Friday, December 20, 2013

டிசம்பர் 22, 2013

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு

மத்தேயு 1:18-24
   இயேசு கிறிஸ்துவின் பிறப்பையொட்டிய நிகழ்ச்சிகள்: அவருடைய தாய் மரியாவுக்கும் யோசேப்புக்கும் திருமண ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. அவர்கள் கூடி வாழும் முன் மரியா கருவுற்றிருந்தது தெரிய வந்தது. அவர் தூய ஆவியால் கருவுற்றிருந்தார். அவர் கணவர் யோசேப்பு நேர்மையாளர். அவர் மரியாவை இகழ்ச்சிக்கு உள்ளாக்க விரும்பாமல் மறைவாக விலக்கிவிடத் திட்டமிட்டார். அவர் இவ்வாறு சிந்தித்துக் கொண்டிருக்கும் போது ஆண்ட வரின் தூதர் அவருக்குக் கனவில் தோன்றி, "யோசேப்பே, தாவீதின் மகனே, உம்மனைவி மரியாவை ஏற்றுக்கொள்ள அஞ்ச வேண்டாம். ஏனெனில் அவர் கருவுற்றிருப்பது தூய ஆவியால்தான். அவர் ஒரு மகனைப் பெற்றெடுப்பார். அவருக்கு இயேசு எனப் பெயரிடுவீர். ஏனெனில் அவர் தம் மக்களை அவர்களுடைய பாவங்களிலிருந்து மீட்பார்" என்றார். "இதோ! கன்னி கருவுற்று ஓர் ஆண்மகவைப் பெற்றெடுப்பார். அக்குழந் தைக்கு இம்மானுவேல் எனப் பெயரிடுவர்' என்று இறைவாக்கினர் வாயிலாக ஆண்டவர் உரைத்தது நிறைவேறவே இவை யாவும் நிகழ்ந்தன. இம்மானுவேல் என்றால் 'கடவுள் நம்முடன் இருக்கிறார்' என்பது பொருள். யோசேப்பு தூக்கத்திலிருந்து விழித்தெழுந்து ஆண்டவரின் தூதர் தமக்குப் பணித்தவாறே தம் மனைவியை ஏற்றுக்கொண்டார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் புனித யோசேப்புக்கு ஆண்டவர் இயேசுவின் பிறப்பு அறிவிக்கப் படும் நிகழ்ச்சி இடம் பெற்றுள்ளது. தனக்கு திருமண ஒப்பந்தம் செய்யப்பட்ட மரியா கூடி வாழும் முன்பே கருவுற்றிருப்பதை அறிந்து யோசேப்பு கலங்குகிறார். இருந்தாலும் அவரை இகழ்ச்சிக்கு உள்ளாக்காமல் மறைவாக விலக்குவது எப்படி என்பது குறித்த சிந்தனையில் ஆழ்கிறார். அதே நேரத்தில் தூக்கம் அவரை ஆட்கொள்ள, ஆண்டவரின் தூதர் அவருக்கு கன வில் தோன்றுகிறார். மரியா தூய ஆவியால் கருவுற்றிருப்பதையும், அவர் உலக மீட்பரைப் பெற்றெடுக்க இருப்பதையும் யோசேப்பு அறிந்து கொள்கிறார். கனவில் வெளிப்படுத்தப்பட்ட கடவுளின் திட்டத்தை ஏற்று, மரியாவுக்கும் இயேசுவுக்கும் பாதுகாவலராக வாழ முடிவெடுக் கிறார். யோசேப்பைப் போன்று நாமும் இறைத்திட்டத்தை உணர்ந்து வாழ்ந்தால் கடவுள் நம் வீட்டில் பிறப்பதைக் காண முடியும்.

