Friday, January 11, 2013

ஜனவரி 13, 2013

ஆண்டவரின் திருமுழுக்கு பெருவிழா
லூக்கா 3:15-16,21-22
   அக்காலத்தில் மக்கள் மீட்பரை எதிர்பார்த்துக் கொண்டிருந் தார்கள். ஒருவேளை யோவான் மெசியாவாக இருப்பாரோ என்று எல்லாரும் தங்களுக்குள் எண்ணிக்கொண்டிருந்தார்கள். யோவான் அவர்கள் அனைவரையும் பார்த்து, "நான் தண்ணீரால் உங்களுக் குத் திருமுழுக்குக் கொடுக்கிறேன்; ஆனால் என்னைவிட வலிமை மிக்க ஒருவர் வருகிறார். அவருடைய மிதியடி வாரை அவிழ்க்கக் கூட எனக்குத் தகுதியில்லை. அவர் தூய ஆவி என்னும் நெருப் பால் உங்களுக்குத் திருமுழுக்குக் கொடுப்பார்" என்றார்.
   மக்கள் எல்லாரும் திருமுழுக்குப் பெறும் வேளையில் இயேசு வும் திருமுழுக்குப் பெற்று, இறைவனிடம் வேண்டிக்கொண்டிருந்த போது வானம் திறந்தது. தூய ஆவி புறா வடிவில் தோன்றி அவர் மீது இறங்கியது. அப்பொழுது, "என் அன்பார்ந்த மகன் நீயே, உன் பொருட்டு நான் பூரிப்படைகிறேன்" என்று வானத்திலிருந்து ஒரு குரல் ஒலித்தது.

சிந்தனை:
   இன்றைய நற்செய்தி, யோவானிடம் இயேசு திருமுழுக்கு பெற்ற நிகழ்வை நமக்கு எடுத் துரைக்கிறது. மெசியாவின் வருகைக்காக காத்திருந்த இஸ்ரயேல் மக்களை, ஆண்டவரின் வருகைக்காக தயார் செய்யும் பணியை யோவான் செய்வதை இங்கு காண்கிறோம். தன்னை விடப் பெரியவரான இறைமகனின் வருகைக்காக, மக்களின் மனங்களை யோவான் தூய் மைப்படுத்துகிறார். யோவானின் கையால் திருமுழுக்கு பெறுமாறு இறைமகன் இயேசு யோர்தானுக்கு வருகிறார். இயேசுவின் இறையரசு பணியின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில், அவர் மீது தூய ஆவி இறங்கி வருகிறார்; தந்தையாம் இறைவனும் இயேசுவுக்கு சான்று பகர்கிறார். நீராலும் தூய ஆவியாலும் திருமுழுக்கு பெற்ற நாம் அனைவரும், இயேசுவைப் போன்று இறைத்தந்தையின் பிள்ளைகளாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம். திருமுழுக்கின் வழியாக திருச்சபையின் உறுப்பினர்களாக மாறியுள்ள நாம், இயேசுவின் சாட்சிகளாக வாழும்போது, இந்த உலகத்தின் தீய நாட்டங்களை வெற்றிகொள்ள முடியும்.