Friday, March 29, 2013

மார்ச் 31, 2013

ஆண்டவரின் உயிர்ப்பு பெருவிழா
யோவான் 20:1-9
   வாரத்தின் முதல் நாளன்று விடியற்காலையில் இருள் நீங்கும் முன்பே மகதலா மரியா கல்லறைக்குச் சென்றார்; கல்லறை வாயிலில் இருந்த கல் அகற்றப்பட்டிருப்பதைக் கண்டார். எனவே அவர் சீமோன் பேதுருவிடமும் இயேசு தனி அன்பு கொண்டிருந்த மற்ற சீடரிடமும் வந்து, "ஆண்டவரைக் கல்லறையிலிருந்து யாரோ எடுத்துக் கொண்டு போய்விட்டனர்; அவரை எங்கே வைத்தனரோ, எங்களுக்குத் தெரியவில்லை!'' என்றார்.
    இதைக் கேட்ட பேதுருவும் மற்றச் சீடரும் கல்லறைக்குப் புறப்பட்டனர். இருவரும் ஒருமித்து ஓடினர். மற்றச் சீடர் பேதுருவைவிட விரைவாக ஓடி முதலில் கல்லறையை அடைந்தார். அவர் குனிந்து பார்த்தபோது துணிகள் கிடப் பதைக் கண்டார்; ஆனால் உள்ளே நுழையவில்லை. அவ ருக்குப் பின்னாலேயே சீமோன் பேதுருவும் வந்தார். நேரே அவர் கல்லறைக்குள் நுழைந்தார். அங்குத் துணிகளையும், இயேசுவின் தலையை மூடியிருந்த துண்டையும் கண்டார். அத் துண்டு மற்ற துணிகளோடு இல்லாமல் ஓரிடத்தில் தனியாகச் சுருட்டி வைக்கப்பட்டிருந்தது. பின்னர், கல்லறைக்கு முதலில் வந்து சேர்ந்த மற்றச் சீடரும் உள்ளே சென்றார்; கண்டார்; நம்பினார். இயேசு இறந்து உயிர்த்தெழ வேண்டும் என்னும் மறைநூல் வாக்கை அவர்கள் அதுவரை புரிந்துகொள்ள வில்லை.

சிந்தனை:
   இயேசுவின் உயிர்ப்பு இன்றும் பலரால் புரிந்துகொள்ள இயலாத, ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகவே உள்ளது. முதன்முதலில் உயிர்ப்பைப்பற்றி கேள்விப்பட்ட இயேசுவின் சீடர்கள் அதை புரிந்துகொள்ள முடியாமல் போனதில் வியப்பேதும் இல்லை. ஆனால் இயேசுவுக்காக தங்கள் உயிரையே கையளிக்கும் அளவுக்கு அவர்கள் பெற்ற துணிவு, அவரது உயிர்ப்புக்கு இன்றளவும் சான்றாக திகழ்கிறது. மரணத்தை வென்ற இறைமகன் இயேசு என்றென்றும் வாழ்கிறார். அவர் மாட்சியுடன் மீண்டும் வரும் வேளையில் நாமும் மாட்சி பொருந்தியவர் களாய் தோன்றுவோம். நாமும் உயிர்த்த இயேசுவில் நம்பிக்கை கொள்ளும்போது உண்மை யான அவரது உயிர்ப்புக்கு உறுதியுடன் சான்று பகர முடியும்.