Sunday, December 25, 2011

டிசம்பர் 25, 2011

குழந்தையாக பிறந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக அமைதியை கொணர்கிறார் - திருத்தந்தை

   கிறிஸ்து பிறப்பு பெருவிழா திருவிழிப்புத் திருப்பலியை 24ம் தேதி சனிக்கிழமை உள்ளூர் நேரம் முன்னிரவு 10 மணிக்கு உரோம் தூய பேதுரு பேராலயத்தில் துவக்கிய திருத்தந்தை தன் மறையுரையில், வலுவற்ற குழந்தை யா அவதரித்திருக்கும் இயேசு பாலன் தன் வல்லமை யினை வெளிப்படுத்த வேண்டும் என இறைஞ்சினார்.
   "ஒரு குழந்தை நமக்குப் பிறந்துள்ளார்; ஓர் ஆண்மகவு நமக்குத் தரப்பட்டுள்ளார்; ஆட்சிப் பொறுப்பு அவர் தோள்மேல் இருக்கும்; அவர் திருப்பெயரோ வியத்தகு ஆலோசகர், வலிமைமிகு இறைவன், என்றுமுள தந்தை, அமைதியின் அரசர் என்று அழைக்கப்படும். அவரது ஆட்சியின் உயர்வுக்கும் அமைதி நிலவும் அவரது அரசின் வளர்ச்சிக்கும் முடிவு இராது" என்ற இறைவாக்கினர் எசாயா நூல் 9ம் பிரிவின் வார்த்தைகளை மேற்கோள் காட்டி, வலிமையற்ற நிலையில் அக்குழந்தை பிறந்தாலும் அதுவே வல்லமையுள்ள கடவுள் என்பதை மீண்டும் எடுத்துரைத்தார் திருத்தந்தை. அனைத்துத் தேவைகளுக்கும் பிறரையேச் சார்ந்திருக்கும் நிலையி லுள்ள இக்குழந்தை வழங்கும் அமைதிக்கு முடிவே இராது எனவும் தனது மறையுரையில் எடுத்தியம்பினார் பாப்பிறை.
   குழந்தையாம் இந்த இறைவன் வன்முறைகளுக்கு எதிராக ஒரு செய்தியைக் கொணர்கிறார், அதுவே அமைதி. இவ்வுலகம் மீண்டும் மீண்டும் பல்வேறு இடங்களில் பல்வேறு வழிகளில் வன்முறைகளால் அச்சுறுத்தப்பட்டுள்ள இவ்வேளையில் நாம் இறைவனை நோக்கி, "இறைவா, உம் குழந்தை நிலையையும் குழந்தைக்குரிய சக்தியற்ற நிலையையும் கண்டு அன்பு கூர்கிறோம். ஆனால் அதேவேளை, இவ்வுலகின் வன் முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள யாம், உம் வல்லமையை வெளிப்படுத்துமாறு இறைஞ்சு கிறோம். மக்களை ஒடுக்குவோரின் கொடுங்கோலை ஒடித்தெறியும். அமளி நிறைந்த போர்க்களத்தில் போர்வீரன் அணிந்திருந்த காலணிகளையும், இரத்தக் கறைபடிந்த ஆடைகள் அனைத்தையும் நெருப்புக்கு இரையாக எரித்தருளும். அதன் வழி இவ்வுலகில் உம் அமைதி வெற்றிவாகைச் சூடுவதாக" என வேண்டுவோம்.
   இவ்வாறு தன் இரவுத் திருப்பலி மறையுரையின்போது குழந்தை இயேசுவை நோக்கிய செபத்தை முன்வத்தார் திருத்தந்தை.

Tuesday, November 1, 2011

நவம்பர் 1, 2011

இயேசுவைப் பற்றிக்கொண்டு பல்வேறு வழிகள் மூலம்
நாமும் புனிதத்துவத்தை அடையலாம் - திருத்தந்தை

   அனைத்துப் புனிதர்கள் பெருவிழாவையொட்டி, இச் செவ்வாயன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த மக்களுக்கு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, வாழ்வின் பல்வேறு வழிகள் மூலம் புனிதர்களாக மாறிய திருச் சபையின் இந்தப் புனிதர்கள் கூட்டம், இயேசுவே நமது இறுதி நம்பிக்கை என்பதையும், அவரை மையமாகப் பற்றிக்கொண்டு நாம் பல்வேறு வழிகள் மூலம் புனிதத்துவத்தை அடையலாம் என்பதையும் சுட்டிக்காட்டுகிறது என்றார்.
   திருச்சபையை அன்பு கூர்ந்து அதனைப் புனிதப்படுத்த தன்னையேக் கையளித்த இயேசுவைப் பின்பற்றும் நாம், திருமுழுக்கின் வழியான நம் அழைப்பை ஏற்று புனிதர்களாக மாறுவதற்கான வழிகளைக் கைகொள்வோம். வாழ்வின் எல்லா நிலைகளும், அருளின் நடவடிக்கைகளாக மாறி அர்ப்பணத்துடனும் உறுதி நிலைப் பாட்டுடனும் செயல்படும்போது புனிதமாக மாறமுடியும் என மேலும் உரைத்தார் திருத்தந்தை.
   இப்புதனன்று திருச்சபையில் சிறப்பிக்கப்படும் அனைத்து ஆன்மாக்கள் விழா குறித்தும் தன் மூவேளை செப உரையில் எடுத்துரைத்த அவர், இறந்த நம் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்காக நாம் மேற்கொள்ளும் செபங்கள் அவர்களுக்கு மட்டும் உதவுவதில்லை, மாறாக நமக்காக அவர்கள் பரிந்து பேசுவதற்கும் உதவு கிறது என்று கூறினார்.
   இறந்த உறவினர்களின் கல்லறையைச் சென்றுத் தரிசிப்பது, மரணத்திற்குப் பின் வரும் நம் வாழ்வின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையையையும் பலப்படுத்துகிறது என மேலும் கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Monday, October 24, 2011

அக்டோபர் 23, 2011

அன்பின் அடையாளங்களாக திகழ்ந்தவர்கள்
புதிய புனிதர்கள் - திருத்தந்தை

   “சவேரியன் மறைபோதகர்கள்” என அழைக்கப்படும் வெளிநாட்டு மறைபோதக சவேரியார் சபையினை ஆரம்பித்த இத்தாலிய ஆயர் அருளாளர் குய்தோ மரிய கொன்ஃபோர்த்தி, பிறரன்புப் பணியாளர் ஆண்கள் சபையையும் புனித மரியின் இறை பராமரிப்பு பெண்கள் சபையையும் தொடங்கியவரும் “ஏழைகளின் தந்தை” என அழைக்கப்படுபவருமான இத்தாலியரான அருட்பணி லூயிஜி குவனெல்லா, இஸ்பெயினின் சாலமங்காவில் பிறந்து, புனித வளன் பணியாளர் பெண்கள் சபையைத் தொடங்கிய அருளாளர் போனிஃபாசியா ரொட்ரிக்கெஸ் தெ காஸ்த்ரோ ஆகிய மூவரையும் இஞ்ஞாயிறு திருப்பலியில் திருச்சபையின் புதிய புனிதர்களாக திருத்தந்தை அறிவித்தார்.
   மறைபரப்புப் பணிகளுக்கான ஆர்வத்தையும் அர்ப்பணத்தையும் தூண்டுவதை நோக்கமாகக் கொண்ட மறைபரப்பு ஞாயிறன்று, இறைவனுக்கும் அடுத்து வாழ்பவருக் குமான உயரிய அன்பின் அடையாளமாக இருந்த மூவரை புனிதர்களாக அறிவிப்பதில் தான் மகிழ்வதாக உரைத்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   முழு இதயத்தோடு இறைவனை அன்பு செய்வது, மற்றும் நம் அடுத்திருப்போரையும் நம்மைப் போல் அன்புசெய்வது என்பதை வலியுறுத்திக் கூறும் இந்த ஞாயிறு நற்செய்தியை மையமாக வைத்து இந்தப் புதிய புனிதர்கள் எவ்வாறு இறை அன்பின் சாட்சிகளாக விளங்கினார்கள் என்பதையும் தன் மறையுரையில் எடுத் துரைத்தார் பாப்பிறை.
   இத்திருப்பலிக்குப் பின் உரோம் நகரின் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த விசுவாசிகளோடு இணைந்து மூவேளை செபத்தை செபித்த திருத்தந்தை, அவர்களுக்கு வழங்கிய உரையில், இந்த மூன்று புனிதர்களும் ஆரம்பித்த துறவு சபைகளின் அங்கத் தினர்களுக்கு வாழ்த்தையும் ஊக்கத்தையும் வழங்கியதோடு, இத்தாலியின் அசிசியில் இவ்வியாழனன்று இடம்பெற உள்ள உலக அமைதிக்கான பல்மதங்களின் கூட்டம் வெற்றியடைய அன்னைமரியின் பரிந்துரையை வேண்டி செபிக்குமாறும் அனைவரிடமும் விண்ணப்பித்தார்.

