வரலாறு

ஆண்டவர் இயேசுவின் திருத்தூதரான புனித தோமையார், கேரளாவில் நற்செய்தி அறிவித்து திருச்சபைகளை நிறுவிய பிறகு, திருவிதாங்கோடு வழியாக மணப்பாடு வரை பயணம் செய்து இலங்கை சென்றார். அவ்வாறு செல்லும் வழியில் பண்டாரக்குளம் ஆலயம் அமைந்துள்ள இடத்தில் சிறிது காலம் தங்கியிருந்து, இங்கு வாழ்ந்த மக்களுக்கு நற்செய்தி அறிவித்தார். அவரது போதனையை ஏற்றுக்கொண்ட மக்களுக்கு, ஆலயத்தின் பின்புறம் உள்ள வடமலையான் கால்வாயில் திருமுழுக்கு கொடுத்தார். அவர்கள் வழிபாட்டின் அடையாளமாக கற்சிலுவை ஒன்றையும் நிறுவினார்.

புனித தோமையாரிடம் திருமுழுக்கு பெற்ற மக்கள், கிறிஸ்தவ விசுவாசத்தையும் அவர் நிறுவிய கற்சிலுவையையும் பாதுகாக்க உறுதியெடுத்துக் கொண்டு தங்களை 'பண்டாரங்கள்' என்று அழைத்துக் கொண்டனர். பின்னர் இங்கிருந்து புறப்பட்ட தோமையார், கணக்கன் குடியிருப்பு, திருச்செந்தூர், மணப்பாடு உள்ளிட்ட இடங்களுக்கு சென்றார். இங்கு வாழ்ந்த பண்டார மக்கள், வடமலையான் கால்வாயில் நீரோட்டம் குறைந்த காலத்தில், தண்ணீர் தேவைக்காக குளம் ஒன்றை வெட்டினர். அது பண்டாரக்குளம் என்ற பெயர் பெற்று ஊரின் பெயராக நிலைத்துவிட்டது.

இங்கு வாழ்ந்த பண்டார மக்கள், தாங்கள் வழிபட்டு வந்த கற்சிலுவையை 'தொம்மையார் குருசு' என்று அழைத்தனர். 1543ஆம் ஆண்டு வள்ளியூர் பகுதியில் நற்செய்தி அறிவித்த பிரான்சிஸ் சவேரியார், பண்டாரக்குளத்திற்கு வந்து தோமையார் சிலுவை முன்பு செபித்ததாகக் கூறப்படுகிறது. அவரே இந்த சிலுவையை 'குருசு' என்று முதலில் அழைத்ததாகவும் இதிலுள்ள எழுத்துக்களைச் செதுக்க ஏற்பாடு செய்ததாகவும் பாரம்பரியம் சொல்கிறது. புனித அருளானந்தர் 1685ல் வடக்கன்குளம் செல்லும் வழியில் பண்டாரக்குளம் தொம்மையார் குருசை தரிசித்து வணங்கியுள்ளார்.

18ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட வறட்சியைத் தொடர்ந்து, இங்கு வாழ்ந்த பண்டார மக்கள் வேறு இடத்திற்கு சிறிது சிறிதாக இடம் பெயர்ந்தனர். ஆனால், தோமையார் சிலுவையைத் தாங்கிய குருசடி மட்டும் தற்போதைய ஆலயம் உள்ள இடத்தில் இருந்தது. வெளியூர்களில் குடியேறிய பண்டார மக்கள், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் இந்த குருசடிக்கு வந்து வழிபாடு நடத்திவிட்டுச் சென்றனர்.

1850ஆம் ஆண்டளவில், திருவிதாங்கோட்டில் இருந்து வந்த நாடார் பிரிவைச் சேர்ந்த வைத்தியமுத்து - மலையாயி என்ற கிறிஸ்தவ தம்பதியர் பண்டாரக்குளத்தில் குடியேறினர். அப்போது வழிபாடு நடத்த வந்த பண்டார மக்களின் இறுதி வாரிசு, தோமையார் குருசை பக்தியுடன் பராமரிக்குமாறு இந்த தம்பதியரிடம் வாக்குறுதி பெற்றுச் சென்றார். இதையடுத்து, அவர்கள் குடும்பத்தினரின் வழிபாட்டு இடமாக தோமையார் சிலுவை இருந்த குருசடி மாறியது.

பின்னர் இங்கு குடியேறிய அவர்களது உறவினர்களும், மற்ற கிறிஸ்தவர்களும் தோமையார் சிலுவை முன்பு கூடி செபம் சொல்லி வந்தனர். 1920களில் தற்போதுள்ள புனித தோமையார் ஆலயம் கட்டத் தொடங்கிய வேளையில், குருசடி இடிக்கப்பட்டது. ஊர்த்தலைவர் தொம்மை நாடாரின் முயற்சியால், ஊர் மக்கள் அனைவரின் ஒத்துழைப்புடன் 1928ஆம் ஆண்டு ஆலயம் கட்டி முடிக்கப்பட்டது. ஆனால், 'தோமையார் சிலுவை' ஓரமாக ஒதுக்கப்பட்டு கிடந்தது.

அப்போது பக்தியுள்ள ஒருவரின் கனவில் தோன்றிய புனித தோமையார், அந்த சிலுவைக்கு உரிய மரியாதை அளிக்கப்பட வேண்டும் என்று கூறினார். அதன் பிறகு, ஆலயத்தின் வடக்கு பக்கத்தில் பிரதான தெருவை நோக்கி சிறிய பீடத்தின் மீது 'தோமையார் குருசு' நிறுவப்பட்டு மக்களின் வணக்கத்தைப் பெற்றது. அதே நேரத்தில், கிழவநேரி பங்கின் கிளை ஆலயமாக இது இணைக்கப்பட்டது. அக்காலத்தில், செப்டம்பர் மாதம் திருச்சிலுவை விழாவும் புனித தோமையார் விழாவும் இணைத்து கொண்டாடப்பட்டன.

புனித தோமையார் திருவிழா ஜூலை 3ந்தேதிக்கு மாற்றப்பட்டதை அடுத்து, செப்டம்பர் 14ந்தேதி திருச்சிலுவை விழாவை தனியாக சிறப்பிக்கும் வழக்கம் உருவானது. புனித தோமையார் ஆலயத்தின் பொன்விழா 1978ஆம் ஆண்டும், பவள விழா 2003ஆம் ஆண்டும் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இதையடுத்து 2005ல், ஆலயத்தின் வடக்கு பக்கம் புதிதாக கட்டப்பட்ட கூடத்தில் 'தோமையார் சிலுவை' நிறுவப்பட்டது. 

அதுமுதல், முதல் வெள்ளிக்கிழமைகளில் திருச்சிலுவை பக்தி முயற்சிகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன. திருப்பலியுடன் நடைபெறும் மாலை வழிபாட்டில் சுற்று வட்டார மக்களும் திரளாக கலந்துகொண்டு ஆசீரும் அற்புதங்களும் பெற்றுச் செல்கின்றனர். வழிபாட்டில் பங்கேற்கும் பக்தர்களுக்கு உணவு பண்டங்களும் வழங்கப்படுகின்றன. தற்போது பண்டாரக்குளம் புனித தோமையார் ஆலயம், ஆனைகுளம் பங்கின் கிளைப்பங்காக உள்ளது.