Friday, January 18, 2013

ஜனவரி 20, 2013

பொதுக்காலம் 2-ம் ஞாயிறு
யோவான் 2:1-12
   கலிலேயாவில் உள்ள கானாவில் திருமணம் ஒன்று நடைபெற்றது. இயேசுவின் தாயும் அங்கு இருந்தார். இயேசுவும் அவருடைய சீடரும் அத்திருமணத்திற்கு அழைப்புப் பெற்றிருந்தனர். திருமண விழாவில் திராட்சை இரசம் தீர்ந்துபோகவே இயேசுவின் தாய் அவரை நோக்கி, "திராட்சை இரசம் தீர்ந்துவிட்டது'' என்றார். இயேசு அவரி டம், "அம்மா, அதைப் பற்றி நாம் என்ன செய்ய முடியும்? எனது நேரம் இன்னும் வரவில்லையே'' என்றார்.
   இயேசுவின் தாய் பணியாளரிடம், "அவர் உங்களுக்குச் சொல்வதெல்லாம் செய்யுங்கள்'' என்றார். யூதரின் தூய் மைச் சடங்குகளுக்குத் தேவையான ஆறு கல்தொட்டிகள் அங்கே இருந்தன. அவை ஒவ்வொன்றும் இரண்டு மூன்று குடம் தண்ணீர் கொள்ளும். இயேசு அவர்களிடம், "இத் தொட்டிகளில் தண்ணீர் நிரப்புங்கள்'' என்று கூறினார். அவர்கள் அவற்றை விளிம்புவரை நிரப்பினார்கள். பின்பு அவர், "இப்போது மொண்டு பந்தி மேற்பார்வையாளரிடம் கொண்டு போங்கள்'' என்று அவர்களிடம் கூறினார். அவர்களும் அவ்வாறே செய்தார்கள்.
   பந்தி மேற்பார்வையாளர் திராட்சை இரசமாய் மாறியிருந்த தண்ணீரைச் சுவைத்தார். அந்த இரசம் எங்கிருந்து வந்தது என்று அவருக்குத் தெரியவில்லை; தண்ணீர் மொண்டு வந்த பணியாளருக்கே தெரிந்திருந்தது. ஆகையால் பந்தி மேற்பார்வையாளர் மணமகனைக் கூப் பிட்டு, "எல்லாரும் நல்ல திராட்சை இரசத்தை முதலில் பரிமாறுவர்; யாவரும் விருப்பம் போலக் குடித்தபின்தான் தரம் குறைந்த இரசத்தைப் பரிமாறுவர். நீர் நல்ல இரசத்தை இதுவரை பரிமாறாமல் ஏன் வைத்திருந்தீர்?'' என்று கேட்டார். இதுவே இயேசு செய்த முதல் அரும் அடையாளம். இது கலிலேயாவில் உள்ள கானாவில் நிகழ்ந்தது. இதன் வழியாக அவர் தம் மாட்சியை வெளிப்படுத்தினார். அவருடைய சீடரும் அவரிடம் நம்பிக்கை கொண்டனர்.
   இதன் பிறகு அவரும் அவர் தாயும் சகோதரர்களும் அவருடைய சீடரும் கப்பர்நாகும் சென்று அங்குச் சில நாள்கள் தங்கியிருந்தனர்.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தியில், இறைமகன் இயேசு பொது வாழ்வில் செய்த முதல் அரும் அடையாளத்தைக் காண்கிறோம். இயேசு, தனது தாயுடனும் சீடர்களுடனும் ஒரு திருமண விருந்துக்கு செல்கிறார். அங்கே விருந்துக்கு மிகத் தேவையானதும், குடும்பத்தின் மதிப்பை பறைசாற்றுவதுமான திராட்சை இரசம் தீர்ந்துவிடுகிறது. அநேகமாக இந்த செய்தி, மண மகனின் தாய் மூலமாக அன்னை மரியாவுக்குத் தெரிந்திருக்க வேண்டும். அவர் தன் மகனில் முழுமையான நம்பிக்கை கொண்டவராக, அற்புதம் நிகழ்த்துவதற்கான கோரிக் கையை முன்வைக்கிறார். அதற்கான நேரம் வரவில்லை என்று கூறி இயேசு தட்டிக்கழிக்க நினைத்தா லும், மரியா தனது நம்பிக்கையில் முன்னோக்கிச் சென்று "அவர் உங்களுக்குச் சொல்வ தெல்லாம் செய்யுங்கள்" என்று பணியாளரிடம் அறிவுறுத்துகிறார். அன்னை மரியாவின் நம்பிக்கையாலும் பரிந்துரையாலும் அங்கு முதல் அரும் அடையாளம் நிகழ்கிறது. நாமும் ஆண்டவரில் முழு நம்பிக்கை கொண்டவர்களாய், நமது வேண்டுதல்களை அவரிடம் சமர்ப் பிக்கும் பொழுது புதுமைகளைக் காண முடியும்.