புதன் மறைபோதகம்: விசுவாசமுள்ள இளையோரே வருங்காலத் திருச்சபையின் நம்பிக்கை - திருத்தந்தை
காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள வளாகத்திலேயே திருப் பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் சந்தித்து, அண்மை நாட்களில் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளுக்கு மனதளவில் திரும்பச் சென்று அந்நாட்களின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார்.
அனைத்துக் கண்டங்களிலிருந்தும் ஏறத்தாழ இருபது இலட்சம் இளையோர் மகிழ்வுடனும் சகோதரத்துவ உணர்வுடனும், இறைவனுடன் ஆன உரையாடலுக்கும், தங்கள் விசுவாசத்தைப் பகிரவும் அதில் வளரவும், வானிலிருந்து வரும் ஒளியைப்பெறவும் கூடியிருந்ததைக் காணமுடிந்தது. திருச்சபையோடு இணைந்து விசுவாச உறுதிப்பாட்டில் இணைந்திருக்கும் இந்த இளையோர், திருச்சபையின் வருங்கால நம்பிக்கையாக இருப்பது குறித்து இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இளையோருடனானக் கொண்டாட்டங்களை ஓரிரு வார்த்தைகளில் மட்டும் என்னால் விவரித்துவிட முடியாது. இறை ஏக்கம் மற்றும் உண்மையை நோக்கிய ஆழமான, உறுதியான விருப்பம் ஆகியவைகளை வெளிப்படுத்துபவைகளாக இளையோரின் வார்த்தைகள் இருந்தன என்ற திருத்தந்தை, அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்ட சிலுவைப்பாதை நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
மத்ரித்தின் அல்முதேனா பேராலயத்தில் இளம் குருமடமாணவர்களைச் சந்தித்தது பற்றியும் எடுத்தியம்பினார் பாப்பிறை. மத்ரித்தின் இளையோர் தினக் கொண்டாட்டங்கள், இஸ்பெயினுக்கும் உலகம் முழுமைக்கும் விசுவாசத்தின் மிகப்பெரும் வெளிபாட்டு நிகழ்வாக இருந்தது. மேலும், இளையோர் தங்களின் நல் அனுபவங்கள் குறித்துச் சிந்திப்பதற்கும், உரையாடுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இணைந்து செபிப்பதற்கும் இது ஒரு நல்ல தருணமாக இருந்தது. விசுவாசத்திலிருந்து பிறக்கும் நம்பிக்கையைக் கையிலெடுத்தவர்களாய், மக்களிடையே புளிக்காரமாய்ச் செயல்பட அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். என் பங்காக நானும் என் செபங்களோடு அவர்களுடன் இணைந்துச் செல்கிறேன். இளையோர் தினக் கொண்டாட்டங்களின் கனிகளை அன்னை மரியிடம் ஒப்படைக்கிறேன்.
இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும் இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் குறித்தும் எடுத்துரைத்தார். வரும் ஆண்டு ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் கொண்டாடப் படவிருக்கும் இளையோர் தினக் கொண்டாட்டம் "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" என்ற, பிலிப்பியருக்கு தூய பவுல் எழுதிய வார்த்தைகளைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும். அதேவேளை, 2013ம் ஆண்டு ரியோ டி ஜெனேரோவில் இடம்பெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற இயேசுவின் கட்டளையை கருப்பொருளாகக் கொண்டிருக்கும். இந்நிகழ்வுகளின் தயாரிப்புக்கென என் செபங்களை ஒப்படைக்கிறேன் என்ற திருத்தந்தை, அவரின் உரைக்குச் செவிமடுக்க காஸ்தல் கந்தோல்ஃபோ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தில் குழுமியிருந்த இளையோருக்கு தனிப்பட்ட முறையில் தன் வாழ்த்துக்களை வழங்கினார். பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.