Friday, March 16, 2012

மார்ச் 18, 2012

தவக்காலம் 4-ம் ஞாயிறு
யோவான் 3:14-21
   அக்காலத்தில் இயேசு நிக்கதேமுக்கு கூறியது: "பாலை நிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது போல மானிடமகனும் உயர்த்தப்பட வேண்டும். அப்போது அவரி டம் நம்பிக்கை கொள்ளும் அனைவரும் நிலைவாழ்வு பெறுவர். தம் ஒரே மகன்மீது நம் பிக்கை கொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக் கடவுள் உலகின் மேல் அன்பு கூர்ந்தார். உலகிற்குத் தண்டனைத் தீர்ப்பளிக்க அல்ல, தம் மகன் வழியாக அதை மீட்கவே கடவுள் அவரை உலகிற்கு அனுப்பினார். அவர்மீது நம்பிக்கை கொள்வோர் தண்டனைத் தீர்ப்புக்கு ஆளாவதில்லை; ஆனால் நம்பிக்கை கொள்ளாதோர் ஏற்கெனவே தீர்ப்புப் பெற்றுவிட்டனர். ஏனெனில் அவர்கள் கடவுளின் ஒரே மகனிடம் நம்பிக்கை கொள்ளவில்லை. ஒளி உலகிற்கு வந்திருந்தும் தம் செயல்கள் தீயனவாய் இருந்ததால் மனிதர் ஒளியைவிட இருளையே விரும்பினர். இதில்தான் அவர்களுக்கு எதிரான தண்டனைத் தீர்ப்பு அடங்கியுள்ளது. தீங்கு செய்யும் அனைவரும் ஒளியை வெறுக்கின்றனர். தங்கள் தீச்செயல்கள் வெளியாகிவிடும் என அஞ்சி அவர்கள் ஒளியிடம் வருவதில்லை. உண்மைக்கேற்ப வாழ்பவர்கள் ஒளியிடம் வருகிறார்கள். இதனால் அவர்கள் செய்யும் அனைத்தையும் கடவுளோடு இணைந்தே செய்கிறார்கள் என்பது வெளியாகும்."

சிந்தனை:
   பாலைநிலத்தில் மோசேயால் பாம்பு உயர்த்தப்பட்டது இயேசுவின் சிலுவை மரணத்துக்கு முன் அடையாளம். வெண்கலப் பாம்பைக் கண்டோர் இவ்வுலக வாழ்வைப் பெற்றுக் கொண்டது போல, சிலுவையில் உயர்த்தப்பட்ட இறைமகனைக் கண்டுணர்வோர் மறுவுலக வாழ்வைப் பெற்றுக்கொள்வர். கடவுளின் ஒரே மகன்மீது நம்பிக்கை கொள்ளும்போது, நாம் ஒளிமயமான நிலைவாழ்வை உரிமையாக்கிக்கொள்ள முடியும்.