Friday, December 13, 2013

டிசம்பர் 15, 2013

திருவருகைக்காலம் 3-ம் ஞாயிறு

மத்தேயு 11:2-11
   அக்காலத்தில் யோவான் சிறையிலிருந்தபோது மெசியா வின் செயல்களைப் பற்றிக் கேள்வியுற்றுத் தம் சீடர்களை அவரிடம் அனுப்பினார். அவர்கள் மூலமாக, "வரவிருப்ப வர் நீர் தாமா? அல்லது வேறு ஒருவரை எதிர்பார்க்க வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு இயேசு மறுமொழி யாக, "நீங்கள் கேட்பவற்றையும் காண்பவற்றையும் யோவானிடம் போய் அறிவியுங்கள். பார்வையற்றோர் பார்வை பெறுகின்றனர்; கால் ஊனமுற்றோர் நடக்கின்ற னர்; தொழுநோயாளர் நலமடைகின்றனர்; காது கேளாதோர் கேட்கின்றனர்; இறந்தோர் உயிர்பெற்று எழுகின்றனர்; ஏழைகளுக்கு நற்செய்தி அறிவிக்கப்படுகிறது. என்னைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறுபெற்றோர்'' என்றார்.
   அவர்கள் திரும்பிச் சென்றபோது இயேசு மக்கள் கூட்டத்திடம் யோவானைப்பற்றிப் பேசத் தொடங்கினார்: "நீங்கள் எதைப் பார்க்கப் பாலைநிலத்திற்குப் போனீர்கள்? காற்றினால் அசை யும் நாணலையா? இல்லையேல் யாரைப் பார்க்கப் போனீர்கள்? மெல்லிய ஆடையணிந்த ஒரு மனிதரையா? இதோ, மெல்லிய ஆடையணிந்தோர் அரச மாளிகையில் இருக்கின்றனர். பின்னர் யாரைத்தான் பார்க்கப் போனீர்கள்? இறைவாக்கினரையா? ஆம், இறைவாக்கினரை விட மேலானவரையே என நான் உங்களுக்குச் சொல்கிறேன். 'இதோ! நான் என் தூதனை உமக்கு முன் அனுப்புகிறேன். அவர் உமக்கு முன் உமது வழியை ஆயத்தம் செய்வார்' என்று இவரைப்பற்றித்தான் மறைநூலில் எழுதியுள்ளது. மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றியதில்லை. ஆயினும் விண்ணரசில் மிகச் சிறியவரும் அவரினும் பெரியவரே என நான் உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவே வரவிருந்த மெசியா என்பதை உறுதி செய்ய, திருமுழுக்கு யோவான் தனது சீடர்களை அனுப்புகிறார். ஆண்டவரின் நாளில் நிகழும் என இறைவாக்கினர் எசாயா முன்னறிவித்தவை தம் வழியாக நிறைவேறுவதை இயேசு அந்த சீடர்களுக்கு சுட்டிக்காட்டுகிறார். "இயேசுவைத் தயக்கம் இன்றி ஏற்றுக்கொள்வோர் பேறு பெற்றோர்" என்ற வாக்குறுதியும் இங்கு வழங்கப்படுகிறது. அதே வேளையில் திருமுழுக்கு யோவானே ஆண்டவரின் முன்னோடி என்பதை மக்களுக்கு உணர்த்த இயேசு விரும்புகிறார். "மனிதராய்ப் பிறந்தவர்களுள் திருமுழுக்கு யோவானை விடப் பெரியவர் எவரும் தோன்றிய தில்லை" என்று கூறி, இயேசு அவரை பெருமைப்படுத்துகிறார். நாமும் யோவானைப் போல ஆண்டவரின் வழியைத் தயார் செய்தால், விண்ணரசில் பெருமையுடன் நுழைய முடியும்.

Friday, December 6, 2013

டிசம்பர் 8, 2013

திருவருகைக்காலம் 2-ம் ஞாயிறு
திருப்பலி முன்னுரை
மத்தேயு 3:1-12
   அக்காலத்தில் திருமுழுக்கு யோவான் யூதேயாவின் பாலைநிலத்துக்கு வந்து, "மனம் மாறுங்கள், ஏனெனில் விண்ணரசு நெருங்கி வந்துவிட்டது'' என்று பறைசாற்றி வந்தார். இவரைக் குறித்தே, "பாலைநிலத்தில் குரல் ஒன்று முழங்குகிறது; ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக் குங்கள்; அவருக்காகப் பாதையைச் செம்மையாக்குங்கள்'' என்று இறைவாக்கினர் எசாயா உரைத்துள்ளார். இந்த யோவான் ஒட்டக முடியாலான ஆடையை அணிந்திருந் தார்; தோல் கச்சையை இடையில் கட்டி இருந்தார்; வெட் டுக்கிளியும் காட்டுத் தேனும் உண்டு வந்தார். எருசலேமி லும் யூதேயா முழுவதிலும் யோர்தான் ஆற்றை அடுத் துள்ள பகுதிகள் அனைத்திலும் இருந்தவர்கள் அவரிடம் சென்றார்கள். அவர்கள் தங்கள் பாவங்களை அறிக்கை யிட்டு யோர்தான் ஆற்றில் அவரிடம் திருமுழுக்குப் பெற்று வந்தார்கள்.
   பரிசேயர், சதுசேயருள் பலர் தம்மிடம் திருமுழுக்குப் பெற வருவதைக் கண்டு அவர் அவர்களை நோக்கி, "விரியன் பாம்புக் குட்டிகளே, வரப்போகும் சினத்திலிருந்து தப்பிக்க இயலும் என உங்களிடம் சொன்னவர் யார்? நீங்கள் மனம் மாறியவர்கள் என்பதை அதற் கேற்ற செயல்களால் காட்டுங்கள். 'ஆபிரகாம் எங்களுக்குத் தந்தை' என உங்களிடையே சொல்லிப் பெருமை கொள்ள வேண்டாம். இக்கற்களிலிருந்தும் ஆபிரகாமுக்குப் பிள்ளை களைத் தோன்றச் செய்யக் கடவுள் வல்லவர் என உங்களுக்குச் சொல்கிறேன். ஏற்கெனவே மரங்களின் வேரருகே கோடரி வைத்தாயிற்று. நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப் பட்டுத் தீயில் போடப்படும். நீங்கள் மனம் மாறுவதற்காக நான் தண்ணீரால் திருமுழுக்குக் கொடுக்கிறேன், எனக்குப் பின் ஒருவர் வருகிறார். அவர் என்னைவிட வலிமை மிக்கவர். அவருடைய மிதியடிகளைத் தூக்கிச் செல்லக்கூட எனக்குத் தகுதி இல்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப்பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார். அவர் சுளகைத் தம் கையில் கொண்டு கோதுமையையும் பதரையும் பிரித்தெடுப்பார்; தம் கோதுமையைக் களஞ்சியத்தில் சேர்ப்பார்; ஆனால், பதரை அணையா நெருப்பிலிட்டுச் சுட்டெரிப்பார்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் ஆண்டவரின் முன்னோடியான திருமுழுக்கு யோவான், இயேசு வின் வருகைக்காக மக்களைத் தயார் செய்வதைக் காண்கிறோம். கடவுளின் பாதையைச் செம்மையாக்குமாறு வந்த அவர், மக்கள் அனைவரும் தங்கள் உள்ளங்களைத் தூய்மைப் படுத்துமாறு அழைப்பு விடுக்கிறார். நீதியுள்ள கடவுளின் சினத்திலிருந்து தப்பிக்க பாவங் களை விட்டு மனந்திரும்புமாறும், நமது மனமாற்றத்தை நற்செயல்கள் மூலம் வெளிப்படுத்து மாறும் யோவான் வலியுறுத்துகிறார். நற்கனி தராத மரங்கள் எல்லாம் வெட்டப்பட்டுத் தீயில் போடப்படும் என்ற எச்சரிக்கையும் நமக்குத் தரப்படுகிறது. அனைத்தின் மீதும் அதிகாரம் கொண்ட ஆண்டவர் முன்னிலையில் நமது தாழ்நிலையை உணர்ந்தால், அவரது களஞ்சி யத்தில் சேர்க்கப்படும் கோதுமையாக நாம் வாழ முடியும்.

