Friday, June 28, 2013

ஜூன் 30, 2013

பொதுக்காலம் 13-ம் ஞாயிறு
லூக்கா 9:51-62

   அக்காலத்தில் இயேசு விண்ணேற்றம் அடையும் நாள் நெருங்கி வரவே, எருசலேமை நோக்கிச் செல்லத் தீர்மா னித்து, தமக்கு முன் தூதர்களை அனுப்பினார். அவருக்கு இடம் ஏற்பாடு செய்வதற்காக அவர்கள் சமாரியருடைய ஓர் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார்கள்.
   அவர் எருசலேம் செல்லும் நோக்கமாயிருந்ததால் அவர் கள் அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய சீடர் கள் யாக்கோபும் யோவானும் இதைக் கண்டு, "ஆண்டவரே, வானத்திலிருந்து தீ வந்து இவர்களை அழிக்குமாறு செய் யவா? இது உமக்கு விருப்பமா?'' என்று கேட்டார்கள். அவர் அவர்கள் பக்கம் திரும்பி, அவர்களைக் கடிந்துகொண்டார். பின்பு அவர்கள் வேறோர் ஊருக்குச் சென்றார்கள்.
   அவர்கள் வழி நடந்தபோது ஒருவர் அவரை நோக்கி, "நீர் எங்கே சென்றாலும் நானும் உம்மைப் பின்பற்றுவேன்'' என்றார். இயேசு அவரிடம், "நரிகளுக்குப் பதுங்குக் குழிகளும், வானத்துப் பறவைகளுக்குக் கூடுகளும் உண்டு, மானிட மகனுக்கோ தலை சாய்க்கக்கூட இடமில்லை'' என்றார். இயேசு மற்றொருவரை நோக்கி, "என்னைப் பின்பற்றி வாரும்'' என் றார். அவர், "முதலில் நான் போய் என் தந்தையை அடக்கம் செய்துவிட்டுவர அனுமதியும்'' என்றார். இயேசு அவரைப் பார்த்து, "இறந்தோரைப் பற்றிக் கவலை வேண்டாம். அவர்கள் அடக்கம் செய்யப்படுவார்கள். நீர் போய் இறையாட்சியைப் பற்றி அறிவியும்'' என்றார். வேறொருவரும், "ஐயா, உம்மைப் பின்பற்றுவேன்; ஆயினும் முதலில் நான் போய் என் வீட்டில் உள்ளவர்களிடம் விடைபெற்று வர அனுமதியும்'' என்றார். இயேசு அவரை நோக்கி, "கலப்பையில் கை வைத்தபின் திரும்பிப் பார்ப்பவர் எவரும் இறையாட்சிக்கு உட்படத் தகுதியுள்ளவர் அல்ல'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தன்னைப் பின்பற்றுமாறு நம் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதைக் காண்கிறோம். இறைத் தந்தையின் திருவுளத்தை நிறைவேற்றுவதையே, தன் வாழ்வின் குறிக்கோளாக கொண்டிருந்த இயேசு, நாமும் இறைவனின் திருவுளத்தை நிறை வேற்ற அழைக்கிறார். ஆண்டவர் இயேசுவை ஏற்றுக்கொள்ளாத சமாரியரின் ஊரை அழித்து விட வேண்டுமென்று, யாக்கோபும் யோவானும் தீவிரம் காட்டுகிறார்கள். ஆனால் கடவுளின் விருப்பம் 'அழிவல்ல மனமாற்றமே' என்பதை இயேசு உணர்த்துகிறார். இவ்வுலகில் தலை சாய்க்கக்கூட இடம் இல்லாதவராக வாழ்நாட்களை செலவிட்ட இயேசுவைப் பின்பற்ற நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவைப் பின்பற்ற வேண்டுமானால், உலகப் பொருட்களையும் உறவுகளையும் ஒன்றுமில்லாததாக கருதும் மனநிலை நம்மில் உருவாக வேண்டும். இயேசு வழங்கும் விடுதலை வாழ்வில் பங்கேற்க விரும்பினால், திரும்பி பார்க்காமல் அவரைப் பின் தொடர வேண்டும். தூய ஆவியின் தூண்டுதலுக்கு பணிந்து இயேசுவின் சீடர்களாக வாழும் போது, நாம் இறையரசை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, June 21, 2013