Wednesday, October 19, 2011

அக்டோபர் 19, 2011

புதன் மறைபோதகம்: இறைவனின் அன்பு அவரது ஒரே மகனில் வெளிப்படுத்தப்பட்டுள்ளது - திருத்தந்தை

   கடந்த சில வாரங்களாகத் தன் புதன் மறைபோதகத்தில் திருப்பாடல்கள் குறித்து தன் கருத்துக்களை மக்களோடு பகிர்ந்து வரும் திருத்தந்தை, உரோம் நகரில் நிறைந் திருக்கும் திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கூட்டத்துக்கு இவ்வாரம் திருப்பாடல் 136 குறித்து எடுத்துரைத்தார்.
   கிறிஸ்தவ ஜெபம் குறித்த நம் மறைக்கல்விப் போதனையின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 136ஐ நோக்கி நம் பார்வையை திருப்புவோம். 'பெரும்புகழுரை' என அறியப்படும் இந்தத் திருப்பாடல், பாரம்பரியமாகப் பாஸ்காத் திருநாள் உணவின் இறுதியில் பாடப்படும் உன்னத புகழ்ப் பாடலாகும். அதன்படி பார்த்தால், இயேசுவும் அவரின் சீடர்களும் கூட இப்பாடலை இறுதி இரவு உணவின்போது பாடியிருக்க வேண்டும். இந்தத் திருப்பாடலானது 'பிரார்த்தனை' எனும் வடிவத்தைத் தாங்கி, இவ்வுலகப் படைப்பின்போதும் இஸ்ரயேலர்களின் வரலாற்றிலும் இறைவன் ஆற்றிய வல்ல செயல் களைப் புகழ்வதாக உள்ளது. அவரது மீட்புச் செயல்கள் குறித்துக் கூறும் இத்திருப்பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் 'என்றும் உள்ளது அவரது பேரன்பு' என முடிகிறது. அகிலத்தின் ஒழுங்கமைவுச் சார்ந்த அழகிலும், அடிமைத்தளையிலிருந்து இஸ்ரயேலர்களின் விடுதலை மற்றும் வாக்களிக்கப்பட்ட இடம் நோக்கிய தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களின் திருப்பயணம் ஆகியவைகளிலும் வெளிப்படுத்தப்பட்டது இறைவனின் மாறாத அன்பே. இறைவனின் வல்ல செயல்கள் குறித்த இந்த உயரிய பிரார்த்தனையை நாம் பாடும்போது, அவரின் கருணைநிறை மற்றும் என்றும் நிலைத்திருக்கும் அன்பின் ஆழமானது, வரவிருக்கும் அவரின் ஒரே மகனில் முழுவதுமாக வெளிப்படுத்தப்பட்டிருப்பதற்கு நன்றி கூறுகிறோம். நம் தந்தையாம் இறைவன் நம்மிடம் எத்துணை அன்பு கொண்டுள்ளார் என்பதையும், நாம் கடவுளின் மக்கள் என அழைக்கப்படுவதையும், கடவுளின் மக்களாகவே இருப்பதையும் நாம் கிறிஸ்துவில் தெளிவாகக் காண்கிறோம்.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 17, 2011

அக்டோபர் 16, 2011

விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை

   இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கம் தொடங்கியதன் 50ஆம் ஆண்டை முன்னிட்டு விசுவாசத்தின் ஆண்டை அறிவித்திருக்கிறார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   புதிய நற்செய்தி அறிவிப்பாளர்களுக்கென வத்திக்கான் புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தில் இஞ்ஞாயிறு காலை திருப்பலி நிகழ்த்தி ஆற்றிய மறையுரையில் திருத்தந்தை விசுவாச ஆண்டை அறிவித்தார். இந்த ஆண்டானது, 2012 அக்டோபர் 11ந்தேதி தொடங்கி கிறிஸ்து அரசர் பெருவிழாவாகிய 2013 நவம்பர் 24 அன்று நிறைவடையும்.
   முழுமையாக மனம் மாறிக் கடவுளிடம் தன்னை அர்ப்பணிக்கும் திருஅருளின் மற்றும் அர்ப்பணத்தின் காலமாகவும், அவரில் நம் விசுவாசத்தை உறுதிப்படுத்தி மகிழ்ச்சியோடு அவரை அறிவிக்கும் காலமாகவும் மனிதரைப் பாலைவன வாழ்விலிருந்து வெளியே கொணருவதற்கு அகில உலகத் திருச்சபையின் பணிக்கு புதிய உந்துதலைக் கொடுப்ப தாகவும் இவ்வாண்டு இருக்கும் எனக் கூறினார் திருத்தந்தை.
   மேலும், ஞாயிறு நண்பகலில் வத்திக்கான் பேதுரு சதுக்கத்தில் கூடியிருந்த சுமார் நாற்பதாயிரம் திருப்பயணிகளுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, இந்த விசுவாச ஆண்டு குறித்தத் திட்டங்களை விளக்கினார். திருச்சபையின் பணியானது கிறிஸ்துவைப் போன்று கடவுளின் இறையாட்சியை நினைவுகூர்ந்து கடவுள் பற்றிப் பேசுவதாகும், குறிப்பாக தங்களது தனித்துவத்தை இழந்திருக்கும் கிறிஸ்தவர்களுக்கு கடவுள் பற்றி எடுத்துரைப்பதாகும் என்றும் அவர் கூறினார்.
   தனது அப்போஸ்தலிக்கக் கடிதத்தின் மூலமும் இந்த விசுவாசத்தின் ஆண்டு பற்றி விளக்கியுள்ள திருத்தந்தை, கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு வெளியிடப் பட்டதன் 20ம் ஆண்டு அக்டோபரில் நிறைவடைவதால் இந்த விசுவாச ஆண்டு அக்டோபரில் தொடங்குகிறது என்று குறிப்பிட்டுள்ளார். இவ்வாண்டை மதிப்பும் பயனும் நிறைந்த விதமாகக் கொண்டாட வேண்டுமென்று சகோதர ஆயர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுப்பதாகவும், விசுவாசம் பற்றிய அறிவைப் பெறுவதற்கு விசுவாசம் பற்றியத் தெளிவான அறிவைப் பெறுவதற்கு விலைமதிப்பில்லா மற்றும் இன்றியமையாத கருவி கத்தோலிக்கத் திருச்சபையின் மறைக்கல்வி ஏடு என்றும் திருத்தந்தை கூறியுள்ளார்.

Wednesday, October 12, 2011

அக்டோபர் 12, 2011

புதன் மறைபோதகம்: ஆண்டவரின் மாபெரும் செயல்களால் நாம் பெருமகிழ்ச்சி அடைகின்றோம் - திருத்தந்தை

   இன்று தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்களுக்கு 'கிறிஸ்தவ செபம்' குறித்த தன் புதன் பொது மறைபோதகத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கிறிஸ்தவ செபம் குறித்த நம் போதனைகளின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 126-ஐ நாம் சிந்திப் போம். பபிலோனிய நாடுகடத்தலில் இருந்து இஸ்ரயேலர் களை திருப்பி அழைத்து வருவதாக வாக்கு தந்த இறைவன் பிரமாணிக்கமுள்ளவராக இருந்ததற்கு நன்றி கூறும் மகிழ்ச்சி நிறை செபமாக இந்தத் திருப்பாடல் 126 உள்ளது. 'ஆண்டவர் நமக்கு மாபெரும் செயல் புரிந்துள்ளார்; அதனால் நாம் பெரு
மகிழ்ச்சி யுறுகின்றோம்.'
   நம் வாழ்வு நடவடிக்கைகளிலும், சிறப்பாக, கசப்பானதாக கருமேகம் சூழ்ந்து தோன்றியதாகத் தெரிந்த காலங்களிலும் இறைவன் நம்மீது காட்டிய அக்கறையை நினைவுகூரும்போது, அதே இஸ்ராயேல் மக்கள் கொண்டிருந்த மகிழ்ச்சி மற்றும் நன்றி உணர்வை உள்ளடக்கியதாக நம் செபங்களும் இருக்க வேண்டும். இறைமீட்பு எனும் உதவியை இஸ்ரயேலர்களுக்குத் தொடர்ந்து வழங்குமாறு இறைவனை வேண்டுகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'கண்ணீரோடு விதைப்பவர்கள் அக்களிப்போடு அறுவடை செய்வார்கள்' என்கிறார்.
   அமைதியான முறையில் தன் முதிர்ச்சி நோக்கி வளரும் விதை என்ற இந்த உருவகம் நமக்கு சொல்ல வருவது என்னவெனில், கடவுளின் மீட்பு என்பது ஏற்கனவே நாம் பெற்றுவிட்ட கொடை, நம் நம்பிக்கையின் நோக்கம், வருங்காலத்தில் நிறைவேற்றப் படவிருக்கும் ஒரு வாக்குறுதி. இதே உருவகத்தை இயேசு கிறிஸ்து, சாவிலிருந்து வாழ்வுக்கும், இருளிலிருந்து ஒளிக்கும் கடந்து செல்வதைப் பற்றி விளக்கும்போது பயன்படுத்துகிறார். இந்த கடந்து செல்தல் என்பது, இயேசுவில் விசுவாசம் கொண்டு அவரின் பாஸ்கா மறையுண்மையில் பங்கு கொள்ளும் ஒவ்வொருவர் வாழ்விலும் இடம்பெற வேண்டியது. இந்த 126ம் திருப்பாடலை செபிக்கும் நாம், 'வல்லவராம் கடவுள் எனக்கு அரும்பெரும் செயல்கள் செய்துள்ளார்' என்ற அன்னை மரியின் பாடல் வரிகளை எதிரொலிப்பதுடன், கடவுளின் வாக்குறுதி கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கையுடன் காத்திருப்போம்.
   தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத்தில் குழுமியிருந்த திருப்பயணிகள் மற்றும் சுற்றுலாப்பயணிகளுக்கு கிறிஸ்தவ செபம் குறித்த இவ்வார மறையுரையை இவ்வாறு வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   பின்னர் அவர், கடந்த ஞாயிறன்று எகிப்தின் கெய்ரோவில் இடம்பெற்ற வன்முறைகள் குறித்த தன் ஆழ்ந்த கவலையையும் வெளியிட்டார். இவ்வன்முறையால் பாதிக்கப் பட்டுள்ள குடும்பங்களுடனும், அமைதியான இணக்க வாழ்வுக்கான அச்சுறுத்தலை எதிர் நோக்கும் எகிப்து குடும்பங்களுடனும் என் ஒருமைப்பாட்டை தெரிவிக்கின்றேன். நீதியையும் மனித குல விடுதலை மற்றும் மாண்பையும் அடிப்படையாகக் கொண்ட உண்மையான அமைதியை சமூகம் பெற ஒவ்வொருவரும் செபிக்குமாறு வேண்டுகிறேன். தேசிய ஐக்கிய நலனுக்காக, ஒவ்வொருவரின் குறிப்பாக சிறுபான்மையினரின் உரிமைகள் மதிக்கப்பட எகிப்து ஆட்சியாளர்களும் அரசியல் மற்றும் மதத்தலைவர்களும் தங்கள் அனைத்து ஆதாரங்களையும் பயன் படுத்த ஊக்கமளிக்கிறேன், என எகிப்து நாட்டிற்கான தன் விண்ணப்பத்தை முன் வைத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 10, 2011