Sunday, December 1, 2013

டிசம்பர் 1, 2013

திருவருகைக்காலம் முதல் ஞாயிறு
மத்தேயு 24:37-44
   அக்காலத்தில் மானிடமகன் வருகையைப்பற்றி இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "நோவாவின் காலத்தில் இருந்தது போலவே மானிடமகன் வருகையின் போதும் இருக்கும். வெள்ளப்பெருக்குக்கு முந்தைய காலத்தில், நோவா பேழைக்குள் சென்ற நாள்வரை எல்லாரும் திரு மணம் செய்து கொண்டும் உண்டும் குடித்தும் வந்தார்கள். வெள்ளப்பெருக்கு வந்து அனைவரையும் அடித்துச் செல் லும்வரை அவர்கள் எதையும் அறியாதிருந்தார்கள். அப்ப டியே மானிடமகன் வருகையின்போதும் இருக்கும். இருவர் வயலில் இருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற் றவர் விட்டுவிடப்படுவார். இருவர் திரிகையில் மாவரைத் துக்கொண்டிருப்பர். ஒருவர் எடுத்துக்கொள்ளப்படுவார்; மற்றவர் விட்டுவிடப்படுவார். விழிப் பாயிருங்கள்; ஏனெனில் உங்கள் ஆண்டவர் எந்த நாளில் வருவார் என உங்களுக்குத் தெரி யாது. இரவில் எந்தக் காவல் வேளையில் திருடன் வருவான் என்று வீட்டு உரிமையாள ருக்குத் தெரிந்திருந்தால் அவர் விழித்திருந்து தம் வீட்டில் கன்னமிட விடமாட்டார் என்பதை அறிவீர்கள். எனவே நீங்களும் ஆயத்தமாய் இருங்கள். ஏனெனில் நீங்கள் நினையாத நேரத் தில் மானிடமகன் வருவார்."

சிந்தனை:
   இன்று நாம் புதிய திருவழிபாட்டு ஆண்டில் அடியெடுத்து வைக்கிறோம். இன்றைய நற் செய்தியில் இயேசு, தனது இரண்டாவது வருகையைப் பற்றி சீடர்களுக்கு எடுத்துரைக்கிறார். மக்கள் பாவத்தில் உழன்று கொண்டிருக்கும் வேளையில், ஆண்டவர் திடீரென தோன்றுவார் என்ற எச்சரிக்கை நமக்கு தரப்படுகிறது. அவரது வருகை நிகழும் நேரம் தெரியாது என்பதால், எப்பொழுதும் அவரை எதிர்கொள்ள எப்பொழுதும் நாம் தயாராய் இருக்குமாறு அழைக்கப் படுகிறோம். ஆண்டவரின் அரசில் பங்கேற்பதற்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்களில் ஒருவராக இருக்க, எப்பொழுதும் நம்மைத் தயாரித்து வாழ வேண்டும் என்பதே இயேசு நமக்கு தரும் அறிவுரை. ஆண்டவரின் நெறியில் உண்மையுடன் நடந்தால், நினையாத நேரத்தில் வரும் மானிடமகனை நாம் துணிவுடன் எதிர்கொள்ள முடியும்.