Friday, July 26, 2013

ஜூலை 28, 2013

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
லூக்கா 11:1-13

   அக்காலத்தில் இயேசு ஓரிடத்தில் இறைவனிடம் வேண் டிக் கொண்டிருந்தார். அது முடிந்ததும் அவருடைய சீடர்க ளுள் ஒருவர் அவரை நோக்கி, "ஆண்டவரே, யோவான் தம் சீடருக்கு இறைவனிடம் வேண்டக் கற்றுக்கொடுத்தது போல் எங்களுக்கும் கற்றுக்கொடும்'' என்றார். அவர் அவர்க ளிடம், "நீங்கள் இறைவனிடம் வேண்டும்பொழுது இவ் வாறு சொல்லுங்கள்: தந்தையே, உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக! உமது ஆட்சி வருக! எங்கள் அன்றாட உணவை நாள்தோறும் எங்களுக்குத் தாரும். எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோர் அனைவரையும் நாங்கள் மன் னிப்பதால் எங்கள் பாவங்களையும் மன்னியும். எங்களைச் சோதனைக்கு உட்படுத்தாதேயும். தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்'' என்று கற்பித்தார்.
   மேலும் அவர் அவர்களை நோக்கிப் பின்வருமாறு கூறினார்: "உங்களுள் ஒருவர் தம் நண்பரிடம் நள்ளிரவில் சென்று, 'நண்பா, மூன்று அப்பங்களை எனக்குக் கடனாகக் கொடு. என்னுடைய நண்பர் ஒருவர் பயணம் செய்யும் வழியில் என்னிடம் வந்திருக்கிறார். அவ ருக்குக் கொடுக்க என்னிடம் ஒன்றுமில்லை' என்று சொல்வதாக வைத்துக் கொள்வோம். உள்ளே இருப்பவர், 'எனக்குத் தொல்லை கொடுக்காதே; ஏற்கெனவே கதவு பூட்டியாயிற்று; என் பிள்ளைகளும் என்னோடு படுத்திருக்கிறார்கள். நான் எழுந்திருந்து உனக்குத் தர முடி யாது' என்பார். எனினும் அவர் விடாப்பிடியாய்க் கதவைத் தட்டிக்கொண்டேயிருந்தால், அவர் தம் நண்பர் என்பதற்காக எழுந்து கொடுக்காவிட்டாலும், அவரது தொல்லையின் பொருட் டாவது எழுந்து அவருக்குத் தேவையானதைக் கொடுப்பார் என நான் உங்களுக்குச் சொல் கிறேன். மேலும் நான் உங்களுக்குச் சொல்கிறேன்: கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப் படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்களுக்குத் திறக்கப்படும். ஏனெ னில் கேட்போர் எல்லாரும் பெற்றுக் கொள்கின்றனர்; தேடுவோர் கண்டடைகின்றனர்; தட்டு வோருக்குத் திறக்கப்படும். பிள்ளை மீனைக் கேட்டால் உங்களுள் எந்தத் தந்தையாவது மீனுக்குப் பதிலாகப் பாம்பைக் கொடுப்பாரா? முட்டையைக் கேட்டால் அவர் தேளைக் கொடுப்பாரா? தீயோர்களாகிய நீங்களே உங்கள் பிள்ளைகளுக்கு நற்கொடைகள் அளிக்க அறிந்திருக்கிறீர்கள். அப்படியானால் விண்ணகத் தந்தை தம்மிடம் கேட்போருக்குத் தூய ஆவியைக் கொடுப் பது எத்துணை உறுதி!''