அக்டோபர் 9, 2011

நவீன வாழ்க்கைக்கு மௌனம் தேவை - திருத்தந்தை

   தென் இத்தாலியின் லமேசியா டெர்மே விசுவாசிகள் தங்களது கடும் சமுதாயப் பிரச்சனைகளை அன்னை மரியாவிடம் அர்ப்பணிக்குமாறு கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடும் வேலைவாய்ப்பின்மையும் பெருமளவாகக் குற்றங்களும் இடம் பெறும் இத்தாலியின் மிக ஏழைப் பகுதியான கலாபிரியாப் பகுதிக்கு இந்ஞாயிறன்று ஒருநாள் மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்ட திருத்தந்தை, அப்பகுதியிலுள்ள பல அன்னைமரியா திருத்தலங்கள் பற்றிக் குறிப்பிட்டு அம்மக்களின் பாரம்பரிய மாதா பக்தியையும் பாராட்டினார். பொதுநலனைக் கட்டி எழுப்புவதில் விசுவாசிகள், தல ஆயர்களுடன் இணைந்து செயல்படுமாறும் வலியுறுத்தினார் திருத்தந்தை.

   மேலும், ஞாயிறு மாலை கலாபிரியாவிலுள்ள கர்த்தூசியன் துறவு இல்லத்திற்கு சென்று உரையாற்றிய திருத்தந்தை, இக்காலத்துச் சமூகத்தில் அமைதி இல்லாமல் இருப்பது, பலரை மிகவும் பதட்டநிலைக்கு உள்ளாக்குகிறது என்று கூறினார். 
   இப்பகுதியின் பல இளையோர், சமுதாயத்தில் காணப்படும் வெறுமையை எதிர்கொள்ளப் பயந்து, வெறுமையாக உணரும் நேரங்களை இசையிலும் வேறு பல பொழுதுபோக்கிலும் செலவிடுகிறார்கள் என்றார் அவர். அமைதியிலும் தனிமையிலும் நேரத்தைச் செலவிடுவது இறைப் பிரசன்னத்தை உணர உதவும் என்றும் திருத்தந்தை கூறினார்.
   இந்தத் துறவு மடம், 900த்துக்கும் மேற்பட்ட ஆண்டுகளுக்கு முன்னர், ஜெர்மானியரும் கர்த்தூசியன் துறவு சபையைத் தொடங்கியவருமான புனித ப்ரூனோவால் உருவாக்கப்ட்டது.
   இத்துறவு மடம் அமைந்திருக்கும் செர்ரா சான் ப்ரூனோ என்ற ஊருக்கு இஞ்ஞாயிறு மாலை திருத்தந்தை சென்றபோது முப்பதாயிரத்துக்கு மேற்பட்ட மக்கள் அவரை வரவேற்றனர்.

Thursday, October 6, 2011

அக்டோபர் 5, 2011

புதன் மறைபோதகம்: நமக்காக தன் வாழ்வையே
கையளித்த நல்லாயன் இயேசு - திருத்தந்தை

   உரோம் நகருக்கு வரும் சுற்றுலா மற்றும் திருப்பயணிகளின் எண்ணிக்கை அதிகமாகக் காணப் படுவதால், திருத்தந்தையின் இவ்வாரப் புதன் மறை போதகம் தூய பேதுரு பசிலிக்கா பேராலய வளாகத் திலேயே இடம்பெற்றது. கிறிஸ்தவ செபம் குறித்த நம் மறைபோதகத்தின் தொடர்ச்சியாக இன்று திருப்பாடல் 23 குறித்து நோக்குவோம் எனத் தன் உரையைத் துவக்கினார் பாப்பிறை.
   'ஆண்டவரே என் ஆயர்; எனக்கேதும் குறையில்லை' - மிக நேர்த்தியான முறையில் ஆயர் மற்றும் மேய்ச்சல் குறித்து விவரிப்பதாகவும், மக்களால் அதிக அளவு விரும்பப்படுவதாகவும் இருக்கும் இந்த திருப்பாடல் 23, செபத்தின் முக்கிய பண்புக்கூறாக இருக்கும் இறைவனின் அன்புப் பராமரிப்பில் கொள்ளும் தீவிர நம்பிக்கை குறித்துப் பேசுகிறது. பசும்புல் நிலத்தை நோக்கி ஒருவனை வழிநடத்திச் செல்லும் நல் ஆயனாகவும், அவன் அருகேயிருந்து அவனை அனைத்து ஆபத்துகளில் இருந்தும் காப்பவராகவும் இறைவனைக் காட்டி இத்திருப் பாடலைத் துவக்குகிறார் திருப்பாடல் ஆசிரியர். 'அமைதியான நீர்நிலைகளுக்கு எனை அழைத்துச் செல்வார். அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்.' அடுத்தக்காட்சியோ, ஆயனின் கூடாரம் நோக்கிச் செல்கின்றது. இக்கூடாரத்தில் இறைவன், அவனை ஒரு விருந்தாளியாக வரவேற்று, உணவு, எண்ணெய், திராட்சை இரசம் எனும் கொடைகளை வழங்குகிறார். 'எனக்கொரு விருந்தினை ஏற்பாடு செய்கின்றீர்; என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்; எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.'
   ஆண்டவரின் இல்லத்தில் நெடுநாள் வாழ்வதற்கென வழி நடக்கும் பாதையில் நன்மைத்தனம் மற்றும் இரக்கத்தின் துணை கொண்டு இறைவனின் பாதுகாப்பு, திருப்பாடல் ஆசிரியருடன் இணைந்து செல்கிறது. இறைவனை இஸ்ராயேலின் ஆயனாகக் காணும் இந்த வலிமை மிகுந்த உருவகம், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் எகிப்திலிருந்து வெளியேறிய திலிருந்து, தங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நிலத்தை வந்தடையும் வரையான மத வரலாற்றில் இணைந்தே வருகிறது. இவ்வுருவகம் தன் கடைமுடிவு வெளிப்பாட்டையும் நிறைவையும் இயேசுவின் வருகையில் கண்டது. நல்லாயனாம் அவர் தன் வாழ்வையே தன் ஆடுகளுக்காகக் கையளித்தார். வானுலகில் நமக்காகக் காத்திருக்கும் மெசியாவின் விருந்திற்கு முன்னோடியாகத் தன் உடலையும் இரத்தத்தையும் கொண்ட விருந்தினை நமக்கெனத் தயாரித்தவர் அவரே.
   இவ்வாறு இப்புதன் பொது மறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, ஆப்ரிக்காவின் கொம்பு நாடுகளான திஜிபுத்தி, எத்தியோப்பியா, கென்யா, சோமாலியா, உகாண்டா ஆகியவைகளுக்கான தன் சிறப்பு விண்ணப்பத்தையும் விடுத்தார்.
   ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளின் பஞ்சம் குறித்தச் செய்திகள் தொடர்ந்து வந்த வண்ணமாகவே உள்ளன. மனித குல நெருக்கடியை சமாளிக்கும் வழிகள் குறித்து ஆராயும் நோக்கில் இங்கு கூடியிருக்கும் அந்நாட்டிற்கான குழுவுக்கு என் ஊக்கத்தை வழங்கு கின்றேன். பஞ்சத்தால் துன்புறும் மக்களுக்கான உதவிகளுக்கென ஏற்கனவே விண்ணப்பம் ஒன்றை விடுத்துள்ள கேன்டர்பரி பேராயர் அவர்களின் பிரதிநிதி ஒருவரும் இக்குழுவில் இடம்பெற்றுள்ளார். போதிய உணவு மற்றும் தண்ணீர் இன்மையாலும் நோய்களாலும் ஒவ்வொரு நாளும் உயிரிழக்கும் குழந்தைகளுக்காகவும், பெருந்துன்பங்களை அனுபவித்து வரும் நம் எண்ணற்ற சகோதர சகோதரிகளுக்காகவும் செபிக்குமாறும், உதவிகளை வழங்குமாறும் சர்வதேச சமுதாயத்திடம் மீண்டுமொருமுறை நான் விண்ணப்பிக்கின்றேன். இவ்வாறு ஆப்ரிக்கக் கொம்பு நாடுகளுக்கான விண்ணப்பத்தை விடுத்த திருத்தந்தை, அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, October 3, 2011