ஜூன் 23, 2013

பொதுக்காலம் 12-ம் ஞாயிறு

லூக்கா 9:18-24

   அக்காலத்தில் இயேசு தனித்து இறைவனிடம் வேண்டிக் கொண்டிருந்தபோது சீடர் மட்டும் அவரோடு இருந்தனர். அப்போது அவர்களிடம், "நான் யார் என மக்கள் சொல்கி றார்கள்?'' என்று அவர் கேட்டார். அவர்கள் மறுமொழியாக, "சிலர் திருமுழுக்கு யோவான் எனவும் வேறு சிலர் எலியா எனவும் மற்றும் சிலர் முற்காலத்து இறைவாக்கினருள் ஒருவர் உயிர்த்தெழுந்துள்ளார் எனவும் சொல்கின்றனர்'' என்றார்கள். "ஆனால் நீங்கள் நான் யார் எனச் சொல்கி றீர்கள்?'' என்று அவர்களிடம் அவர் கேட்டார். பேதுரு மறுமொழியாக, "நீர் கடவுளின் மெசியா'' என்று உரைத்தார். இதை யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அவர்களிடம் அவர் கண்டிப்பாய்க் கூறினார். மேலும் இயேசு, "மானிட மகன் பலவாறு துன்பப்படவும் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர் ஆகியோ ரால் உதறித் தள்ளப்பட்டுக் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாளில் உயிருடன் எழுப்பப் படவும் வேண்டும்'' என்று சொன்னார். பின்பு அவர் அனைவரையும் நோக்கி, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து தம் சிலுவையை நாள்தோறும் தூக்கிக் கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில், தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவ ரும் அதை இழந்துவிடுவார். என்பொருட்டுத் தம் உயிரை இழக்கும் எவரும் அதைக் காத்துக் கொள்வார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, தந்தையாம் கடவுளின் மீட்புத் திட்டத்தை நிறைவேற்றும் நாள் நெருங்கிவிட்டதை உணர்ந்தவராய் பேசுவதைக் காண்கிறோம். தனது மரணத்துக்கு முன், தன்னை சீடர்கள் எவ்வாறு புரிந்து வைத்திருக்கின்றனர் என்பதை சோதித்தறிகிறார். அவர்களைப் பற்றித் தனக்கு தெரியாது என்பதற்காக அன்று, தன்னைப் பற்றிய விழிப்பு ணர்வை சீடர்கள் பெறுவதற்காகவே இயேசு இந்த கேள்வியைக் கேட்கிறார். இவ்வளவு காலம் தன்னோடு இருந்தும், தன்னைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் வாழ்ந்திருப்பதை சீடர் கள் புரிந்துகொள்ளச் செய்கிறார். இயேசுவோடு இருந்தால் அற்புதங்களையும், அதிசயங் களையும் அனுபவிக்கலாம் என்று அலைந்து திரிந்த சீடர்களுக்கு தன் வாழ்வின் உண்மை நோக்கத்தை விளக்குகிறார். "மானிட மகன் பலவாறு துன்பப்படவும், கொலை செய்யப் படவும் வேண்டும்." நம் ஆண்டவரைப் பின்பற்ற விரும்பும் எவரும் சிலுவையை தூக்கிக் கொண்டே அவரைப் பின்பற்ற முடியும். இயேசுவின் பொருட்டு உயிரை இழக்க முன்வரும் போது, அவர் தரும் வாழ்வை நாம் பெற்றுக்கொள்ள முடியும்.