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசுவின் சீடர்களுள் ஒருவர், செபிக்க (இறைவனிடம் வேண்ட) கற்றுக் கொடுக்குமாறு கேட்கிறார். உடனே இயேசு, இறைத் தந்தையை நோக்கி வேண்டல் செய்ய சீடர்களுக்கு கற்றுக் கொடுப்பதைக் காண்கிறோம். செபங்களில் சிறந்த செபமாக இது உள்ளது. இறைப்புகழ்ச்சி, இறையாட்சியை வரவேற்றல், உணவு, மன்னிப்பு, மீட்புக்காக வேண்டல் ஆகியவை இந்த செபத்தின் பாடமாக அமைந்துள்ளன. செபிக்க கற்றுக் கொடுக்கும் இயேசு, அதன் பயனையும் சீடர்களுக்கு சொல்லிக் கொடுக்கிறார். "கேளுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும்; தேடுங்கள், நீங்கள் கண்டடைவீர்கள்; தட்டுங்கள் உங்க ளுக்குத் திறக்கப்படும்" என்ற வாழ்க்கை பாடம் இங்கு கற்பிக்கப்படுகிறது. விடாமுயற்சியு டன் செபம் செய்தால் நாம் விரும்பும் நன்மைகளை உறுதியாக பெற்றுக்கொள்வோம் என்பதை இயேசு நமக்கு தெளிவுபடுத்துகிறார். இயேசு விரும்புவது போன்று நாம் தூய ஆவியைக் கேட்டு பெற்றுக்கொண்டால், கடவுளின் திருவுளத்தை இம்மண்ணில் நிறை வேற்றுபவர்களாக வாழ முடியும்.

Friday, July 19, 2013

ஜூலை 21, 2013

பொதுக்காலம் 16-ம் ஞாயிறு
லூக்கா 10:38-42

   அக்காலத்தில் இயேசு ஓர் ஊரை அடைந்தார். அங்கே பெண் ஒருவர் அவரைத் தம் வீட்டில் வரவேற்றார். அவர் பெயர் மார்த்தா. அவருக்கு மரியா என்னும் சகோதரி ஒரு வர் இருந்தார். மரியா ஆண்டவருடைய காலடி அருகில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருந்தார். ஆனால் மார்த்தா பற்பல பணிகள் புரிவதில் பரபரப்பாகி இயேசுவிடம் வந்து, "ஆண்டவரே, நான் பணிவிடை செய்ய என் சகோதரி என்னைத் தனியே விட்டு விட்டாளே, உமக் குக் கவலையில்லையா? எனக்கு உதவி புரியும்படி அவளி டம் சொல்லும்'' என்றார். ஆண்டவர் அவரைப் பார்த்து, "மார்த்தா, மார்த்தா! நீ பலவற்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கலங்குகிறாய். ஆனால் தேவையானது ஒன்றே. மரியா -வோ நல்ல பங்கைத் தேர்ந்தெடுத்துக் கொண்டாள்; அது அவளிடமிருந்து எடுக்கப்படாது'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கடவுளின் திருவுளத்தை நிறைவேற்றுவது பற்றியப் பாடத்தைக் கற்றுத் தருகிறார். பெத்தானியாவில் உள்ள லாசரின் வீட்டுக்கு இயேசு செல் கிறார். அங்கு லாசரின் சகோதரிகளான மார்த்தாவும், மரியாவும் இருக்கிறார்கள். இயேசுவை வரவேற்றதும், அவருக்கு விருந்து படைக்கும் பணியில் மார்த்தா மும்முரமாக இறங்கு கிறார். மார்த்தாவுக்கு உதவி செய்யாமல், மரியா, இயேசுவின் காலடியில் அமர்ந்து அவர் சொல்வதை கேட்டுக் கொண்டிருப்பதைக் காண்கிறோம். மரியா மீதான தனது ஆதங்கத்தை, மார்த்தா, இயேசுவிடம் வெளிப்படுத்துகிறார். அனைத்தையும் செய்ய வல்ல ஆண்டவர் அரு கில் இருக்கும்போது, எதைப் பற்றியும் கலைப்படத் தேவையில்லை என்பதை மார்த்தாவுக்கு இயேசு தெளிவுபடுத்துகிறார். மரியாவைப் போன்று இறைவன் முன்னிலையில் அமர்ந்து, அவரது வார்த்தைக்கு செவிகொடுப்பது முக்கியம் என்பதே இயேசு கற்றுத்தரும் பாடம். ஆண் டவரின் திருவுளத்தை உவப்புடன் நிறைவேற்றும்போது, நமது வாழ்வை கவலையின்றி எதிர் கொள்ள முடியும்.