அக்டோபர் 2, 2011

தங்கள் காவல்தூதர்களை உதவிக்கு அழைக்க
கிறிஸ்தவர்கள் மறக்கக்கூடாது - திருத்தந்தை

   கிறிஸ்தவர்கள் தங்கள் வாழ்க்கை முழுவதற்கும் உதவி செய்வதற்குத் தங்களது காவல்தூதர்களை அழைக்குமாறு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரையில் நினைவுபடுத்தினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கோடை விடுமுறை முடிந்து முதல் முறையாக வத்திக்கானிலிருந்து மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை, அன்பு நண்பர்களே, நம் ஆண்டவர் மனித வரலாற்றில் எப்போதும் அருகிலும் செயல் திறத்துடனும் இருக்கிறார், தமது தூதர்களின் தனித்துவமிக்க பிரசன்னத் தோடு நம்மைப் பின்தொடருகிறார் என்று உரைத்தார்.
   வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில் கூடியிருந்த சுமார் இருபதாயிரம் விசுவாசிகளுக்கு உரையாற்றிய அவர், அக்டோபர் 2ம் தேதி திருச்சபை காவல் தூதர்கள் விழாவைச் சிறப்பிக்கின்றது, இவர்கள், ஒவ்வொரு மனிதன் மீதும் கடவுள் கொண்டுள்ள அக்கறையைத் தெரிவிக்கும் பணிகளைச் செய்கிறார்கள் என்றார்.
   இத்தூதர்கள், மனித வாழ்வின் தொடக்கமுதல் மரணம் வரை தங்களது இடைவிடாத பாதுகாப்பால் அவ்வாழ்வைச் சூழ்ந்துள்ளார்கள் என்றும் கூறிய திருத்தந்தை, செபமாலை அன்னையின் மணிமகுடத்தை இந்தத் தூதர்களே அலங்கரித்துள்ளார்கள் என்பதையும் சுட்டிக் காட்டினார்.
   17ம் நூற்றாண்டில் திருத்தந்தை பத்தாம் கிளமெண்ட் காவல்தூதர்கள் விழாவை அகிலத் திருச்சபையில் கொண்டு வந்தார்.
   மேலும், இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தின் அடிப்படையில் சிந்தனைகளைப் பகிர்ந்து கொண்ட திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கடவுள் தமது நண்பர்களுக்காகத் திட்டம் வைத்திருக்கிறார், ஆனால் இதற்கான மனிதனின் பதில் அவனின் பிரமாணிக்கமற்ற வாழ்வால் பின்னுக்குத் தள்ளப்படுகிறது என்று கூறினார்.
   இறைவனின் விலைமதிப்பில்லாத கொடையாகிய அவரது ஒரே மகனை ஏற்பதற்குக்கூட தற்பெருமையும் தன்னலமும் தடையாய் இருக்கின்றன, எனவே இறைவனின் திராட்சைத் தோட்டத்தில் வேலை செய்ய அழைக்கப்பட்டுள்ள ஒவ்வொருவரும் கிறிஸ்துவுக்கு முழுவதும் விசுவாசமாக இருக்கும் வாழ்வைப் புதுப்பிக்கும் பொறுப்பைக் கொண்டுள் ளார்கள் என்றார் பாப்பிறை 16ம் பெனடிக்ட்.

Wednesday, September 28, 2011

செப்டம்பர் 28, 2011

புதன் மறைபோதகம்: ஜெர்மானியர்களின் விசுவாசம் திருச்சபைக்கு நம்பிக்கை வழங்குகிறது - திருத்தந்தை

   கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரை தன் தாய் நாடான ஜெர்மனியில் நான்கு நாள் திருப்பயணத்தை நிறைவேற்றித் திரும்பியுள்ள பாப்பிறை, இப்புதன் உரோம் நகர் தூய பேதுரு பேராலய வளாகத்தில் கூடியிருந்த திருப்பயணிகளுக்கு வழங்கிய பொது மறைப் போதகத்தில் அத்திருப்பயண நிகழ்வுகள் குறித்தே எடுத்துரைத்தார்.
   ‘இறைவன் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலம் உள்ளது’ என்பது இப்பயணத்திற்கான மையக்கருத்தாக இருந்தது. நம் வாழ்விற்கான இறுதி அர்த்தத்தை வழங்குபவர் இறைவனே என்பதையும், அனைத்து நன்மைத்தனங்களின் ஆதாரமாக இருக்கும் அவரே வளமான, சுதந்திரமான மற்றும் நீதியான ஒரு சமூகத்தைக் கட்டி யெழுப்புவதற்கான நம் முயற்சிகளில் உதவுகிறார் என்பதையும் நினைவூட்டுவதாக அத்தலைப்பு இருந்தது. பெர்லினில் உள்ள ஜெர்மன் பாராளுமன்றத்தில் உரையாற்றும் பெருமையைப் பெற்றேன். மார்ட்டின் லூத்தரின் நினைவுகளோடு தொடர்புடைய எர்ஃபூர்ட் நகரில் ஜெர்மன் எவாஞ்சலிக்கல் கிறிஸ்தவ சபை அங்கத்தினர்களைச் சந்தித்து உரையாடியதுடன், கிறிஸ்தவ ஐக்கியத்திற்கான கிறிஸ்தவ ஒன்றிப்பு செப வழிபாட்டிலும் கலந்துகொண்டேன். எட்செல்ஸ்பாக்கில் மாலை செப வழிபாட்டிலும் எர்ஃபூர்ட்டில் திருப்பலியிலும் கலந்துகொண்ட போது அப்பகுதியின் ஆழமான விசுவாசப் பாரம்பரியங் களையும், கிறிஸ்தவச் சாட்சியங்களையும் நினைவுகூர்ந்ததோடு, புனிதத்துவத்தில் நிலைத்திருக்கவும் சமூகத்தின் புதுப்பித்தலுக்காக உழைக்கவும் அனைவருக்கும் அழைப்பு விடுத்தேன். இறுதியாக, ஃப்ரைய்பூர்க்கின் இரவுத் திருவிழிப்புச் சடங்கிலும், திருப்பலியிலும் இளைய சமுதாயத்தைச் சந்தித்தேன். கிறிஸ்துவின் மீதான இவர்களின் விசுவாசம் ஜெர்மன் திருச்சபையின் வருங்காலம் குறித்த நம்பிக்கைகளை வழங்குகிறது.
   இவ்வாறு, தன் ஜெர்மன் நாட்டிற்கான அண்மைத் திருப்பயணம் குறித்து உரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் வழங்கினார்.

