Friday, May 25, 2012

மே 27, 2012

தூய ஆவியாரின் வருகை பெருவிழா
யோவான் 15:26-27,16:12-15

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "தந்தையிடமிருந்து நான் உங் களுக்கு அனுப்பப்போகிற துணையாளர் வருவார். அவரே தந்தையிடமிருந்து வந்து உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார். அவர் வரும்போது என்னைப் பற்றிச் சான்று பகர்வார். நீங்களும் சான்று பகர்வீர்கள். ஏனெனில் நீங்கள் தொடக்க முதல் என்னோடு இருந்து வருகிறீர்கள். நான் உங்களிடம் சொல் லவேண்டியவை இன்னும் பல உள்ளன. ஆனால் அவற்றை இப்போது உங்களால் தாங்க இயலாது. உண்மையை வெளிப்படுத்தும் தூய ஆவியார் வரும்போது அவர் முழு உண்மையை நோக்கி உங்களை வழிநடத்துவார். அவர் தாமாக எதையும் பேசமாட்டார்; தாம் கேட்பதையே பேசுவார்; வரப் போகிறவற்றை உங்களுக்கு அறிவிப்பார். அவர் என்னிடமிருந்து கேட்டு உங்களுக்கு அறிவிப்பார். இவ்வாறு அவர் என்னை மாட்சிப்படுத்துவார். தந்தையுடையவை யாவும் என்னுடையவையே. எனவே தான் 'அவர் என்னிடமிருந்து பெற்று உங்களுக்கு அறிவிப்பார்' என்றேன்.''

சிந்தனை:
   இயேசு வாக்களித்த தூய ஆவியாரின் வருகையால் திருச்சபை தோன்றிய நாள் இது. தூய ஆவியாரின் செயலால், இயேசுவைப் பற்றிய  உண்மைக்கு சான்று பகர்பவர்களாய் வாழ நாம் அழைக்கப்படுகிறோம். கிறிஸ்துவிடம் இருந்து கேட்பவற்றை பேசுகின்ற தூய ஆவியார் நம்மில் செயல்பட அனுமதிக்கும்போது, தந்தையின் வலப்பக்கத்தில் மாட்சியுடன் வீற்றி ருக்கும் இயேசுவின் சாட்சிகளாக நாம் வாழ முடியும். தூய ஆவியாரின் கனிகளான அன்பு, மகிழ்ச்சி, அமைதி, பொறுமை, பரிவு, நன்னயம், நம்பிக்கை, கனிவு, தன்னடக்கம் ஆகியவை நம்மில் வெளிப்படும்போது நமது சான்று மிகுந்த பலன் தருவதாக அமையும்.

Friday, May 18, 2012

மே 20, 2012

ஆண்டவரின் விண்ணேற்றம் பெருவிழா
மாற்கு 16:15-20

   அக்காலத்தில் இயேசு பதினொருவருக்குத் தோன்றி அவர்களை நோக்கி, "உலகெங்கும் சென்று படைப்பிற் கெல்லாம் நற்செய்தியைப் பறைசாற்றுங்கள். நம்பிக்கை கொண்டு திருமுழுக்குப் பெறுவோர் மீட்புப் பெறுவர்; நம்பிக்கையற்றவரோ தண்டனைத் தீர்ப்புப் பெறுவர். நம் பிக்கை கொண்டோர் பின்வரும் அரும் அடையாளங்களை செய்வர்; அவர்கள் என் பெயரால் பேய்களை ஓட்டுவர்; புதிய மொழிகளைப் பேசுவர்; பாம்புகளைத் தம் கையால் பிடிப்பர். கொல்லும் நஞ்சைக் குடித்தாலும் அது அவர்க ளுக்குத் தீங்கு இழைக்காது. அவர்கள் உடல் நலமற்றோர் மீது கைகளை வைக்க, அவர்கள் குணமடைவர்" என்று கூறினார்.
   இவ்வாறு அவர்களோடு பேசிய பின்பு ஆண்டவர் இயேசு விண்ணேற்றமடைந்து கடவுளின் வலப்புறம் அமர்ந்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்று எங்கும் நற்செய்தியைப் பறைசாற்றினர். ஆண்டவரும் உடனிருந்து செயல்பட்டு, நிகழ்ந்த அரும் அடையாளங்களால் அவர்களுடைய வார்த்தையை உறுதிப்படுத்தினார்.

சிந்தனை:
   இயேசு விண்ணேற்றம் அடைந்து தந்தை இறைவனின் வலது பக்கத்தில் அமர்ந்தார். அவர் விண்ணகம் செல்லும் முன், நாம் விண்ணகம் செல்வதற்கான வழியை நமக்கு தந்துவிட்டு செல்கிறார். மேலும் உலகெங்கும் நற்செய்தியைப் பறைசாற்றுமாறு, அவரில் நம்பிக்கை கொள்ளும் அனைவருக்கும் அரும் அடையாளங்களைச் செய்யும் வரத்தையும் அளிக்கிறார். நமது நம்பிக்கை ஆண்டவரின் வரத்தை வெளிப்படுத்தும் வகையில் உள்ளதா என்பதை சிந்திப்போம். நமது உண்மையான சாட்சிய வாழ்வால், நாம் விண்ணகத்தைப் பெற்றுக்கொள் வதுடன் பிறரும் விண்ணகத்தின் வழியைக் கண்டுகொள்ள உதவ முடியம்.

