Friday, October 26, 2012

அக்டோபர் 28, 2012

பொதுக்காலம் 30-ம் ஞாயிறு

மாற்கு 10:46-52
   இயேசுவும் அவருடைய சீடரும் எரிகோவுக்கு வந்தனர். அவர்களும் திரளான மக்கள் கூட்டமும் எரிகோவைவிட்டு வெளியே சென்றபோது, திமேயுவின் மகன் பர்த்திமேயு வழியோரம் அமர்ந்திருந்தார். பார்வையற்ற அவர் பிச்சை எடுத்துக்கொண்டிருந்தார். நாசரேத்து இயேசுதாம் போகி றார் என்று அவர் கேள்விப்பட்டு, 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று கத்தத் தொடங்கினார். பேசாதிருக்குமாறு பலர் அவரை அதட்டினர்; ஆனால் அவர், 'தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று இன்னும் உரக்கக் கத்தினார். இயேசு நின்று, 'அவரைக் கூப்பிடுங்கள்' என்று கூறினார். அவர்கள் பார்வையற்ற அவரைக் கூப் பிட்டு, 'துணிவுடன் எழுந்து வாரும், இயேசு உம்மைக் கூப்பிடுகிறார்' என்றார்கள். அவரும் தம் மேலுடையை எறிந்து விட்டு, குதித்தெழுந்து இயேசுவிடம் வந்தார். இயேசு அவரைப் பார்த்து, 'உமக்கு நான் என்ன செய்ய வேண்டும் என விரும்புகிறீர்?' என்று கேட்டார். பார்வையற்றவர் அவரிடம், 'ரபூனி, நான் மீண்டும் பார்வை பெறவேண்டும்' என்றார். இயேசு அவரிடம், 'நீர் போகலாம்; உமது நம்பிக்கை உம்மை நலமாக்கிற்று' என்றார். உடனே அவர் மீண்டும் பார்வை பெற்று, அவரைப் பின்பற்றி அவருடன் வழி நடந்தார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, கண் தெரியாத பிச்சைக்காரருக்கு பார்வை அளிப்பதைக் காண்கிறோம். அவர் இயேசுவின் வல்ல செயல்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருந்ததால், அவர் தனக்கு பார்வை அளிக்க முடியும் என்று பர்த்திமேயு நம்பினார். இயேசு யாருக்கு அற்புதம் செய்தார் என்பதை அறியவில்லை என்றாலும், அவர் தனக்கும் பார்வையளிப்பார் என்று பர்த்திமேயு முழுமையாக நம்பினார். அவரது நம்பிக்கை மனதளவில் மட்டும் நின்று விடவில்லை. எனவே தான் அமர்ந்திருந்த வழியில் இயேசு செல்கிறார் என்பதை அறிந் ததும், 'இயேசுவே, தாவீதின் மகனே, எனக்கு இரங்கும்' என்று அபயக் குரல் எழுப்புகிறார். இயேசுவும் பர்த்திமேயுவின் நம்பிக்கைக்கு பதிலளிக்கும் வகையில், அவரை அருகில் அழைத்து அவருக்கு பார்வை அளிக்கிறார். நாமும் நமது விசுவாசத்தை அறிக்கையிட்டு, ஆண்டவரின் உதவியை நாடுகின்றபோது அவரது இரக்கத்தையும் உதவியையும் பெற்றுக் கொள்ள முடியும்.