Friday, December 21, 2012

டிசம்பர் 23, 2012

திருவருகைக்காலம் 4-ம் ஞாயிறு
லூக்கா 1:39-45
   அக்காலத்தில் மரியா புறப்பட்டு யூதேய மலைநாட்டிலுள்ள ஒர் ஊருக்கு விரைந்து சென்றார். அவர் செக்கரியாவின் வீட்டை அடைந்து எலிசபெத்தை வாழ்த்தினார். மரியாவின் வாழ்த்தை எலிசபெத்து கேட்டபொழுது எலிசபெத்து வயிற்றி லிருந்த குழந்தை மகிழ்ச்சி யால் துள்ளிற்று. எலிசபெத்து தூய ஆவியால் முற்றிலும் ஆட்கொள்ளப்பட்டார். அப் போது எலிசபெத்து உரத்த குரலில், "பெண்களுக்குள் நீர் ஆசி பெற்ற வர்; உம் வயிற்றில் வளரும் குழந்தையும் ஆசி பெற்றதே! என் ஆண்டவரின் தாய் என்னிடம் வர நான் யார்? உம் வாழ்த் துரை என் காதில் விழுந்ததும் என் வயிற்றினுள்ளே குழந்தை பேருவகையால் துள்ளிற்று. ஆண்டவர் உமக்கு சொன்னவை நிறைவேறும் என்று நம்பிய நீர் பேறுபெற்றவர்'' என்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், நம்பிக்கையால் இறைமகனைக் கருத்தாங்கிய மரியா எலிச பெத்தை சந்தித்து வாழ்த்திய நிகழ்வைக் காண்கிறோம். இறைவனின் தாயாகும் பேறுபெற்ற நிலையிலும், மரியா எலிசபெத்துக்கு உதவி செய்ய விரைந்து செல்கிறார். இங்கு மரியா வின் தாழ்ச்சியுள்ள குழந்தை உள்ளத்தை நம்மால் காண முடிகிறது. எங்கு குழந்தை உள்ளம் இருக்கிறதோ அங்கே இறைவன் கருவாக உருவெடுப்பார். இறையன்னை மரியாவின் வாழ்த்து, எலிசபெத்தின் வயிற்றில் இருக்கும் யோவானை மகிழ்ச்சியால் துள்ளச் செய்கிறது. இறைமகனின் வருகையை முன்னறிவிக்க வந்தவர், தாயின் வயிற்றில் இருக்கும்போதே அவரை அடையாளம் கண்டு கொள்கிறார். நாமும் அன்னை மரியாவைப் போன்று நம்பிக்கை உள்ளவர்களாக இறைமகனை கருத்தாங்கி, யோவானைப் போன்று அவரில் மகிழ்ந்திருந் தால் ஆண்டவரை வரவேற்கும் பேறுபெற்றவர்களாக மாற முடியும்.