத்திக் கூறினார்கள். இதைக் கேட்ட பிலாத்து, "இவன் கலிலேயனா?" என்று கேட்டான்; அவர் ஏரோதுவின் அதிகாரத்திற்கு உட்பட்டவர் என்று அவன் அறிந்து, அப்போது எருசலேமிலிருந்த ஏரோதிடம் அவரை அனுப்பினான்.
   இயேசுவைக் கண்ட ஏரோது மட்டற்ற மகிழ்ச்சி அடைந்தான்; ஏனெனில், அவரைக் குறித் துக் கேள்விப்பட்டு அவரைக் காண நெடுங்காலமாய் விருப்பமாய் இருந்தான்; அவர் அரும் அடையாளம் ஏதாவது செய்வதைக் காணலாம் என்றும் நெடுங்காலமாய் எதிர்பார்த்திருந் தான். அவன் அவரிடம் பல கேள்விகள் கேட்டான். ஆனால் அவர் அவனுக்குப் பதில் எதுவும் கூறவில்லை. அங்கு நின்ற தலைமைக் குருக்களும் மறைநூல் அறிஞர்களும் அவர்மேல் மிகுதியான குற்றம் சுமத்திக் கொண்டிருந்தார்கள். ஏரோது தன் படைவீரரோடு அவரை இகழ்ந்து ஏளனம் செய்து, பளபளப்பான ஆடையை அவருக்கு உடுத்தி அவரைப் பிலாத்திடம் திருப்பி அனுப்பினான். அதுவரை ஒருவருக்கு ஒருவர் பகைவராய் இருந்த ஏரோதும் பிலாத்தும் அன்று நண்பர்களாயினர்.
   பிலாத்து தலைமைக் குருக்களையும் ஆட்சியாளர்களையும் மக்களையும் ஒன்றாக வரவ ழைத்தான். அவர்களை நோக்கி, "மக்கள் சீரழியக் காரணமாய் இருக்கிறான் என்று இவனை என்னிடம் கொண்டு வந்தீர்களே; இதோ, நான் உங்கள் முன்னிலையில் விசாரித்தும் நீங்கள் சுமத்துகிற எந்தக் குற்றத்தையும் இவனிடத்தில் காணவில்லை. ஏரோதும் குற்றம் எதுவும் காணவில்லை; ஆகவே, அவர் இவனை நம்மிடம் திருப்பி அனுப்பியுள்ளார். மரண தண்ட னைக்குரிய யாதொன்றையும் இவன் செய்யவில்லை என்பது தெளிவு. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான். விழாவின்போது அவர்களுக்கென ஒரு கைதியை விடுவிக்க வேண்டிய கட்டாயம் அவனுக்கு இருந்தது. திரண்டிருந்த மக்கள் அனைவரும், "இவன் ஒழிக! பரபாவை எங்களுக்கென விடுதலை செய்யும்" என்று கத்தினர். பரபா நகரில் நடந்த ஒரு கலகத்தில் ஈடுபட்டுக் கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்ட வன். பிலாத்து இயேசுவை விடுதலை செய்ய விரும்பி மீண்டும் அவர்களைக் கூப்பிட்டுப் பேசினான். ஆனால் அவர்கள், "அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும்" என்று கத்தினார்கள். மூன்றாம் முறையாக அவன் அவர்களை நோக்கி, "இவன் செய்த குற்றம் என்ன? மரண தண்டனைக்குரிய குற்றம் ஒன்றும் இவனிடம் நான் காணவில்லை. எனவே இவனைத் தண்டித்து விடுதலை செய்வேன்" என்றான். அவர்கள் அவரைச் சிலுவையில் அறைய வேண்டுமென்று உரத்த குரலில் வற்புறுத்திக் கேட்டார்கள். அவர்கள் குரலே வென்றது. அவர்கள் கேட்டபடியே பிலாத்து தீர்ப்பு அளித்தான். கலகத்தில் ஈடுபட்டு, கொலை செய்ததற்காகச் சிறையிலிடப்பட்டிருந்தவனை அவர்கள் கேட்டுக் கொண்டபடியே அவன் விடுதலை செய்தான்; இயேசுவை அவர்கள் விருப்பப்படி செய்ய விட்டுவிட்டான்.