Sunday, September 25, 2011

செப்டம்பர் 25, 2011

கடவுளின் இரக்கத்திலும் மன்னிப்பிலும் நம்பிக்கை வைக்க திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தையின் ஜெர்மன் நாட்டுக்கான இந்த திருப்பயணத்தின் நிறைவு நாளான இஞ்ஞாயிறு உள்ளூர் நேரம் காலை 10 மணிக்கு, அதாவது இந்திய நேரம் பிற்பகல் ஒரு மணி 30 நிமிடத்திற்கு ஃப்ரைபூர்க் விமான நிலையத்துக்கு அருகிலுள்ள பெரிய திடலில் ஜெர்மனி யின் 27 மறைமாவட்டங்களின் ஆயர்களுடன் கூட்டுத் திருப்பலியைத் தொடங்கினார் திருத்தந்தை. ஜெர்மன் நாட்டுக்கான திருப்பயணத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாஇத்திருப்பலியில் சுமார் ஒரு இலட்சம் விசுவாசிகள் மிகுந்த ஆர்வமுடன் பங்கு கொண்டனர். இத்திருப்பலியில் திருத்தந்தை வழங்கிய மறையுரை பின்வருமாறு:
    இன்றைய உலகில் நடக்கும் அனைத்துப் பயங்கரமான நிகழ்வுகளைப் பார்க்கும் போது கடவுள் எல்லாம் வல்லவராக இருக்க முடியாது என்று சொல்லும் இறையியலாளர் இருக்கின்றனர். ஆனால் இன்றையத் திருவழிபாட்டில், விண்ணையும் மண்னையும் படைத்த கடவுள் எல்லாம் வல்லவர் என்று அறிக்கையிடுகிறோம். அதற்காக நன்றி கூருவோம். ஆனால் கடவுள் தமது வல்லமையை நாம் நினைப்பது போலன்றி வித்தியாசமான வழியில் செயல்படுத்துகிறார். அவர் தமது படைப்புக்களின் பலவீனத்தை அறிந்திருக்கிறார். அவர் தமது மக்களின் மீட்பை விரும்புகிறார். எனினும் பயங்கரமான காரியங்கள் நம்மை மிரள வைக்கின்றன. தமது வல்லமையை இரக்கத்திலும் மன்னிப்பிலும் வெளிப்படுத்தும் அந்தக் கடவுளில் நமது நம்பிக்கையை வைப்போம். அவர் எப்போதும் நம்மோடு இருக்கிறார். குறிப்பாக ஆபத்தான மற்றும் கடும் மாற்றங்கள் நிகழும் போது அவரது இதயம் நமக்காக ஏங்குகிறது. நம்மை அடைகிறது. தீமைகளைக் கைவிட்டு அவரிடம் நம்மைக் கையளிக்க வேண்டும். எனினும் கடவுள் நமது சுதந்திரத்தை மதிக்கிறார். அதேநேரம் அவர் நம்மை வற்புறுத்துவதில்லை. இன்றைய நற்செய்தி வாசகத்தில் இரண்டு மகன்கள் பற்றிய உவமையைக் கேட்டோம். வார்த்தைகள் அல்ல, செயல்களே, அதாவது மனமாற்றம் மற்றும் விசுவாசத்தின் செயல்களே கணக்கில் எடுக்கப்படும் என்ற செய்தி இவ்வுவமையில் தெளிவாகிறது. இக்காலத்திய மொழியில் இதனைக் கூறவேண்டுமெனில், திருச்சபைக்குப் பிரமாணிக்கமில்லாமல் வாழ்பவர்களைவிட, தூய இதயத்துக்காக ஏங்கி, பாவத்தின் காரணமாகத் துன்புறுவோர் இறையரசுக்கு நெருக்கமாக இருக்கிறார்கள். அதேநேரம், திருச்சபையில் வாழ்ந்து அதற்காக உழைக்கும் ஒவ்வொருவரும் இறையரசுக்குத் தூரமாக இருக்கிறார்கள் என்று நோக்கப்படக் கூடாது. நிச்சயமாக இல்லை. மாறாக, திருச்சபையில் பணியாற்றும் அனைவருக்கும் நன்றி சொல்லும் நேரமாக இது இருக்கின்றது. ஜெர்மன் திருச்சபையில் பல சமூக மற்றும் பிறரன்பு நிறுவனங்கள் இருக்கின்றன. இவை உலகின் எல்லாப் பகுதிகளிலும் பிறரன்புப் பணிகளை நிறையவே செய்கின்றன. கிறிஸ்துவின் அன்பால் தொடப்படுவதற்குத் தன்னை அனுமதிக்கும் திறந்த இதயம் தேவையில் இருப்போருக்குத் தன்னையே வழங்குகின்றது. எனவே கடவுளோடு நமக்குள்ள உறவு என்ன எனச் சிந்திப்போம். ஞாயிறு திருப்பலியில், மறைக்கல்வியில், செபத்தில் விவிலியம் வாசிப்பதில் எனது பங்கு என்ன? தூய பேதுரு மற்றும் திருத்தூதர்களின் வழிவருபவர்களுடன் ஜெர்மன் திருச்சபை பிரமாணிக்கத்துடன் நிலைத்திருந்தால் இது, அகில கத்தோலிக்க உலகத்திற்குத் தொடர்ந்து ஆசீர்வாதமாக இருந்து வரும். எனவே ஒன்றிணைந்து உழையுங்கள். அன்பு நண்பர்களே, திருச்சபையின் புதுப்பித்தல், மனமாற்றத்திற்குத் திறந்த மனம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட விசுவாசத்தின் வழியாக மட்டுமே வரும்.

செப்டம்பர் 24, 2011

நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு
அன்னை மரியா நமக்கு உதவுகிறார் - திருத்தந்தை

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட் இந்த சனிக்கிழமை மாலைத் திருப்புகழ்மாலையில் ஆற்றிய மறையுரை: 
   அன்னை மரியா, நம் வாழ்க்கையின் நோக்கம் பற்றி  நாம்  புரிந்துகொள்ள உதவுகிறார்; மேலும் உண்மையான மகிழ்ச்சியின் பாதையைக் காட்டுகிறார். உங்களது உண்மையான மகிழ்ச்சியைத் தவிர வேறு எதையும் ஒருபோதும் விரும்பாதவரும் நன்மையானவை அனைத்தின் ஊற்றுமாகிய கடவுள், அவரது விருப்பத்திற்கேற்ப நாம் நடக்க வேண்டும் என்பதை நம்மிடம் கேட்பதற்கு உரிமை கொண்டுள்ளார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ளுங்கள் என்று அன்னைமரியா நம்மிடம் சொல்வது போல் இருக்கின்றது. இயேசு தனது தாய் கேட்பதை ஒரு பொழுதும் மறுக்கமாட்டார் என்ற தன்னிச்சையான உறுதிப்பாட்டில் வரலாறு முழுவதும் கிறிஸ்தவர்கள் அன்னை மரியாவிடம் செல்கின்றனர். மரியா நம் தாய் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையைக் கொண்டுள்ளோம். பெரும் துயரங்களை அனுபவித்த அந்தத் தாய், நமது வேதனைகளையும் உணர்வார். நமது கிறிஸ்தவ அழைப்பை வாழ்வதற்கு உதவுகிறார். கடவுள் எங்கே இருக்கிறாரோ அங்கே எதிர்காலம் இருக்கிறது. உண்மையில், கடவுளின் அன்பு நம் வாழ்வு முழுவதையும் ஆட்கொள்ள அனுமதித்தால் விண்ணகம் நமக்குத் திறந்திருக்கும்.

இளையோருக்கு திருத்தந்தையின் உரை:
   ஃப்ரைபூர்க் நகரில் திருத்தந்தை, “கிறிஸ்துவே உலகின் ஒளி” என்பதை மையமாக வைத்து, “விசுவாசத்தின் வல்லமை” பற்றி இளையோரிடம் பகிர்ந்து கொண்டார். அதன் செய்தி பின்வருமாறு:
   கிறிஸ்துவில் விசுவாசம் கொள்பவர்கள், வாழ்வின் இருளான நேரங்களில்கூட ஒளியைப் பார்க்கும் சக்தியைப் பெற்று புதிய நாளின் விடியலைக் காண்கிறார்கள். நமது மனித முயற்சிகளோ அல்லது இந்த நம் சகாப்தத்தின் தொழில்நுட்ப முன்னேற்றமோ உலகிற்கு ஒளியைக் கொண்டு வராது. நல்லதோர் நீதியான உலகை உருவாக்குவதற்கான நமது முயற்சிகள் இந்த வரையறைகளால் மீண்டும் மீண்டும் எப்படி தொடர்ந்து அடிவாங்குகின்றன என்பதை நாம் அனுபவித்து வருகிறோம். போரும் பயங்கரவாதமும், பசியும் நோய்களும், கடும் வறுமையும் இரக்கமற்ற அடக்கு முறையும் உலகில் இன்றும் இருக்கின்றன. எனவே சமுதாயத்தில் தீமையின் அனைத்து வடிவங்களையும் வேரோடு பிடுங்கி எறியுங்கள். அரைகுறைக் கிறிஸ்தவர்களாக இருக்க வேண்டாம். விசுவாச அர்ப்பணமின்றி இருப்பவர்கள் தங்களது திருச்சபைகளுக்கு எதிரிகளைவிட அதிகச் சேதங்களைக் கொண்டு வருகிறார்கள். நம்மைச் சுற்றிலும் இருளும் தெளிவற்ற நிலையும் சூழ்ந்து இருந்தாலும் நாம் ஒளியைப் பார்க்கிறோம். அந்த ஒளி சிறிய சுடராக இருந்தாலும், சக்திமிக்கதும் வெற்றி அடைய முடியாததுமான இருளைவிட சக்தியானதாக இருக்கின்றது. சாவினின்று உயிர்த்த கிறிஸ்து இந்த உலகில் சுடர் விடுகிறார். எல்லாமே நம்பிக்கை இழந்ததாகத் தெரியும் இடங்களில்கூட கிறிஸ்து தனது ஒளியை பளபளப்பாகப் பாய்ச்சுகிறார். ஒளி தனித்து இருக்காது. தன்னைச் சுற்றி இருப்பவர்களை ஒளிர்விக்கும். விசுவாசத்தில் நாம் தனியாக இல்லை. விசுவாசிகளின் குழுமத்தோடு இருக்கிறோம். எனவே இதில் ஒருவர் மற்றவருக்கு எடுத்துக்காட்டுகளாக இருப்போம்.

