Friday, June 7, 2013

ஜூன் 9, 2013

பொதுக்காலம் 10-ம் ஞாயிறு
லூக்கா 7:11-17

   அக்காலத்தில் இயேசு நயீன் என்னும் ஊருக்குச் சென் றார். அவருடைய சீடரும் பெருந்திரளான மக்களும் அவரு டன் சென்றனர். அவர் அவ்வூர் வாயிலை நெருங்கி வந்த போது, இறந்த ஒருவரைச் சிலர் தூக்கி வந்தனர். தாய்க்கு அவர் ஒரே மகன்; அத்தாயோ கைம்பெண். அவ்வூரைச் சேர்ந்த பெருந்திரளான மக்களும் அவரோடு இருந்தனர். அவரைக் கண்ட ஆண்டவர், அவர்மீது பரிவு கொண்டு, "அழாதீர்" என்றார். அருகில் சென்று பாடையைத் தொட் டார். அதைத் தூக்கிச் சென்றவர்கள் நின்றார்கள். அப்பொ ழுது அவர், "இளைஞனே, நான் உனக்குச் சொல்கிறேன், எழுந்திடு" என்றார். இறந்தவர் எழுந்து உட்கார்ந்து பேசத் தொடங்கினார். இயேசு அவரை அவர் தாயிடம் ஒப்படைத்தார். அனைவரும் அச்ச முற்று, "நம்மிடையே பெரிய இறைவாக்கினர் ஒருவர் தோன்றியிருக்கிறார். கடவுள் தம் மக்களைத் தேடி வந்திருக்கிறார்" என்று சொல்லி கடவுளைப் போற்றிப் புகழ்ந்தனர். அவரைப் பற்றிய இந்தச் செய்தி யூதேயா நாடு முழுவதிலும் சுற்றியுள்ள பகுதிகளிலும் பரவியது.

சிந்தனை:
  இன்றைய நற்செய்தியில் நாம் இரண்டு ஊர்வலங்களைப் பார்க்கிறோம். ஒன்று வாழ்வ ளிக்கும் இளைஞர் இயேசுவையும், மற்றொன்று இறந்துபோன நயீன் நகர இளைஞரையும் மையப்படுத்தியதாக உள்ளன. சாவின் காட்சியும் வாழ்வின் மாட்சியும் நகர வாயிலில் சந்திப்பதைக் காண்கிறோம். நாசரேத் கைம்பெண்ணின் ஒரே மகனான இயேசு, தன் ஒரே மகனை இழந்த நயீன் நகர கைம்பெண்ணின் பரிதாப நிலையை உணர்கிறார். மகனின் இழப்பால் ஆறுதல் இன்றி தவிக்கும் கைம்பெண்ணுக்கு உயிர்ப்பின் மகிழ்ச்சியை அளிக்க விரும்புகிறார். பாடையைத் தொட்டு, "இளைஞனே, எழுந்திடு!" என்று இயேசு கூறியதும், இறந்தவர் உயிர் பெறுவதைக் காண்கிறோம். இயேசுவின் வார்த்தைகள் உயிர் அளிப்பவை, வாழ்வு தருபவை என்பதை உணர நாம் அழைக்கப்படுகிறோம். இயேசுவின் வார்த்தைக்கு முக்கியத்துவம் கொடுத்தால், நமது வாழ்வும் புத்துயிர் பெறும்.