Friday, May 11, 2012

மே 13, 2012

பாஸ்கா காலம் 6-ம் ஞாயிறு
யோவான் 15:9-17

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "என் தந்தை என்மீது அன்பு கொண்டுள்ளது போல நானும் உங்கள்மீது அன்பு கொண்டுள்ளேன். என் அன்பில் நிலைத் திருங்கள். நான் என் தந்தையின் கட்டளைகளைக் கடைப் பிடித்து அவரது அன்பில் நிலைத்திருப்பது போல நீங்களும் என் கட்டளைகளை கடைப்பிடித்தால் என் அன்பில் நிலைத் திருப்பீர்கள். என் மகிழ்ச்சி உங்களுள் இருக்கவும் உங்கள் மகிழ்ச்சி நிறைவு பெறவுமே இவற்றை உங்களிடம் சொன் னேன். 'நான் உங்களிடம் அன்பு கொண்டிருப்பது போல நீங்களும் ஒருவர் மற்றவரிடம் அன்பு கொண்டிருக்க வேண் டும்' என்பதே என் கட்டளை."
   "தம் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட சிறந்த அன்பு யாரிடமும் இல்லை. நான் கட்டளை இடுவதையெல்லாம் நீங்கள் செய்தால் நீங்கள் என் நண்பர்களாய் இருப்பீர்கள். இனி நான் உங்களைப் பணியாளர் என்று சொல்ல மாட்டேன். ஏனெனில் தம் தலைவர் செய்வது இன்னது என்று பணியாளருக்குத் தெரியாது. உங்களை நான் நண்பர்கள் என்றேன்; ஏனெனில் என் தந்தையிடமிருந்து நான் கேட்டவை அனைத்தையும் உங்களுக்கு அறிவித்தேன். நீங்கள் என்னைத் தேர்ந்துகொள்ளவில்லை; நான்தான் உங்களைத் தேர்ந்துகொண்டேன். நீங்கள் கனி தரவும், நீங்கள் தரும் கனி நிலைத்திருக்கவும் உங்களை ஏற்படுத்தினேன். ஆகவே நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதையெல்லாம் அவர் உங்களுக்குக் கொடுப்பார். நீங்கள் ஒருவர் மற்றவரிடம் அன்புகொள்ள வேண்டும் என்பதே என் கட்டளை."

சிந்தனை:
   இயேசுவே தந்தை இறைவனின் அன்பை இந்த உலகிற்கு வெளிப்படுத்தினார். இயேசு தந்தையின் அன்பில் நிலைத்திருப்பது போல, நாம் இயேசுவின் அன்பில் நிலைத்திருக்க அழைக்கப்படுகிறோம். இயேசுவின் அன்பு கட்டளைகளை நம் வாழ்வில் செயல்படுத்தும் போது, நாம் அவரது அன்பில் நிலைத்திருக்க முடியும். நமக்காக தன் உயிரையே கையளித்த நமது அன்பு நண்பர் இயேசுவின் கட்டளைகளை நாம் பின்பற்றும்போது, இறையன்பிலும் பிறரன்பிலும் வளர்ந்து இம்மண்ணில் இறையரசைக் கட்டியெழுப்ப முடியும்.

Friday, May 4, 2012

மே 6, 2012

பாஸ்கா காலம் 5-ம் ஞாயிறு
யோவான் 15:1-8

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கி கூறியது: "உண்மையான திராட்சைச் செடி நானே. என் தந்தையே அதை நட்டு வளர்ப்பவர். என்னிடமுள்ள கனிகொடாத கொடிகள் அனைத்தையும் அவர் தறித்துவிடுவார். கனி தரும் அனைத்துக் கொடிகளையும் மிகுந்த கனி தருமாறு கழித்து விடுவார். நான் சொன்ன வார்த்தைகளால் நீங்கள் ஏற்கெனவே தூய்மையாய் இருக்கிறீர்கள். நான் உங்க ளோடு இணைந்து இருப்பதுபோல நீங்களும் என்னோடு இணைந்து இருங்கள். கொடி திராட்சைச் செடியோடு இணைந்து இருந்தாலன்றித் தானாக கனி தர இயலாது. அதுபோல நீங்களும் என்னோடு இணைந்திருந்தாலன்றிக் கனி தர இயலாது. நானே திராட் சைச் செடி; நீங்கள் அதன் கொடிகள். ஒருவர் என்னுடனும் நான் அவருடனும் இணைந் திருந்தால் அவர் மிகுந்த கனி தருவார். என்னை விட்டுப் பிரிந்து உங்களால் எதுவும் செய்ய இயலாது. என்னோடு இணைந்து இராதவர் கொடியைப் போலத் தறித்து எறியப்பட்டு உலர்ந்து போவார். அக்கொடிகள் கூட்டிச் சேர்க்கப்பட்டு நெருப்பிலிட்டு எரிக்கப்படும். நீங்கள் என்னுள் ளும் என் வார்த்தைகள் உங்களுள்ளும் நிலைத்திருந்தால் நீங்கள் விரும்பிக் கேட்பதெல்லாம் நடக்கும். நீங்கள் மிகுந்த கனி தந்து என் சீடராய் இருப்பதே என் தந்தைக்கு மாட்சி அளிக்கிறது."

சிந்தனை:
   இயேசுவே உண்மையான திராட்சைச் செடி. திராட்சைச் செடியோடு இணைந்து செழிக்கும் கொடிகளைப் போல, இயேசுவோடு இணைந்திருந்து பலன்தர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவில் நம்பிக்கை கொண்டிருக்கும் நாம் அனைவரும் நற்செய்தியின் தூதுவர்களாக திகழ்வதே, கடவுள் எதிர்பார்க்கும் பலன் தரும் வாழ்வாகும். அன்பு செயல்கள் வழியாக நமது நம்பிக்கையை பிறருக்கு வெளிப்படுத்தும்போது,  இயேசுவோடு இணைந்த திராட்சைக் கொடி களாய் நாமும் பலன்தர முடியும்.