Saturday, September 24, 2011

செப்டம்பர் 24, 2011

கடவுள் எங்கு இருக்கிறாரோ 
அங்கே எதிர்காலம் இருக்கிறது - திருத்தந்தை

   இந்த சனிக்கிழமை, எர்ஃபூர்ட் பேராலய வளாகத்தில் திருப்பலி நிறைவேற்றிய திருத்தந்தை பின்வருமாறு மறையுரை ஆற்றினார்: இறைவனுக்கு நம் முழு இதயத்தோடு நன்றி நவில நம் ஒவ்வொருவருக்கும் காரணம் உள்ளது. ஜெர்மன் ஜனநாயக் குடியரசின் கடந்த கால கொடுங்கோலாட்சிகள், கிறிஸ்தவ மறையின் மீது அமில மழை போல் செயல்பட்டன. அதன் பிற்காலத்தைய விளைவுகள் தற்போதும் சில துறைகளில் உணரப்பட்டு வருகின்றன. இருப்பினும் கடந்த 20 ஆண்டுகளில் நல் மாற்றங்களைக் கண்டுவருகிறோம், குறிப்பாக, இறைவன் நம்மை எப்போதும் கைவிடுவதில்லை என்பதில் உறுதியோடு செயல்படுகிறோம். 'கடவுள் எங்கிருக்கிறாரோ அங்கே வருங்காலமும் உள்ளது'. நம் புதிய சுதந்திரம் என்பது மேலும் மாண்பையும், புதிய வாய்ப்புகளையும், புதுப்பித்தலையும் கோவில்களின் விரிவாக்கத்தையும் தந்துள்ளது. கடந்த காலங்களில் அர்ப்பணத்துடன் செயல்பட்ட கிறிஸ்தவர்கள், திருச்சபைக்காக பல்வேறு துன்பங்களை மனமுவந்து தாங்கியுள்ளனர். 
   இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் அகதிகளிடையே திருச்சபை ஆற்றிய சிறப்புமிக்கப் பணிகளை நான் இங்கு நினைவுகூர விழைகின்றேன். திருச்சபை விரோத சூழல்கள் நிலவி வந்த காலத்திலும் தங்கள் குழந்தைகளைக் கிறிஸ்தவ விசுவாசத்தில் வளர்த்த பெற்றோருக்கு நன்றி கூறக் கடமைப்பட்டுள்ளேன். பல புனிதர்களின் தியாகத்துடன் கூடிய மறைப்பணியால் வளர்ந்துள்ள எர்ஃபூர்ட் மறைமாவட்டத்தின் வரலாற்றில் சிறப்பான விதத்தில் டுரிஞ்சேயின் புனித எலிசபெத்தை நினைவு கூர்கின்றேன். ஏழைகள் மற்றும் நோயாளிகளிடையே சிறப்புச் சேவையாற்றிய இப்புனிதை தன் 24ம் வயதிலேயே உயிரிழந்தாலும், இவரின் புனிதத்தன்மையின் கனிகள் அளவிட முடியாதவை. நம் விசுவாசத்தின் முழுமை நிலையை கண்டுகொள்ள இப்புனிதை நமக்கு உதவ முடியும். இறைவனுடன் ஆன உறவில் நாம் வாழமுடியும் அது நன்மையானதும்கூட எனப் புனிதர்கள் நமக்குக் காட்டி நிற்கின்றார்கள். விசுவாசம் என்பது மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்ளப்பட வேண்டிய ஒன்று என்பது அதன் அடிப்படைக் கூறாக உள்ளது. விசுவாசத்திற்காக முதலில் நாம் இறைவனுக்கு நன்றி கூறவேண்டும். இரண்டாவதாக, நம் உடன் வாழ்வோருக்கும் நன்றி நவில வேண்டும். புனிதர்கள் என்பவர்கள் எண்ணிக்கையில் குறைவாக இருந்தாலும், அவர்களால் உலகை மாற்ற முடியும் என்பதையும் நினைவு கூருங்கள். 1989ம் ஆண்டு இந்நாட்டில் இடம்பெற்ற அரசியல் மாற்றங்கள், வளமைக்கும் சுதந்திர இயங்கலுக்கும் ஆன ஏக்கத்தினால் மட்டும் பிறந்தவையல்ல, மாறாக, உண்மைக்கான ஏக்கத்தினாலும் விளைந்தவை.
   கடின முயற்சிகளுக்குப்பின் கிட்டிய இந்த சுதந்திரத்தைப் பொறுப்புடன் வடிவமைக்க வேண்டியது நம் கடமையாகிறது. கிறிஸ்துவுக்கான நம் சாட்சியம் நாம் வாழும் இவ்வுலகில் கேட்கப்படவும் காணப்படவும், புனிதர்களின் எடுத்துக்காட்டுகள் நம்மைத் தூண்டுவதாக.

Friday, September 23, 2011

செப்டம்பர் 22, 2011

கிறிஸ்தவர்கள் இயேசுவில் நிலைத்திருக்க 
திருத்தந்தை அழைப்பு

   திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது ஜெர்மனி பயணத்தின் முதல் நாள் மாலையில், பெர்லின் ஒலிம்பிக் திடலில் திருப்பலி நிறைவேற்றி மறையுரை வழங்கினார். இதில் சுமார் 70 ஆயிரம் கிறிஸ்தவ விசுவாசிகள் பங்கேற்றனர்.
   பெர்லின் ஒலிம்பிக் திடலில் பெருமளவில் விசுவாசிகளைப் பார்க்கும் போது இதயம் மிகுந்த மகிழ்ச்சியாலும் நம்பிக்கை யாலும் நிறைந்துள்ளது என்று மறையுரையைத் தொடங்கிய திருத்தந்தை, தங்களைக் கத்தோலிக்கர் என்று சொல்லிக் கத்தோலிக்கப் போதனைகளை மறுக்கும் ஜெர்மானியர்கள் திருச்சபையை விமர்சிப்பதற்கு மிகவும் நயமாக, அதேசமயம் உறுதியாகத் தனது கருத்துக்களை எடுத்துச் சொன்னார். “நானே திராட்சைச் செடி, நீங்கள் அதன் கொடிகள்” (யோவா.15:5) என்று இயேசு தம் திருத் தூதர்களுக்கு கூறிய நற்செய்தி திருவசனங்களை மையமாக வைத்து மறையுரை வழங்கினார். ஒருவர் ஒருவரைச் சார்ந்து இருப்பது, கிறிஸ்துவைச் சார்ந்து இருப்பது ஏதோ உருவகமான, அடையாளமான ஒன்று அல்ல. ஆனால், இயேசு கிறிஸ்துவுக்கு உரியவராய் இருப்பது உயிரியல் ரீதியானது, இது வாழ்வை வழங்கும் நிலையாகும். கிறிஸ்துவும் திருச்சபையும் எவ்வாறு ஒன்றாக, ஒரே மாதிரியாக இருக்கின்றார்கள் என்பது புரிந்து கொள்ளப்பட வேண்டும். இயேசு இவ்வுலகில் தனது திருச்சபையில் தொடர்ந்து வாழ்ந்து வருகிறார். கத்தோலிக்கர், திருச்சபையை மனிதக் கூறுகளால் மட்டும், அதாவது இந்நவீன காலப் போக்குக்கு ஏற்றாற்போல் மாற்றத்திற்கு அது திறந்த மனம் கொண்டிருக்க வேண்டும் அல்லது திருச்சபையை அதன் சில பாவம் புரிந்த உறுப்பினர்களின் தொகுப்பு என்று மட்டும் நோக்கத் தொடங்கும் போது திருச்சபை மகிழ்ச்சியின் ஊற்றாக இருக்காது. மக்களின் மேலோட்டமான மற்றும் தவறான எண்ணம் கொண்ட அவர்களின் கனவுத் திருச்சபை, அதிருப்தியையும் மனநிறைவின்மையையும் ஏற்படுத்தும். இக்காலத்தில் அர்ப்பணம் குறைகின்றது. எனவே எம்மாவுஸ் சீடர்கள் போன்று, ஆண்டவரே எங்களோடு தங்கும், மாலை நேரமாகிறது. எங்களைச் சுற்றி இருள் சூழ்ந்துள்ளது என்று மக்கள் குரல் எழுப்ப வேண்டும். உயிர்த்த ஆண்டவர் நமக்கு புகலிடம் தருவார். இது ஒளியின், நம்பிக்கையின், விசுவாசத்தின், பாதுகாப்பின், இளைப்பாறும் இடமாகும். இவ்வாறு பெர்லினில் நிகழ்த்திய திருப்பலியில் மறையுரையாற்றினார் திருத்தந்தை.