    அவர்கள் இயேசுவை இழுத்துச் சென்றுகொண்டிருந்த போது சிரேன் ஊரைச்சேர்ந்த சீமோன் என்பவர் வயல் வெளியிலிருந்து வந்துகொண்டிருந்தார். அவர்கள் அவரைப் பிடித்து அவர்மேல் இயேசுவின் சிலுவையை வைத்து, அவருக்குப்பின் அதைச் சுமந்து கொண்டுபோகச் செய்தார் கள். பெருந்திரளான மக்களும் அவருக்காக மாரடித்துப் புலம்பி ஒப்பாரி வைத்த பெண்களும் அவர் பின்னே சென் றார்கள். இயேசு அப்பெண்கள் பக்கம் திரும்பி, "எருசலேம் மகளிரே, நீங்கள் எனக்காக அழவேண்டாம்; மாறாக உங்க ளுக்காகவும் உங்கள் மக்களுக்காகவும் அழுங்கள். ஏனெ னில் இதோ, ஒரு காலம் வரும். அப்போது 'மலடிகள் பேறு பெற்றோர்' என்றும் 'பிள்ளை பெறாதோரும் பால் கொடாதோரும் பேறுபெற்றோர்' என்றும் சொல்வார்கள். அப்போது அவர்கள் மலைகளைப் பார்த்து, 'எங்கள் மேல் விழுங்கள்' எனவும் குன்றுகளைப் பார்த்து, 'எங்களை மூடிக்கொள்ளுங்கள்' எனவும் சொல்வார்கள். பச்சை மரத்துக்கே இவ்வாறு செய்கிறார்கள் என்றால் பட்ட மரத்துக்கு என்னதான் செய்யமாட்டார் கள்!" என்றார். வேறு இரண்டு குற்றவாளிகளையும் மரணதண்டனைக்காக அவர்கள் அவரோடு கொண்டுசென்றார்கள். மண்டை ஓடு எனப்படும் இடத்திற்கு வந்ததும் அங்கே அவரையும் வலப்புறம் ஒருவனும் இடப்புறம் ஒருவனுமாக அக்குற்றவாளிகளையும் அவர் கள் சிலுவைகளில் அறைந்தார்கள். அப்போது இயேசு, "தந்தையே, இவர்களை மன்னியும். ஏனெனில் தாங்கள் செய்வது என்னவென்று இவர்களுக்குத் தெரியவில்லை" என்று சொன் னார். அவர்கள் அவருடைய ஆடைகளைக் குலுக்கல் முறையில் பங்கிட்டுக் கொண்டார்கள்.