Friday, July 12, 2013

ஜூலை 14, 2013

பொதுக்காலம் 15-ம் ஞாயிறு
லூக்கா 10:25-37

   அக்காலத்தில், திருச்சட்ட அறிஞர் ஒருவர் எழுந்து இயேசுவைச் சோதிக்கும் நோக்குடன், "போதகரே, நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள நான் என்ன செய்ய வேண்டும்?" என்று கேட்டார். அதற்கு இயேசு, "திருச்சட்ட நூலில் என்ன எழுதியிருக்கிறது? அதில் நீர் என்ன வாசிக் கிறீர்?" என்று அவரிடம் கேட்டார். அவர் மறுமொழியாக, "'உன் முழு இதயத்தோடும், முழு உள்ளத்தோடும், முழு ஆற்றலோடும், முழு மனத்தோடும் உன் கடவுளாகிய ஆண்டவரிடம் அன்பு கூர்வாயாக. உன்மீது நீ அன்புகூர்வது போல் உனக்கு அடுத்திருப்பவர் மீதும் அன்பு கூர்வாயாக' என்று எழுதியுள்ளது" என்றார். இயேசு, "சரியாய்ச் சொன் னீர்; அப்படியே செய்யும்; அப்பொழுது வாழ்வீர்" என்றார்.
   அவர், தம்மை நேர்மையாளர் எனக் காட்ட விரும்பி, "எனக்கு அடுத்திருப்பவர் யார்?" என்று இயேசுவிடம் கேட்டார். அதற்கு அவர் மறுமொழியாகக் கூறிய உவமை: "ஒருவர் எருசலே மிலிருந்து எரிகோவுக்குப் போகும்போது கள்வர் கையில் அகப்பட்டார். அவருடைய ஆடை களை அவர்கள் உரிந்து கொண்டு, அவரை அடித்துக் குற்றுயிராக விட்டுப் போனார்கள். குரு ஒருவர் தற்செயலாய் அவ்வழியே வந்தார். அவர் அவரைக் கண்டதும் மறுபக்கம் விலகிச் சென்றார். அவ்வாறே லேவியர் ஒருவரும் அவ்விடத்துக்கு வந்து அவரைக் கண்டதும் மறு பக்கமாய் விலகிச் சென்றார். ஆனால் அவ்வழியே பயணம் செய்துகொண்டிருந்த சமாரியர் ஒருவர் அருகில் வந்து அவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டார். அவர் அவரை அணுகி, காயங்களில் திராட்சை மதுவும் எண்ணெயும் வார்த்து, அவற்றைக் கட்டி, தாம் பயணம் செய்த விலங்கின் மீது ஏற்றி, ஒரு சாவடிக்குக் கொண்டுபோய் அவரைக் கவனித்துக் கொண்டார். மறுநாள் இரு தெனாரியத்தை எடுத்து, சாவடிப் பொறுப்பாளரிடம் கொடுத்து, 'இவரைக் கவனித்துக் கொள்ளும்; இதற்கு மேல் செலவானால் நான் திரும்பி வரும்போது உமக்குத் தருவேன்' என்றார். கள்வர் கையில் அகப்பட்டவருக்கு இம்மூவருள் எவர் அடுத் திருப்பவர் என உமக்குத் தோன்றுகிறது?" என்று இயேசு கேட்டார். அதற்கு திருச்சட்ட அறி ஞர், "அவருக்கு இரக்கம் காட்டியவரே" என்றார். இயேசு, "நீரும் போய் அப்படியே செய்யும்" என்று கூறினார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, "தேவையில் உதவி செய்பவரே அடுத்திருப்பவர்" என்ற விளக்கத்தைத் தருவதுடன், நாமும் அடுத்திருப்பவர்களாக வாழ அழைப்பு விடுக்கிறார். எரிகோவுக்குப் போகும் வழியில் கள்வர் கையில் அகப்பட்டவரின் கதையைக் கூறும் இயேசு, அதன் நாயகராக யூதர்களால் தாழ்வாக கருதப்பட்ட ஒரு சமாரியரை முன்னிறுத்துகிறார். இறைப்பணி செய்யும் யூத குருவும், லேவியரும் மனிதநேயத்தோடு நடந்து கொள்ளவில்லை என்று இயேசு சாடுகிறார். இறையன்பால் மட்டும் ஒருவர் கடவுளின் கட்டளையை நிறைவு செய்தவர் ஆக முடியாது; இறையன்போடு பிறரன்பும் இணையும் பொழுதுதான் கடவுளின் கட்டளைகள் ஒருவரது வாழ்வில் நிறைவு செய்யப்படுகின்றன என்பதை இயேசு தெளிவு படுத்துகிறார். உவமையில் வரும் நல்ல சமாரியர், அடிபட்டுக் கிடந்தவரைக் கண்டபோது அவர்மீது பரிவு கொண்டு உதவி செய்ததைக் காண்கிறோம். நாமும் அவ்வாறே தேவையில் இருப்பவர்களுக்கு உதவி செய்பவர்களாய் வாழ அழைக்கப்படுகிறோம். ஆண்டவர் இயேசு கூறிய வழியில் அடுத்திருப்பவர்களாய் இருக்கும்போது, நாமும் கடவுளின் கட்டளைகளை நிறைவு செய்கிற நேர்மையாளர்களாய் நிலை வாழ்வை உரிமையாக்கிக் கொள்ள முடியும்.

