Friday, August 16, 2013

ஆகஸ்ட் 18, 2013

பொதுக்காலம் 20-ம் ஞாயிறு
லூக்கா 12:49-53

   அக்காலத்தில் இயேசு தம் சீடரை நோக்கிக் கூறியது: "மண்ணுலகில் தீ மூட்ட வந்தேன். அது இப்பொழுதே பற்றி எரிந்து கொண்டிருக்க வேண்டும் என்பதே என் விருப்பம். ஆயினும் நான் பெற வேண்டிய ஒரு திருமுழுக்கு உண்டு. அது நிறைவேறுமளவும் நான் மிகவும் மன நெருக்கடிக் குள்ளாகி இருக்கிறேன். மண்ணுலகில் அமைதியை ஏற்ப டுத்த வந்தேன் என்றா நினைக்கிறீர்கள்? இல்லை, பிளவு உண்டாக்கவே வந்தேன் என உங்களுக்குச் சொல்கிறேன். இதுமுதல் ஒரு வீட்டிலுள்ள ஐவருள் இருவருக்கு எதிராக மூவரும் மூவருக்கு எதிராக இருவரும் பிரிந்திருப்பர். தந்தை மகனுக்கும், மகன் தந்தைக்கும், தாய் மகளுக்கும், மகள் தாய்க்கும், மாமியார் தன் மருமகளுக்கும், மருமகள் மாமியாருக்கும் எதிராகப் பிரிந் திருப்பர்.''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, இறையன்புத் தீயை மண்ணுலகில் மூட்ட வந்ததாக கூறுகிறார். கிறிஸ்தவர்கள் அனைவரின் இதயமும் இறையன்புத் தீயில் பற்றியெரிய வேண் டும் என்பதே ஆண்டவரின் விருப்பம். கிறிஸ்துவின் சீடர்கள் உலகப் போக்கின்படி வாழாமல், இறைவனுக்கு உகந்தவர்களாய் தனித்தன்மையுடன் வாழ அழைப்பு பெற்றிருக்கிறார்கள். நாம் அனைவரும் கிறிஸ்துவுக்காக வாழ, உலகத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட மக்களாக இருக்கிறோம். நம் விசுவாசத்தைக் காக்க பெற்றோரையும் பிள்ளைகளையும் எதிர்க்க நேரிட் டாலும் மன உறுதியோடு இருக்க வேண்டும் என்பதே இயேசு இன்று நமக்கு தரும் அழைப்பு. இதனால் குடும்பத்திலும் சமூகத்திலும், கிறிஸ்துவில் நம்பிக்கை கொண்டோரும், நம்பிக்கை கொள்ளாதோரும் பிரிந்திருப்பர் என்பதையே இயேசு சுட்டிக்காட்டுகிறார். கிறிஸ்து மூட்டிய இறையன்புத் தீ நம்மில் பற்றியெரிந்தால், அவர் மீதான நம்பிக்கையில் உறுதியாய் இருந்து நிலைவாழ்வைப் பெற்றுக்கொள்ள முடியும்.