Friday, July 27, 2012

ஜூலை 29, 2012

பொதுக்காலம் 17-ம் ஞாயிறு
யோவான் 6:1-15

   அக்காலத்தில் இயேசு கலிலேயக் கடலைக் கடந்து மறு கரைக்குச் சென்றார். அதற்குத் திபேரியக் கடல் என்றும் பெயர் உண்டு. உடல் நலம் அற்றோருக்கு அவர் செய்து வந்த அரும் அடையாளங்களைக் கண்டு மக்கள் பெருந்திர ளாய் அவரைப் பின்தொடர்ந்தனர். இயேசு மலைமேல் ஏறித் தம் சீடரோடு அமர்ந்தார். யூதருடைய பாஸ்கா விழா அண்மையில் நிகழவிருந்தது. இயேசு நிமிர்ந்து பார்த்து மக்கள் பெருந்திரளாய் அவரிடம் வருவதைக் கண்டு, "இவர் கள் உண்பதற்கு நாம் எங்கிருந்து அப்பம் வாங்கலாம்?'' என்று பிலிப்பிடம் கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந் திருந்தும் அவரைச் சோதிப்பதற்காகவே இக்கேள்வியைக் கேட்டார். பிலிப்பு மறுமொழியாக, "இருநூறு தெனாரியத்திற்கு அப்பம் வாங்கினாலும் ஆளுக்கு ஒரு சிறு துண்டும் கிடைக்காதே'' என்றார்.
   அவருடைய சீடருள் ஒருவரும் சீமோன் பேதுருவின் சகோதரருமான அந்திரேயா, "இங்கே சிறுவன் ஒருவன் இருக்கிறான். அவனிடம் ஐந்து வாற்கோதுமை அப்பங்களும் இரண்டு மீன்களும் உள்ளன. ஆனால் இத்தனை பேருக்கு இவை எப்படிப் போதும்?'' என்றார். இயேசு, "மக்களை அமரச் செய்யுங்கள்'' என்றார். அப்பகுதி முழுவதும் புல்தரையாய் இருந்தது. அமர்ந் திருந்த ஆண்களின் எண்ணிக்கை ஏறக்குறைய ஐயாயிரம். இயேசு அப்பங்களை எடுத்துக் கடவுளுக்கு நன்றி செலுத்தி அமர்ந்திருந்தோருக்குக் கொடுத்தார். அவ்வாறே மீன்களையும் பகிர்ந்தளித்தார். அவர்களுக்கு வேண்டியமட்டும் கிடைத்தது. அவர்கள் வயிறார உண்டபின், "ஒன்றும் வீணாகாதபடி, எஞ்சிய துண்டுகளைச் சேர்த்து வையுங்கள்'' என்று தம் சீடரிடம் கூறினார். மக்கள் உண்டபின் ஐந்து வாற்கோதுமை அப்பங்களிலிருந்து எஞ்சிய துண்டுகளைச் சேர்த்துச் சீடர்கள் பன்னிரண்டு கூடைகளில் நிரப்பினார்கள். இயேசு செய்த இந்த அரும் அடையாளத்தைக் கண்ட மக்கள், "உலகிற்கு வரவிருந்த இறைவாக்கினர் உண்மையில் இவரே'' என்றார்கள். அவர்கள் வந்து தம்மைப் பிடித்துக்கொண்டு போய் அரசராக்க போகிறார் கள் என்பதை உணர்ந்து இயேசு மீண்டும் தனியாய் மலைக்குச் சென்றார்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில் இயேசு, அப்பங்களையும் மீன்களையும் பலுகச் செய்து ஐந்தா யிரம் பேருக்கு உணவளிக்கிறார். இங்கு இயேசுவின் சீடர்களில் நிலவும் இரண்டு விதமான மனநிலைகளைப் பார்க்கிறோம். இருநூறு தெனாரியத்துக்கு அப்பம் வாங்கினாலும் யாருக் கும் பசியாற்ற முடியாது என்று பிலிப்பு நினைக்கிறார். ஐந்து அப்பங்களையும் இரண்டு மீன்களையும் கொண்டு இயேசுவால் அற்புதம் நிகழ்த்த முடியும் என்று அந்திரேயா நம்பு கிறார். பிலிப்பின் மனித சிந்தனை அல்ல, அந்திரேயாவின் இறை நம்பிக்கையே வெற்றி பெற்றது. நாமும் மனித சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டு முழு மனதோடு ஆண்டவரை நம்பும் பொழுது, நமது வாழ்வில் அற்புதங்களைக் காண முடியும்.