Friday, July 5, 2013

ஜூலை 7, 2013

பொதுக்காலம் 14-ம் ஞாயிறு
லூக்கா 10:1-12,17-20

   அக்காலத்தில் இயேசு எழுபத்திரண்டு பேரை நியமித்து, அவர்களைத் தாம் போக இருந்த எல்லா ஊர்களுக்கும் இடங்களுக்கும் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப் பினார். அப்போது அவர் அவர்களை நோக்கிக் கூறியது: "அறுவடை மிகுதி; வேலையாள்களோ குறைவு. ஆகை யால் தமது அறுவடைக்குத் தேவையான வேலையாள் களை அனுப்பும்படி அறுவடையின் உரிமையாளரிடம் மன் றாடுங்கள். புறப்பட்டுப் போங்கள்; ஓநாய்களிடையே ஆட் டுக் குட்டிகளை அனுப்புவதுபோல் உங்களை நான் அனுப்பு கிறேன். பணப் பையோ வேறு பையோ மிதியடிகளோ எதுவும் நீங்கள் எடுத்துச் செல்ல வேண்டாம்; வழியில் எவருக்கும் வணக்கம் செலுத்த வேண்டாம். நீங்கள் எந்த வீட்டுக்குள் சென்றாலும், 'இந்த வீட்டுக்கு அமைதி உண்டாகுக!' என முதலில் கூறுங்கள். அமைதியை விரும்புபவர் அங்கு இருந்தால், நீங்கள் வாழ்த்திக் கூறிய அமைதி அவரிடம் தங்கும்; இல்லாவிட்டால் அது உங்களிடமே திரும்பிவிடும். அவர்களிடம் உள்ளதை நீங்கள் உண்டு குடித்து அந்த வீட்டி லேயே தங்கியிருங்கள். ஏனெனில் வேலையாளர் தம் கூலிக்கு உரிமை உடையவரே; வீடு வீடாய்ச் செல்லவேண்டாம். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக் கொண்டால் உங்க ளுக்குப் பரிமாறுவதை உண்ணுங்கள். அங்கு உடல் நலம் குன்றியோரைக் குணமாக்கி, இறை யாட்சி அவர்களை நெருங்கி வந்துவிட்டது எனச் சொல்லுங்கள். நீங்கள் செல்லும் ஊரில் உங்களை ஏற்றுக்கொள்ளாவிட்டால் அதன் வீதிகளில் சென்று, 'எங்கள் கால்களில் ஒட்டி யுள்ள உங்கள் ஊர்த் தூசியையும் உங்களுக்கு எதிராக உதறிவிடுகிறோம். ஆயினும் இறை யாட்சி நெருங்கி வந்துவிட்டது என்பதை அறிந்து கொள்ளுங்கள்' எனச் சொல்லுங்கள். அந்த நாளில் அவ்வூர் பெறும் தண்டனை சோதோம் நகரினர் பெறும் தண்டனையை விடக் கடினமாகவே இருக்கும் என உங்களுக்குச் சொல்கிறேன்."