   மக்கள் இவற்றைப் பார்த்துக் கொண்டு நின்றார்கள். ஆட்சியாளர்கள், "பிறரை விடுவித்தான்; இவன் கடவுளின் மெசியாவும், தேர்ந்தெடுக்கப்பட்டவனுமானால் தன்னையே விடுவித்துக் கொள்ளட்டும்" என்று கேலிசெய்தார்கள். படைவீரர் அவரிடம் வந்து புளித்த திராட்சை இரசத்தைக் கொடுத்து, "நீ யூதர்களின் அரசனானால் உன்னைக் காப்பாற்றிக் கொள்" என்று எள்ளி நகையாடினர். 'இவன் யூதரின் அரசன்' என்று அவரது சிலுவையின் மேல் எழுதி வைக்கப்பட்டிருந்தது. சிலுவையில் தொங்கிக்கொண்டிருந்த குற்றவாளிகளுள் ஒருவன், "நீ மெசியாதானே! உன்னையும் எங்களையும் காப்பாற்று" என்று அவரைப் பழித்துரைத்தான். ஆனால் மற்றவன் அவனைக் கடிந்து கொண்டு, "கடவுளுக்கு நீ அஞ்சுவதில்லையா? நீயும் அதே தீர்ப்புக்குத்தானே உள்ளாகி இருக்கிறாய். நாம் தண்டிக்கப்படுவது முறையே. நம் செயல்களுக்கேற்ற தண்டனையை நாம் பெறுகிறோம். இவர் ஒரு குற்றமும் செய்யவில் லையே!" என்று பதிலுரைத்தான். பின்பு அவன், "இயேசுவே, நீர் ஆட்சியுரிமை பெற்று வரும்போது என்னை நினைவிற்கொள்ளும்" என்றான். அதற்கு இயேசு அவனிடம், "நீர் இன்று என்னோடு பேரின்ப வீட்டில் இருப்பீர் என உறுதியாக உமக்குச் சொல்கிறேன்" என்றார். ஏறக்குறைய நண்பகல் பன்னிரண்டு மணி முதல் பிற்பகல் மூன்று மணிவரை நாடெங்கும் இருள் உண்டாயிற்று. கதிரவன் ஒளி கொடுக்கவில்லை. திருக்கோவிலின் திரை நடுவில் கிழிந்தது. "தந்தையே, உம் கையில் என் உயிரை ஒப்படைக்கிறேன்" என்று இயேசு உரத்த குரலில் கூறி உயிர் துறந்தார். இதைக் கண்ட நூற்றுவர் தலைவர், "இவர் உண்மையாகவே நேர்மையாளர்" என்று கூறிக் கடவுளைப் போற்றிப் புகழ்ந்தார். இக்காட்சியைக் காணக் கூடிவந்திருந்த மக்கள் அனைவரும் நிகழ்ந்தவற்றைக் கண்டு, மார்பில் அடித்துக் கொண்டு திரும்பிச் சென்றனர். அவருக்கு அறிமுகமான அனைவரும், கலிலேயாவிலிருந்து அவரைப் பின்பற்றி வந்திருந்த பெண்களும் தொலையிலிருந்து இவற்றை பார்த்து கொண்டிருந்தார்கள்.
   யோசேப்பு என்னும் பெயருடைய ஒருவர் இருந்தார். அவர் தலைமைச் சங்க உறுப்பினர், நல்லவர், நேர்மையாளர். தலைமைச் சங்கத்தாரின் திட்டத்துக்கும் செயலுக்கும் இணங்காத அவர் யூதேயாவிலுள்ள அரிமத்தியா ஊரைச் சேர்ந்தவர்; இறையாட்சியின் வருகைக்காகக் காத்திருந்தவர். அவர் பிலாத்திடம் போய் இயேசுவின் உடலைக் கேட்டார். அவர் அவரது உடலை இறக்கி, மெல்லிய துணியால் சுற்றிப் பாறையில் குடைந்திருந்த கல்லறையில் வைத்தார். அதற்கு முன்பு யாரையும் அதில் அடக்கம் செய்ததில்லை. அன்று ஆயத்த நாள்; ஓய்வுநாளின் தொடக்கம். கலிலேயாவிலிருந்து அவரோடு வந்திருந்த