Thursday, September 22, 2011

செப்டம்பர் 22, 2011

மதத்திற்கு சுதந்திரமும், சுதந்திரத்திற்கு மதமும் தேவைப்படுகின்றன - திருத்தந்தை

   இன்று (வியாழன்) வத்திகான் நேரம் காலை 8.30 மணிக்கு (இந்திய நேரம் பகல் 12 மணிக்கு), உரோம் சம்பினோ இராணுவ விமான நிலையத்திலிருந்து தனது 21வது வெளிநாட்டுத் திருப்பயணத்தைத் தொடங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். இவர் ஜெர்மனிக்கு மேற்கொண்டுள்ள நான்கு நாட்கள் கொண்ட இந்த வெளிநாட்டுத் திருப்பயணம், உலக ஊடகவியலாளரால் அதிக ஆர்வமுடன், அதேசமயம் விமர்சனக் கண்களுடன் நோக்கப்படுகின்றது. காரணம், இப்பயணம், “ஒரு ஜெர்மானியத் திருத்தந்தை ஜெர்மனியில், அதாவது ஜெர்மன் நாட்டவரானத் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், தனது தாயகத்திற்கு அதிகாரப்பூர்வமாக மேற்கொண்டுள்ள முதல் திருப்பயணமாகும். 2005ம் ஆண்டில் பாப்பிறை பணியை ஏற்ற இவர் ஏற்கனவே இரண்டு முறைகள் அந்நாட்டிற்குச் சென்றிருந்தாலும் அரசின் அதிகாரப்பூர்வ விருந்தினராக முதல் முறையாகத் தற்போதுதான் சென்றுள்ளார்.
   ஜெர்மன் நாட்டு பெல்லெவ்யூ அரசுத் தலைவர் மாளிகையில் தனக்கு கொடுக்கப்பட்ட வரவேற்புக்கு முதலில் நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்து அந்நாட்டுக்கான தனது முதல் உரையை திருத்தந்தை தொடங்கினார். ஜெர்மன் நாட்டுக்கான எனது பயணம் திருப்பீடத்திற்கும் ஜெர்மன் கூட்டுக் குடியரசுக்கும் இடையே நிலவும் நல்லுறவுகளை மீண்டும் உறுதிப்படுத்தும் அதிகாரப்பூர்வப் பயணமாக அமைந்தாலும், பிற நாடுகளின் தலைவர்கள் செய்வது போல, குறிப்பிட்ட அரசியல், பொருளாதார இலக்குகளை அடையும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. மாறாக, இப்பயணம் மக்களைச் சந்திக்கவும் கடவுள் பற்றிப் பேசவுமான நோக்கத்தைக் கொண்டுள்ளது.
   சமுதாயத்தில் மதத்திற்குப் பாராமுகம் காட்டப்படுவது வளர்ந்து வருவதைக் காண முடிகின்றது. வெற்றிகரமான சமூக வாழ்வுக்கான அடித்தளங்களில் மதமும் ஒன்று. 'மதத்திற்குச் சுதந்திரம் தேவைப்படுவது போல, சுதந்திரத்திற்கு மதம் தேவைப் படுகின்றது.' மாபெரும் ஆயரும் சமூகச் சீர்திருத்தவாதியுமான வில்ஹெல்ம் வான் கெட்லெர் என்பவரின் வார்த்தைகள் இவை. சுதந்திரத்தை உறவுகளின்றி வாழ முடியாது. ஒன்றிணைந்த மனித வாழ்க்கையில் ஒருமைப்பாடு இல்லாமல் சுதந்திரம் இயலாததாகும். பிறரை வருத்தும் நிலையில் ஒருவர் என்ன செய்தாலும் அது சுதந்திரமாகாது. ஆனால் அது பிறரையும் தன்னையும் வருத்துகின்ற குற்றச் செயலாகும். ஒருவர் தனது சொந்த சக்தியைப் பயன்படுத்துவது, பிறரின் நலனில் அக்கறை காட்டுவது ஆகியவற்றால் மட்டுமே ஒருவர் தன்னை உண்மையிலேயே சுதந்திர ஆளாக வளர்த்துக் கொள்ள முடியும். இது தனிப்பட்டவரின் விவகாரங்களில் மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த சமுதாய விவகாரங்களிலும் உண்மையாகும். இந்தக் கோட்பாட்டுக்கு ஒத்திணங்கும் வகையில் ஒரு சமுதாயம் சிறிய அமைப்புகள் வளருவதற்கு போதுமான இடம் ஒதுக்க வேண்டும். அதேசமயம் அவற்றுக்கு ஆதரவு வழங்க வேண்டும். அதன்மூலம் அவை ஒருநாள் தன் காலிலே நிற்க முடியும். ஜெர்மன் கூட்டுக் குடியரசின் இன்றைய நிலையை உருவாக்கியவர்களுக்கு நன்றி. இதற்கு ஆழமான கலாச்சாரப் புதுப்பித்தலும் நல்லதோர் எதிர்காலத்தைக் கட்டுவதற்கான அடிப்படை விழுமியங்களை மீண்டும் கண்டுணர்வதும் தேவைப் படுகின்றன. இந்நாட்டிற்கு எனது இப்பயணம் சிறிய அளவில் உதவும் என நம்புகிறேன் என்று திருத்தந்தை உரையாற்றினார்.

Monday, September 19, 2011

செப்டம்பர் 18, 2011

கிறிஸ்துவுக்காக வாழ்வோர் அவரது திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் - திருத்தந்தை

   கிறிஸ்துவைத் தங்கள் வாழ்வின் மூலம் வாழ்ந்துகாட்டும் குடும்பங்கள் திருச்சபையின் புதிய மறைபரப்புப் பணியின் முக்கியக் கருவிகள் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   திருத்தந்தையர்களின் கோடை விடுமுறை இல்லமான காஸ்தெல் கந்தோல்போவில் இந்த ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கியபோது, ஞாயிறு திருப்பலியின் வாசகங்களில் ஒன்றான புனித பவுல் பிலிப்பியருக்கு எழுதியத் திருமுகத்தின் வரிகளை சுட்டிக்காட்டி, இவ்வாறு கூறினார் திருத்தந்தை.
   சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கியிருந்த புனித பவுல் 'நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே' என்று சொன்னதுபோல், இன்று உலகில் வாழும் பலர் கிறிஸ்து வுக்காகவே வாழ்ந்து வருகின்றனர் என்று கூறியத் திருத்தந்தை, இவர்கள் அனைவரும் ஆண்டவரின் திராட்சைத் தோட்டத்தில் உழைக்கின்றனர் என்றும் எடுத்துரைத்தார்.
   புதிய மறைபரப்புப் பணியில் ஈடுபட்டிருக்கும் கிறிஸ்தவக் குடும்பங்கள் எவ்வித பிரதிபலனும் எதிர்பார்க்காமல், இறைவனுக்கும், திருச்சபைக்கும் உழைப்பது மாபெரும் ஒரு சாட்சியாக விளங்குகிறது என்று திருத்தந்தை தன் மூவேளை செப உரையில் மகிழ்வுடன் எடுத்துரைத்தார்.

ஞாயிறு 2ஆம் வாசகம்: பிலிப்பியர் 1:20-24,27
   சகோதர சகோதரிகளே, வாழ்விலும் சாவிலும் முழுத் துணிவுடன் கிறிஸ்துவை என் உடலால் பெருமைப்படுத்துவேன். இதுவே என் பேராவல், இதுவே என் எதிர் நோக்கு. ஏனெனில் நான் வாழ்ந்தால் அது கிறிஸ்துவுக்காகவே; நான் இறந்தால் அது எனக்கு ஆதாயமே. எனினும் நான் தொடர்ந்து வாழ்ந்தால் பயனுள்ள பணி செய்ய முடியும். எனவே நான் எதைத் தேர்ந்து கொள்வதென எனக்குத் தெரியவில்லை. இந்த இரண்டுக்கும் இடையே ஓர் இழுபறி நிலையில் உள்ளேன். உயிர்நீத்து கிறிஸ்துவோடு இருக்கவேண்டும் என்னும் ஆவல் ஒரு புறம். - இதுவே மிகச் சிறந்தது. - ஆனால், இன்னும் வாழவேண்டும் என்பது மற்றொரு புறம். - இது உங்கள் பொருட்டு மிகத் தேவையாய் இருக்கின்றது. ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள்; கிறிஸ்துவின் நற்செய்திக்கு ஏற்றவாறு நடந்துகொள்ளுங்கள்.