Friday, June 14, 2013

ஜூன் 16, 2013

பொதுக்காலம் 11-ம் ஞாயிறு
லூக்கா 7:36-8:3

   அக்காலத்தில் பரிசேயருள் ஒருவர் இயேசுவைத் தம் மோடு உண்பதற்கு அழைத்திருந்தார். அவரும் அந்தப் பரி சேயருடைய வீட்டிற்குப் போய்ப் பந்தியில் அமர்ந்தார். அந் நகரில் பாவியான பெண் ஒருவர் இருந்தார். இயேசு பரிசே யருடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்பது அவருக்கு தெரிய வந்தது. உடனே அவர் நறுமணத் தைலம் கொண்ட படிகச் சிமிழைக் கொண்டு வந்தார். இயேசுவுக்குப் பின்னால் கால்மாட்டில் வந்து அவர் அழுதுகொண்டே நின் றார்; அவருடைய காலடிகளை தம் கண்ணீரால் நனைத்து, தம் கூந்தலால் துடைத்து, தொடர்ந்து முத்தமிட்டு, அக் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார்.
   அவரை அழைத்த பரிசேயர் இதைக் கண்டு, "இவர் ஓர் இறைவாக்கினர் என்றால், தம்மைத் தொடுகிற இவள் யார், எத்தகையவள் என்று அறிந்திருப்பார்; இவள் பாவியாயிற்றே" என்று தமக்குள்ளே சொல்லிக் கொண்டார். இயேசு அவரைப் பார்த்து, "சீமோனே, நான் உமக்கு ஒன்று சொல்லவேண்டும்" என்றார். அதற்கு அவர், "போதகரே, சொல்லும்" என்றார். அப் பொழுது அவர், "கடன் கொடுப்பவர் ஒருவரிடம் ஒருவர் ஐந்நூறு தெனாரியமும் மற்றவர் ஐம்பது தெனாரியமுமாக இருவர் கடன் பட்டிருந்தனர். கடனைத் தீர்க்க அவர்களால் முடி யாமற்போகவே, இருவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்துவிட்டார். இவர்களுள் யார் அவரிடம் மிகுந்த அன்பு செலுத்துவார்?'' என்று கேட்டார். சீமோன் மறுமொழியாக, "அதிகக் கடனை யாருக்குத் தள்ளுபடி செய்தாரோ அவரே என நினைக்கிறேன்" என்றார். இயேசு அவ ரிடம், "நீர் சொன்னது சரியே" என்றார்.
   பின்பு அப்பெண்ணின் பக்கம் அவர் திரும்பி, சீமோனிடம், "இவரைப் பார்த்தீரா? நான் உம்முடைய வீட்டிற்குள் வந்தபோது நீர் என் காலடிகளைக் கழுவத் தண்ணீர் தரவில்லை; இவரோ தம் கண்ணீரால் என் காலடிகளை நனைத்து அவற்றைத் தமது கூந்தலால் துடைத் தார். நீர் எனக்கு முத்தம் கொடுக்கவில்லை; இவரோ நான் உள்ளே வந்ததுமுதல் என் காலடி களை ஓயாமல் முத்தமிட்டுக்கொண்டே இருக்கிறார். நீர் எனது தலையில் எண்ணெய் பூச வில்லை; இவரோ என் காலடிகளில் நறுமணத் தைலம் பூசினார். ஆகவே நான் உமக்குச் சொல்கிறேன்: இவர் செய்த பல பாவங்கள் மன்னிக்கப்பட்டன. ஏனெனில் இவர் மிகுதியாக அன்பு கூர்ந்தார். குறைவாக மன்னிப்புப் பெறுவோர் குறைவாக அன்பு செலுத்துவோர் ஆவர்" என்றார்.
   பின்பு அப்பெண்ணைப் பார்த்து, "உம் பாவங்கள் மன்னிக்கப்பட்டன" என்றார். "பாவங்களை யும் மன்னிக்கும் இவர் யார்?" என்று அவரோடு பந்தியில் அமர்ந்திருந்தவர்கள் தங்களுக்குள் சொல்லிக்கொண்டார்கள். இயேசு அப்பெண்ணை நோக்கி, "உமது நம்பிக்கை உம்மை மீட்டது; அமைதியுடன் செல்க" என்றார்.
   அதற்குப் பின் இயேசு நகர் நகராய், ஊர் ஊராய்ச் சென்று இறையாட்சி பற்றிய நற்செய்தி யைப் பறைசாற்றி வந்தார். பன்னிருவரும் அவருடன் இருந்தனர். பொல்லாத ஆவிகளினின் றும் நோய்களினின்றும் குணமான பெண்கள் சிலரும், ஏழு பேய்கள் நீங்கப்பெற்ற மகதலா மரியாவும் ஏரோதுவின் மாளிகை மேற்பார்வையாளர் கூசாவின் மனைவி யோவன்னாவும் சூசன்னாவும் மேலும் பல பெண்களும் அவரோடு இருந்தார்கள். இவர்கள் தங்கள் உடைமை களைக் கொண்டு அவருக்குப் பணிவிடை செய்து வந்தார்கள்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, பாவியான ஒரு பெண்ணின் பாவங்களை மன்னித்து புது வாழ்வு அளிப்பதைக் காண்கிறோம். இயேசு பரிசேயரான சீமோனுடைய வீட்டில் உணவு அருந்தப் போகிறார் என்ற செய்தியைக் கேட்ட அப்பெண், இயேசுவால் தனது வாழ்வை மாற்ற முடியும் என நம்புகிறார். அந்த நம்பிக்கைக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில், இயேசுவின் காலடிகளை கண்ணீரால் கழுவி கூந்தலால் துடைத்து, நறுமணத் தைலம் பூசுகிறார். இந்நிகழ்வு அப்பெண்ணின் மனமாற்றத்தை வெளிப்படுத்துவதைக் காண்கிறோம். அவர் தன்னை முழுவதுமே இயேசுவின் காலடிகளில் அர்ப்பணித்து இயேசுவின் இரக்கத் தைப் பெறுகிறார். அன்பின் வழியாக இயேசுவின் மனதை வென்றதால், அப்பெண்ணின் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. துன்பச் சூழல்களால் நாம் கடவுளிடம் இருந்து விலகி இருந்தாலும், நம்பிக்கையோடும் அன்போடும் மீண்டும் அவரைத் தேடி வரும்போது, அவரது அன்பையும் மன்னிப்பையும் நாம் உணர முடியும்.