பெண்கள் பின் தொடர்ந்து சென்று கல்லறையைக் கண்டார்கள்; அவருடைய உடலை வைத்த விதத்தைப் பார்த்து விட்டு, திரும்பிப் போய் நறுமணப் பொருள்களையும் நறுமணத் தைலத்தையும் ஆயத்தம் செய்தார்கள். கட்டளைப்படி, அவர்கள் ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி நம் ஆண்டவர் இயேசு நமக்காக அனுபவித்த திருப்பாடுகளைத் தொகுத்து வழங்குகிறது. இயேசுவின் நற்கருணை பலியில் தொடங்கும் இந்த வாசகம், அவரது சிலுவை பலியில் நிறைவை காண்கிறது. திருப்பலியின் மையப்பொருளை இது உணர்த்துகிறது. கிறிஸ்துவின் நற்கருணை விருந்தில் பங்குபெறும் ஒவ்வொரு கிறிஸ்தவ ரும், அவரது திருப்பாடுகளின் வழியாக சிலுவை மரணத்தை ஏற்று, உயிர்ப்பின் மாட்சியில் பங்குபெற அழைக்கப்படுகிறார். பாடுகள் இல்லாமல் மகிமை இல்லை, சிலுவை இல்லாமல் உயிர்ப்பு இல்லை. கிறிஸ்துவை பின்தொடரும் சீடர்களுக்கு, யூதாசைப் போன்று காட்டிக் கொடுக்கவும், பேதுருவைப் போன்று மறுதலிக்கவும், மற்ற சீடர்களைப் போன்று தப்பியோட வும் சோதனைகள் வரலாம். ஆயினும் சிரேனூர் சீமோனைப் போன்று உதவி செய்யவும், எருசலேம் மகளிரைப் போன்று பின்தொடரவும், அன்னை மரியாவையும் யோவானையும் போன்று சிலுவை அடியில் நிற்கவும் நாம் அழைக்கப்படுகிறோம். நாம் அனைத்து விதமான சோதனைகளையும் ஆண்டவரின் துணையுடன் எதிர்கொள்ளும் பொழுது, சிலுவையை கடந்து உயிர்ப்பின் மாட்சியை அடைய முடியும்.

Friday, March 15, 2013

மார்ச் 17, 2013

தவக்காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 8:1-11
   அக்காலத்தில் இயேசு ஒலிவ மலைக்குச் சென்றார். பொழுது விடிந்ததும் அவர் மீண்டும் கோவிலுக்கு வந்தார். அப்போது மக்கள் அனைவரும் அவரிடம் வந்தனர். அவ ரும் அங்கு அமர்ந்து அவர்களுக்குக் கற்பித்தார்.
   மறைநூல் அறிஞரும் பரிசேயரும் விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து நடுவில் நிறுத்தி, "போதகரே, இப்பெண் விபசாரத்தில் கையும் மெய்யுமாகப் பிடிபட்டவள். இப்படிப்பட்டவர்களைக் கல்லால் எறிந்து கொல்ல வேண்டும் என்பது மோசே நமக்கு கொடுத்த திருச் சட்டத்திலுள்ள கட்டளை. நீர் என்ன சொல்கிறீர்?'' என்று கேட்டனர். அவர்மேல் குற்றம் சுமத்த ஏதாவது வேண்டும் என்பதற்காக அவர்கள் இவ்வாறு கேட்டுச் சோதித்தார்கள். இயேசு குனிந்து விரலால் தரையில் எழுதிக்கொண்டிருந்தார். ஆனால் அவர்கள் அவரை விடாமல் கேட் டுக் கொண்டிருந்ததால், அவர் நிமிர்ந்து பார்த்து, "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' என்று அவர்க ளிடம் கூறினார். மீண்டும் குனிந்து தரையில் எழுதிக்கொண்டிருந்தார்.