Thursday, September 15, 2011

செப்டம்பர் 14, 2011

புதன் மறைபோதகம்: திருச்சிலுவையின் நிழல் உயிர்ப்பின் நம்பிக்கைக்கு வழிகாட்டுகின்றது - திருத்தந்தை

   காஸ்தெல்கந்தோல்ஃபோ கோடைகாலத் தங்கும் இல்லத்திலிருந்து இப்புதன் காலை ஹெலிகாப்டரில் வத்திக்கான் வந்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், பாப்பிறை ஆறாம் பவுல் மண்டபத்தில் அமர்ந்திருந்த சுமார் எட்டாயிரம், ஆசிய நாடுகள் உட்பட பல நாடுகளின் பயணிகளுக்குப் பல மொழிகளில் புதன் பொது மறை போதகம் வழங்கினார். இதில் திருப்பாடல் 22, இன்னும், செப்டம்பர் 14, 15 ஆகிய தினங்களின் திருவழிபாடுகளின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.
    சிறப்பாக, இளையோர், நோயாளிகள் மற்றும் புதிதாகத் திருமணமானவர்களை வாழ்த்தியபோது இப்புதனன்று திருச்சிலுவையின் பேருண்மை யையும் இவ்வியாழனன்று அன்னைமரியின் துயரங்களையும் தியானிப்பதற்கு நாம் அழைக்கப்படுகிறோம் என்றார். அன்பு இளையோரே, கிறிஸ்துவின் திருச்சிலுவையும் வியாகுல அன்னையின் எடுத்துக்காட்டும் உங்களது வாழ்வை ஒளிர்விப்பதாக. அன்பு நோயாளிகளே, உங்களது அன்றாட வேதனைகளைத் தாங்கிக் கொள்ளவும், திருமணத் தம்பதியரே, உங்களது குடும்ப வாழ்க்கையைத் தைரியத்துடன் தொடங்கவும் திருச்சிலுவை யும் வியாகுல அன்னையும் உதவட்டும் என்றார். மேலும், கடவுளால் கைவிடப்பட்டதாக உணரும் ஒருவர் துயரத்தோடு புலம்புவதைத் திருப்பாடல் 22ல் தியானிக்கிறோம் என ஆங்கில மொழியில் அப்பாடல் பற்றிச் சுருக்கமாக விளக்கினார் திருத்தந்தை.
   தன்னை நசுக்கும் எதிரிகளால் சூழப்பட்ட இத்திருப்பாடல் ஆசிரியர், இரவும் பகலும் உதவிக்காக இறைவனிடம் தேம்பித் தேம்பி அழுகிறார். எனினும், இறைவன் மௌனமாக இருப்பது போலத் தெரிகிறது. இந்தத் திருப்பாடலின் தொடக்க வரிகளான “என் இறைவா, என் இறைவா, ஏன் என்னைக் கைவிட்டீர்?” என்பதை இயேசு சிலுவையிலிருந்து தமது தந்தையை அழைத்த வார்த்தைகளாக மத்தேயு மற்றும் மாற்கு நற்செய்திகளில் குறிக்கப்பட்டுள்ளன. இயேசுவின் எதிரிகள் அவரைக் கேலி செய்யும் போதும், கடும்பசியோடு சீறி முழங்கும் கொடும் சிங்கங்கள் போன்று அவரைத் தாக்கும் போதும், அவர் ஏற்கனவே இறந்தது போல அவரது ஆடையைத் தங்களுக்குள் பகிர்ந்து கொண்டபோதும், இயேசு கொடூரமான நிலையில் தான் கைவிடப்பட்டது போன்று உணர்ந்தார். கடந்த காலத்தில் இஸ்ரயேல் மக்கள் தங்களின் துயரங்களின் போது எவ்வாறு நம்பிக்கையோடு ஆண்டவரை அழைத்தனர் என்பதையும் ஆண்டவரும் அவர்களின் செபத்திற்கு எவ்வாறு பதில் அளித்தார் என்பதையும் இத்திருப்பாடல் ஆசிரியர் நினைவுகூருகிறார். சிசுவாகத், தனது தாயின் கருப்பையில் இருந்தது, குழந்தையாகத் தனது தாயின் கரங்களில் இருந்தது எனத் தனது இளமைக் காலத்தில் ஆண்டவர் எவ்வாறு தன்னைக் கனிவோடு பராமரித்தார் என்பதையும் இந்த ஆசிரியர் நினைத்துப் பார்க்கிறார். அதேசமயம், தனது பகைவர்களின் இத்தகைய கெடுபிடிச் சூழல்களிலும், இந்த ஆசிரியர் ஆண்டவரில் வைத்துள்ள நம்பிக்கையும் விசுவாசமும் அப்படியே இருக்கின்றன. கடவுளது பெயர் எல்லா நாடுகளின் முன்பாக வாழ்த்தப்படுவதாக என்ற நம்பிக்கைக் குறிப்போடு இத்திருப்பாடல் நிறைவு செய்யப் பட்டுள்ளது.
   திருச்சிலுவையின் நிழல், உயிர்ப்பின் ஒளிமயமான நம்பிக்கைக்கு வழி திறக்கின்றது. நாமும் நமது துன்பநேரங்களில் இறைவனைக் கூப்பிடும் போது நமது நம்பிக்கையை அவர் மீது வைக்க வேண்டும். அவரே மீட்பைக் கொணருபவர், நித்திய வாழ்வெனும் கொடையோடு மரணத்தை வெல்கிறவர் அவரே. இவ்வாறு தனது புதன் பொது மறைபோதகத்தை நிறைவு செய்த திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அனைவருக்கும் தமது அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார்.

Monday, September 12, 2011

செப்டம்பர் 11, 2011

நற்கருணை முன் மண்டியிடும் ஒவ்வொருவரும் பகிர்ந்து வாழத் தயாராக இருக்க வேண்டும் - திருத்தந்தை

   இத்தாலியில் அன்கொனா நகரில் கடந்த ஒரு வாரமாகக் கொண்டாடப்பட்ட 25வது தேசிய நற்கருணை  மாநாட்டின் நிறைவுத் திருப்பலியை இஞ்ஞாயிறு நிகழ்த்தி மறையுரை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், கிறிஸ்துவைத் திருவிருந்தில் ஏற்றுக் கொள்ளும் ஒவ்வொருவரும் அருகில் இருப்போரின் தேவைகளைப் புரிந்துகொண்டு, அவர்களுடன் தங்கள் உடைமைகளைப் பகிர்ந்து வாழ தயாராக இருக்க வேண்டும் என்று  கூறினார்.
   இன்றைய உலகில் பெருமளவு வளர்ந்து வரும் சுயநலம், தற்பெருமை ஆகிய குறைகளுக்கு ஒரு மாற்று மருந்தாக திருநற்கருணையைச் சார்ந்துள்ள ஆன்மீகம் விளங்குகிறது என்று திருத்தந்தை சுட்டிக் காட்டினார். திருநற்கருணைக்கு முன் தாழ்மையோடு மண்டியிடும் எவரும் அடுத்தவரின் தேவை களைக் கவனியாது இருக்க முடியாது என்றும், அடுத்தவரின் பசி, தாகம், ஆடையின்மை, உடல்நலக் குறைவு ஆகிய பல்வேறு தேவைகளைத் தீர்க்காமல் போகமாட்டார்கள் என்றும் தன் மறையுரையில் வலியுறுத்தினார் திருத்தந்தை.
   திருச்சபை என்ற குடும்பத்தின் இதயத்துடிப்பாக விளங்கும் திருநற்கருணை ஆன்மீகம், பிளவுகளையெல்லாம் மேற்கொள்ளும் ஒரு சிறந்த வழி என்று கூறியத் திருத்தந்தை, சமுதாயத்தில் மிகவும் நலிந்தோரை மீண்டும் மனித குலத்தின் மையத்திற்குக் கொண்டு வரும் வலிமை பெற்றது இந்த ஆன்மீகம் என்றும் கூறினார்.
   அன்கொனா நகரில் ஒரு இலட்சத்திற்கும் அதிகமாக கூடியிருந்த மக்களுக்கு திறந்தவெளியரங்கில் திருப்பலியையும் ஞாயிறு மூவேளை செப உரையையும் வழங்கியத் திருத்தந்தை ஞாயிறு மாலை மீண்டும் வத்திக்கான் திரும்பினார்.
 

திருத்தந்தையின் மூவேளை செப உரை:
   இத்தாலியின் அன்கொனா நகரில் 25வது திருநற்கருணை தேசிய மாநாட்டின் இறுதியில் திருப்பலி நிகழ்த்தியபின், அங்கு கூடியிருந்த ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்களுக்குத் தன் ஞாயிறு மூவேளை செப உரையை வழங்கிய திருத்தந்தை 16ம் பெனடிக்ட், இந்த உலகில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளுக்கு வன்முறை ஒரு நாளும் தீர்வாகாது என்பதை உலகத் தலைவர்களும் நல்மனம் கொண்ட அனைவரும் உணர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
   2001ம் ஆண்டு செப்டம்பர் 11ம் தேதி நியூயார்க் நகரிலும், வாஷிங்டனிலும் நடைபெற்ற விமானத் தாக்குதல்களின் பத்தாம் ஆண்டு நினைவு கடைபிடிக்கப்பட்டதையொட்டி, சனி, ஞாயிறு ஆகிய இரு நாட்களும் திருத்தந்தை தன் உரையிலும் அமெரிக்க மக்களுக்கு அனுப்பியுள்ள செய்தியிலும் இதுபற்றி குறிப்பிட்டு வருகிறார்.