   பின்னர் எழுபத்திரண்டு பேரும் மகிழ்வுடன் திரும்பி வந்து, "ஆண்டவரே, உமது பெயரைச் சொன்னால் பேய்கள் கூட எங்களுக்கு அடிபணிகின்றன" என்றனர். அதற்கு அவர், "வானத்தி லிருந்து சாத்தான் மின்னலைப் போல விழக் கண்டேன். பாம்புகளையும் தேள்களையும் மிதிக்கவும், பகைவரின் வல்லமை அனைத்தையும் வெல்லவும் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருக்கிறேன். உங்களுக்கு எதுவுமே தீங்கு விளைவிக்காது. ஆயினும் தீய ஆவிகள் உங்களுக்கு அடிபணிகின்றன என்பது பற்றி மகிழ வேண்டாம். மாறாக, உங்கள் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன என்பது பற்றியே மகிழுங்கள்" என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு எழுபத்திரண்டு சீடர்களை நியமித்து, அவர்களைத் தமக்கு முன்னே இருவர் இருவராக அனுப்புவதைக் காண்கிறோம். ஆண்டவருக்குரிய அறுவடை மிகுதியாக இருந்தும், அதை செய்வதற்கு வேலையாட்கள் பற்றாக்குறை இருப்பதாக இயேசு குறிப்பிடுகிறார். ஆண்டவரின் பணிக்காக அனுப்பப்பட இருப்பவர்களை, அதற்காக செபிக்கு மாறும் பணிக்கிறார். கடவுளுக்காக அறுவடை பணியை செய்பவர்கள், ஓநாய்களிடையே அனுப்பப்படும் ஆட்டுக் குட்டிகளை போன்று இருப்பதாக இயேசு விளக்குகிறார். கிறிஸ்து வுக்காக உழைப்பவர்கள் பிறருக்கு பயப்படத் தேவையில்லை; தங்கள் உழைப்புக்கேற்ற கூலிக்கு அவர்கள் உரிமை உடையவர்களே; கிறிஸ்துவை ஏற்றுக்கொள்வோருக்கு அமை தியை வாக்களிக்கவும், அவரை புறக்கணிப்போருக்கு எதிராக தீர்ப்பளிக்கவும் நம் ஆண்டவர் அதிகாரம் அளித்துள்ளார். எழுபத்திரண்டு சீடர்களும், ஆண்டவரின் பெயரால் நோய்களை குணமாக்கியதையும், பேய்களை ஓட்டியதையும் இயேசுவிடம் பகிர்ந்துகொள்வதை இங்கு காண்கிறோம். நாம் கிறிஸ்துவால் அனுப்பப்பட்டவர்கள் என்பதை உணர்ந்து வாழும்போது, நம் பெயர்கள் விண்ணகத்தில் எழுதப்பட்டிருக்கிறதை குறித்து மகிழ்ச்சியடைய முடியும்.