   அவர் சொன்னதைக் கேட்டதும் முதியோர் தொடங்கி ஒருவர் பின் ஒருவராக அவர்கள் யாவரும் அங்கிருந்து சென்றுவிட்டார்கள். இறுதியாக இயேசு மட்டுமே அங்கு இருந்தார். அப்பெண்ணும் அங்கேயே நின்றுகொண்டிருந்தார். இயேசு நிமிர்ந்து பார்த்து, "அம்மா, அவர் கள் எங்கே? நீர் குற்றவாளி என்று எவரும் தீர்ப்பிடவில்லையா?'' என்று கேட்டார். அவர், "இல்லை, ஐயா'' என்றார். இயேசு அவரிடம், "நானும் தீர்ப்பு அளிக்கவில்லை. நீர் போகலாம். இனிப் பாவம் செய்யாதீர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் மறைநூல் அறிஞரும் பரிசேயரும் இயேசுவை சோதிக்கும் நோக் குடன், விபசாரத்தில் பிடிபட்ட ஒரு பெண்ணைக் கூட்டிக்கொண்டு வந்து அவரை தண்டிப்பது சரியா, தவறா என்ற கேள்வியை முன்வைக்கிறார்கள். இயேசுவின் பதிலைக் கொண்டு அவருக்கு மக்களிடம் கெட்டப்பெயரை உருவாக்கி விடலாம் என்பது அவர்கள் எண்ணம். இயேசுவோ பிறரிடம் குற்றம் காணும் அவர்களது மனநிலையை போக்க நினைத்தவராய், "உங்களுள் பாவம் இல்லாதவர் முதலில் இப்பெண் மேல் கல் எறியட்டும்'' என்று கூறுகிறார். பிறரது குற்றங்களை அலசி ஆராயும் மனநிலையை விடுத்து, நமது பாவங்களை கண் டுணரும் உள்ளத்தைப்பெற அழைக்கப்படுகிறோம். அனைவரும் அங்கிருந்து சென்றுவிட்டா லும், அந்த பெண்ணோ, தான் தண்டனைக்கு உரியவள் என்ற எண்ணத்துடன் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தார். நமது பாவங்களுக்காக மனம் வருந்த வேண்டுமென்ற அழைப்பு நமக்கு கொடுக்கப்படுகிறது. இயேசு அவரது பாவங்களை மன்னித்து, "இனிப் பாவம் செய்யா தீர்" என்ற அறிவுரையுடன் அவரை அனுப்பி விடுகிறார். நமது குற்றங்களுக்காக தண்டனை வழங்கும் நீதிபதியாக கடவுள் செயல்படுவது இல்லை என்பதை இயேசு உணர்த்துவதைக் காண்கிறோம். நாம் பிறரைத் தீர்ப்பிடாமல் வாழும் பொழுது, கடவுளின் தீர்ப்பில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ள முடியும்.

Friday, March 8, 2013

மார்ச் 10, 2013

தவக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 15:1-3,11-32
   அக்காலத்தில் வரிதண்டுவோர், பாவிகள் யாவரும் இயேசு சொல் வதைக் கேட்க அவரிடம் நெருங்கி வந்தனர். பரிசேயரும், மறைநூல் அறிஞரும், "இவர் பாவிகளை வரவேற்று அவர்களோடு உணவருந்து கிறாரே'' என்று முணு முணுத்தனர். அப்போது அவர் அவர்களுக்கு இந்த உவமை யைச் சொன்னார்: "ஒருவருக்கு இரண்டு புதல்வர்கள் இருந்தார்கள். அவர்களுள் இளையவர் தந்தையை நோக்கி, 'அப்பா, சொத்தில் எனக்கு உரிய பங்கைத் தாரும்' என்றார். அவர் சொத்தை அவர்களுக்குப் பகிர்ந்து அளித்தார். சில நாள்களுக்குள் இளைய மகன் எல்லாவற்றையும் திரட்டிக் கொண்டு, தொலைநாட்டிற்கு நெடும் பயணம் மேற்கொண் டார்; அங்குத் தாறுமாறாக வாழ்ந்து தம் சொத்தையும் பாழாக்கினார். அனைத்தையும் அவர் செலவழித்தார்.
    பின்பு அந்த நாடு முழுவதும் கொடிய பஞ்சம் ஏற்பட்டது. அப்பொ ழுது அவர் வறுமையில் வாடினார்; எனவே அந்நாட்டுக் குடிமக்க ளுள் ஒருவரிடம் அண்டிப் பிழைக்கச் சென்றார். அவர் அவரைப் பன்றி மேய்க்கத் தம் வயல்களுக்கு அனுப்பினார். அவர் பன்றிகள் தின்னும் நெற்றுகளால் தம் வயிற்றை நிரப்ப விரும்பினார்; ஆனால் அதைக்கூட அவருக்குக் கொடுப்பார் இல்லை. அவர் அறிவு தெளிந்த வராய், 'என் தந்தையின் கூலியாள்களுக்குத் தேவைக்கு மிகு தியான உணவு இருக்க, நான் இங்குப் பசியால் சாகிறேனே! நான் புறப்பட்டு என் தந்தையிடம் போய், அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம் முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்; உம்முடைய கூலியாள்களுள் ஒருவனாக என்னை வைத்துக்கொள்ளும் என்பேன்' என்று சொல்லிக் கொண்டார். உடனே அவர் புறப்பட்டுத் தம் தந்தையிடம் வந்தார்.