Friday, June 7, 2013

ஜூன் 9, 2013

பொதுக்காலம் 10-ம் ஞாயிறு
லூக்கா 7:11-17

   அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென் றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவரு டன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்த போது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார். அருகில் சென்று பாடையைத் தொட் டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொ ழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்ச முற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

சிந்தனை:
  இன்றைய நற்செய்தியில் நாம் இரண்டு ஊர்வலங்களைப் பார்க்கிறோம். ஒன்று வாழ்வ ளிக்கும் இளைஞர் இயேசுவையும், மற்றொன்று இறந்துபோன நயீன் நகர இளைஞரையும் மையப்படுத்தியதாக உள்ளன. சாவின் காட்சியும் வாழ்வின் மாட்சியும் நகர வாயிலில் சந்திப்பதைக் காண்கிறோம். நாசரேத் கைம்பெண்ணின் ஒரே மகனான இயேசு, தன் ஒரே மகனை இழந்த நயீன் நகர கைம்பெண்ணின் பரிதாப நிலையை உணர்கிறார். மகனின் இழப்பால் ஆறுதல் இன்றி தவிக்கும் கைம்பெண்ணுக்கு உயிர்ப்பின் மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறார். பாடையைத் தொட்டு, "இளைஞனே, எழுந்திடு!" என்று இயேசு கூறியதும், இறந்தவர் உயிர் பெறுவதைக் காண்கிறோம். இயேசுவின் வார்த்தைகள் உயிர் அளிப்பவை, வாழ்வு தருபவை என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது வாழ்வும் புத்துயிர் பெறும்.

Saturday, June 1, 2013

ஜூன் 2, 2013

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
லூக்கா 9:11-17

   அக்காலத்தில் இயேசு மக்களை வரவேற்று இறையாட்சி யைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர் களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களி டம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன் களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்'' என்றார்கள். ஏனெ னில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற் றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவ ரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

சிந்தனை:
   நாம் இன்று, கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழாவை கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு உணவாக அளிப்பதை காண்கிறோம். இந்நிகழ்வு, கிறிஸ்துவின் நற்கருணை விருந் துக்கு முன் அடையாளமாக இருக்கிறது. தமது சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலை நிறுத்தும் அடையாளமாக, இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். கிறிஸ்துவின் திரு விருந்தில் அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை நாம் அறிவிக்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத் திலும் மறைபொருளாக நம்முடன் உறைந்துள்ள இயேசுவின் உடனிருப்பை முழுமையாக உணர நாம் அழைக்கப்படுகிறோம். நற்கருணையில் கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம், அவரது மறையுடல் உறுப்புகள் என்பதை உணரும்போது ஒற்றுமையுடன் அவருக்கு சான்றுபகர முடியும்.