Saturday, June 1, 2013

ஜூன் 2, 2013

கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழா
லூக்கா 9:11-17

   அக்காலத்தில் இயேசு மக்களை வரவேற்று இறையாட்சி யைப் பற்றி அவர்களோடு பேசி, குணமாக வேண்டியவர் களைக் குணப்படுத்தினார். பொழுது சாயத் தொடங்கவே பன்னிருவரும் அவரிடம் வந்து, "இவ்விடம் பாலை நிலம் ஆயிற்றே; சுற்றிலும் உள்ள ஊர்களுக்கும் பட்டிகளுக்கும் சென்று தங்கவும் உணவு வாங்கிக்கொள்ளவும் மக்கள் கூட்டத்தை அனுப்பிவிடும்'' என்றனர். இயேசு அவர்களி டம், "நீங்களே அவர்களுக்கு உணவு கொடுங்கள்'' என்றார். அவர்கள், "எங்களிடம் ஐந்து அப்பங்களும் இரண்டு மீன் களுமே உள்ளன. நாங்கள் போய் இத்தனை பேருக்கும் உணவு வாங்கி வந்தால்தான் முடியும்'' என்றார்கள். ஏனெ னில் ஏறக்குறைய ஐயாயிரம் ஆண்கள் அங்கு இருந்தனர். இயேசு அவருடைய சீடர்களை நோக்கி, "இவர்களை ஐம்பது ஐம்பது பேராகப் பந்தியில் அமரச் செய்யுங்கள்'' என்றார். அவர் சொன்னபடியே அனைவரையும் அவர்கள் பந்தியில் அமரச் செய்தார்கள். அவர் அந்த ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் எடுத்து வானத்தை அண்ணாந்து பார்த்து, அவற் றின்மீது ஆசி கூறி, பிட்டு, மக்களுக்குப் பரிமாறுவதற்காகச் சீடரிடம் கொடுத்தார். அனைவ ரும் வயிறார உண்டனர். எஞ்சிய துண்டுகளைப் பன்னிரண்டு கூடைகள் நிறைய எடுத்தனர்.

சிந்தனை:
   நாம் இன்று, கிறிஸ்துவின் திருஉடல் திருஇரத்தம் பெருவிழாவை கொண்டாடுகிறோம். இன்றைய நற்செய்தியில் இயேசு, ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் ஐயாயிரம் பேருக்கு உணவாக அளிப்பதை காண்கிறோம். இந்நிகழ்வு, கிறிஸ்துவின் நற்கருணை விருந் துக்கு முன் அடையாளமாக இருக்கிறது. தமது சிலுவை பலியை எக்காலத்துக்கும் நிலை நிறுத்தும் அடையாளமாக, இயேசு நற்கருணையை ஏற்படுத்தினார். கிறிஸ்துவின் திரு விருந்தில் அப்பத்தை உண்டு கிண்ணத்திலிருந்து பருகும் போதெல்லாம் ஆண்டவருடைய சாவை அவர் வரும்வரை நாம் அறிவிக்கிறோம். கோதுமை அப்பத்திலும், திராட்சை இரசத் திலும் மறைபொருளாக நம்முடன் உறைந்துள்ள இயேசுவின் உடனிருப்பை முழுமையாக உணர நாம் அழைக்கப்படுகிறோம். நற்கருணையில் கிறிஸ்துவை உணவாக உட்கொள்ளும் நாம், அவரது மறையுடல் உறுப்புகள் என்பதை உணரும்போது ஒற்றுமையுடன் அவருக்கு சான்றுபகர முடியும்.