    தொலையில் வந்துகொண்டிருந்தபோதே அவர் தந்தை அவரைக் கண்டு, பரிவு கொண்டு, ஓடிப்போய் அவரைக் கட்டித் தழுவி முத்தமிட்டார். மகனோ அவரிடம், 'அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்' என்றார். தந்தை தம் பணியாளரை நோக்கி, 'முதல் தரமான ஆடையைக் கொண்டு வந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதி யடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில் என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்று வந்துள்ளான். காணாமற் போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார். அவர்கள் மகிழ்ந்து விருந்து கொண்டாடத் தொடங்கினார்கள்.
    அப்போது மூத்த மகன் வயலில் இருந்தார். அவர் திரும்பி வீட்டை நெருங்கி வந்து கொண் டிருந்தபோது, ஆடல் பாடல்களைக் கேட்டு, ஊழியர்களுள் ஒருவரை வரவழைத்து, 'இதெல் லாம் என்ன?' என்று வினவினார். அதற்கு ஊழியர் அவரிடம், 'உம் தம்பி வந்திருக்கிறார். அவர் தம்மிடம் நலமாகத் திரும்பி வந்திருப்பதால் உம் தந்தை கொழுத்த கன்றை அடித் திருக்கிறார்' என்றார். அவர் சினமுற்று உள்ளே போக விருப்பம் இல்லாதிருந்தார். உடனே அவருடைய தந்தை வெளியே வந்து, அவரை உள்ளே வருமாறு கெஞ்சிக் கேட்டார். அதற்கு அவர் தந்தையிடம், 'பாரும், இத்தனை ஆண்டுகளாக நான் அடிமைபோன்று உமக்கு வேலை செய்து வருகிறேன். உம் கட்டளைகளை ஒருபோதும் மீறியதில்லை. ஆயினும், என் நண்ப ரோடு நான் மகிழ்ந்து கொண்டாட ஓர் ஆட்டுக் குட்டியைக்கூட என்றுமே நீர் தந்ததில்லை. ஆனால் விலைமகளிரோடு சேர்ந்து உம் சொத்துக்களை எல்லாம் அழித்துவிட்ட இந்த உம் மகன் திரும்பி வந்தவுடனே, இவனுக்காகக் கொழுத்த கன்றை அடித்திருக்கிறீரே!' என்றார்.
    அதற்கு தந்தை, 'மகனே, நீ எப்போதும் என்னுடன் இருக்கிறாய்; என்னுடையதெல்லாம் உன்னுடையதே. இப்போது நாம் மகிழ்ந்து கொண்டாடி இன்புற வேண்டும். ஏனெனில் உன் தம்பி இவன் இறந்து போயிருந்தான்; மீண்டும் உயிர்பெற்றுள்ளான். காணாமற் போயிருந் தான்; மீண்டும் கிடைத்துள்ளான்' என்றார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் இரக்கத்தை வெளிப்படுத்தும் ஓர் உவமையை எடுத்துரைக்கிறார். கடவுளின் அன்பை உதறிவிட்டு, உலகப் பொருட்களில் ஆர்வம் கொள் ளும் மனிதர்களை இளையமகன் குறித்து நிற்கிறார். தந்தையின் அன்பிலிருந்து தன்னை விலக்கிக்கொண்டு அவர் தொலைநாட்டிற்கு பயணம் மேற்கொள்வது போலவே, உலகப் போக்கில் வாழும் மனிதர் ஒவ்வொருவரும் கடவிளிடம் இருந்து விலகிச் செல்கிறார்கள். அவர்கள் வாழ்க்கையின் வெறுமையை உணரும்போது, தந்தையிடம் திரும்பிச் செல்லும் தூண்டுதலைப் பெறுகிறார்கள். ஆனால், உவமை கூறும் மகனைப் போல தந்தையிடம் திரும்பிச் செல்பவர்கள் சிலரே. அதே வேளையில், மனந்திரும்பி வரும் ஒவ்வொருவரையும் அரவணைத்துக் கொள்வதற்காக கடவுள் எதிர்நோக்கி காத்திருக்கிறார். மனம் மாறியவர்கள் தங்கள் தாழ்நிலையை அறிந்து, அடிமைகளாய் தங்களைக் கருதினாலும் அவர்களுக்கு பிள் ளைகளுக்குரிய உரிமையை கடவுள் மீண்டும் அளிக்கிறார். நமது பாவநிலையை உணர்ந்து, மனம் மாறியவர்களாக நாம் கடவுளிடம்  திரும்பிச செல்லும்போது அவர் ஏற்பாடு செய்யும் விருந்தில் மகிழ்ச்சியுடன் பங்கேற்க முடியும்.

Friday, March 1, 2013

மார்ச் 3, 2013

தவக்காலம் 3-ம் ஞாயிறு
லூக்கா 13:1-9
   அக்காலத்தில் சிலர் இயேசுவிடம் வந்து, பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலேயரை பிலாத்து கொன்றான் என்ற செய்தியை அறிவித்தனர். அவர் அவர்களிடம் மறுமொழி யாக, "இக்கலிலேயருக்கு இவ்வாறு நிகழ்ந்ததால் இவர்கள் மற்றெல்லாக் கலிலேயரையும்விடப் பாவிகள் என நினைக் கிறீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர்கள். சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேரைக் கொன்றதே. அவர்கள் எருசலேமில் குடியிருந்த மற்ற எல்லாரையும்விடக் குற்றவாளிகள் என நினைக்கி றீர்களா? அப்படி அல்ல என உங்களுக்குச் சொல்கிறேன். மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அப்படியே அழிவீர்கள்'' என்றார்.
   மேலும், இயேசு இந்த உவமையைக் கூறினார்: "ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதை யும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், 'பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்திமரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?' என்றார். தொழிலாளர் மறுமொழியாக, 'ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டு வையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எரு போடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டி விடலாம்' என்று அவரிடம் கூறினார்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, நாம் மனம் மாறுவதன் அவசியத்தை வலியுறுத்துகிறார். உலகில் நிகழும் அழிவுகள் ஒவ்வொன்றையும் படிப்பினைகளாக எடுத்துக்கொண்டு, மனம் திரும்ப வேண்டுமென இயேசு நமக்கு அழைப்பு விடுக்கிறார். உருமாற்றத்தின் மாட்சியைப் பெற நாம் மனமாற்றத்திற்கு அழைக்கப்படுகிறோம். பலி செலுத்திக் கொண்டிருந்த கலிலே யரை பிலாத்து கொன்றதையும், சீலோவாமிலே கோபுரம் விழுந்து பதினெட்டு பேர் உயிரி ழந்ததையும் சுட்டிக்காட்டி, மனம் மாறாவிட்டால் நீங்கள் அனைவரும் அவ்வாறே அழிவீர் கள் என இயேசு எச்சரிக்கை விடுக்கிறார். கனி தராத அத்தி மரத்தை வெட்டுவதற்கு சிறிது கால அவகாசம் கொடுக்கப்பட்டதைப் போன்று, மனம் திரும்புமாறு நமக்கும் அவகாசம் வழங்கப்பட்டிருக்கிறது. நாம் அழிவுக்கு ஆளாகாமல் இருக்க கடவுளால் நமக்கு தரப்பட்டுள்ள காலத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். கிறிஸ்துவின் எச்சரிக்கையை சரியாக புரிந்துகொள்ளும்போது, நாம் கடவுளுக்கு உகந்த முறையில் தூயவர்களாய் வாழ முடியும்.