Wednesday, August 31, 2011

ஆகஸ்ட் 31, 2011

புதன் மறைபோதகம்: கிறிஸ்தவ கலைப்படைப்புகள் இறைவன்மீது தாகத்தை ஏற்படுத்துகின்றன - திருத்தந்தை

    திருத்தந்தையின் விடுமுறை நாட்கள் கோடை விடுமுறை இல்லம் இருக்கும் காஸ்தல் கந்தோல்ஃபோ விலேயேத் தொடர்ந்து கொண்டிருப்பதால், இப்புதனும் தன் பொது மறைபோதகத்தை அந்த இல்ல வளாகத்திலேயே வழங்கினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.
   கடவுளை நோக்கி நம்மைக் கொண்டுச் செல்ல வல்ல வழிகளுள் ஒன்றான 'கலை வெளிப்பாடுகள்' குறித்து அங்கு கூடியிருந்த மக்களுக்கு எடுத்து கூறினார் அவர். இந்த அழகின் பாதையின் ஆழமான அர்த்தத்தை மனிதன் மீண்டும் கண்டுக் கொள்ள வேண்டும். ஒரு சிலையின் முன், ஓவியத்தின் முன், பாட்டின் முன் அல்லது கவிதையின் முன் ஒருவிதமான மகிழ்வு உணர்வை நாம் அனுபவித்திருக்கலாம். அது ஒரு பளிங்குக் கல்லாகவோ, வர்ணம் தீட்டப்பட்டத் துணியாகவோ, இசைக் கலவை யாகவோ, வார்த்தைகளின் தொகுப்பாகவோ மட்டும் நமக்குத் தெரிவதில்லை, மாறாக அதையும் தாண்டி, அது நம் இதயத்தைத் தொட வல்லதாய், ஒரு செய்தியை நமக்கு உணர்த்த வல்லதாய், நம் உணர்வுகளுக்குப் புத்துயிர் தர வல்லதாய் உள்ளது. அதேவேளை, இறைவனை நோக்கிய உண்மையான பாதைகளாக இருக்கும் கலை வெளிப்பாடுகளும் உள்ளன. ஒரு கோவிலினுள் நுழையும்போது நாம் செபத்திற்கான ஓர் அழைப்பை இயல்பாகவே உணர்கிறோம். திருவழிபாட்டுப் பாடல் நம் இதயத்தின் கம்பிகளை மீட்டிச் செல்வதுடன், நம் ஆன்மாவை இறைவனை நோக்கித் திருப்ப உதவுகின்றது. கலைகளின் இடங்களுக்கு நாம் மேற்கொள்ளும் பயணம், கலாச்சார அறிவு மேம்பாட்டிற்கான வாய்ப்பாக மட்டுமல்லாமல், இறைவனுடன் நாம் கொள்ளும் உறவையும் உரையாடலையும் ஊக்குவித்து பலப்படுத்தும் நேரமாகவும் இருக்கிறது. இவ்வேளையில், 27ம் திருப்பாடலின் ஜெப வார்த்தைகளான, 'நான் ஆண்டவரிடம் ஒரு விண்ணப்பம் செய்தேன். ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும், ஆண்டவரின் அழகை நான் காண வேண்டும்' என்பதை உங்களுக்கு எடுத்துரைக்க விழைகிறேன். நாம் காண்பதையும் தாண்டிச்சென்று நோக்க வேண்டிய தேவையை காண்பிக்க வல்லதாகவும், முடிவற்ற அழகாய் இருக்கும் இறைவன் மீதான தாகத்தை வெளிப்படுத்துவதாகவும் கலை உள்ளது, என்ற திருத்தந்தை, கலைப்படைப்புகளின் அழகுக்கு உங்கள் மனங்களைத் திறந்தவர் களாகவும், இறைப்புகழ்ப்பாடலுக்கும் செபத்திற்கும் அந்த அழகு உங்களை அழைத்துச் செல்ல அனுமதிப்பவர்களாகவும் மாறும்படி உங்களுக்கு அழைப்பு விடுக்கிறேன் என்றார்.
   இந்த புதன் பொது மறைபோதகத்தின் இறுதியில் அனைவருக்கும் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை.

Monday, August 29, 2011

ஆகஸ்ட் 28, 2011

உலகத்தின் போக்கில் சிந்திப்பது கடவுளைப் புறக்கணிப்பது ஆகும் - திருத்தந்தை எச்சரிக்கை

   பணத்தையும் வெற்றியையும் தேடுவது உலகத்தின் போக்குப்படிச் சிந்திப்பதாகும், அதே நேரம் கடவுளை விலக்கி வைப்பதாகும் என்று திருத்தந்தை 16ம் பெனடிக்ட் கூறினார்.
   காஸ்தெல் கந்தோல்ஃபோவில் இஞ்ஞாயிறு மூவேளை செப உரையில் இஞ்ஞாயிறு நற்செய்தி வாசகத்தை மையமாக வைத்து உரையாற்றிய திருத்தந்தை, உலகின் கண்களுக்குத் தோல்வியாகத் தெரிந்த சிலுவையை அன்புடன் ஏற்று கிறிஸ்துவைப் பின்பற்றுமாறு கிறிஸ்தவர்களைக் கேட்டுக் கொண்டார். ஒருவரின் வாழ்வு, சமூகத்தில் அவரடையும் வெற்றி, உடல் மற்றும் பொருளாதார நலவாழ்வு ஆகியவற்றின் நிறைவில் மட்டும் கவனம் செலுத்தப்படும் போது கிறிஸ்து தமது சிலுவைப்பாடுகள் பற்றித் தெரிவித்த போது பேதுரு அதற்கு எதிர்ப்புக் கூறியது, இக்காலத்தில் மீண்டும் இடம் பெறுகின்றது என்பதைக் காட்டுகின்றது என்று விளக்கினார் திருத்தந்தை. ஆயினும் கிறிஸ்தவர்கள் தங்களது சிலுவைத் துன்பங் களைத் தனியாக அல்ல, மாறாக இயேசுவுடன் சேர்ந்து சுமக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ளுமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
   மேலும், இம்முவேளை செப உரையைக் கேட்கச் சென்றிருந்த இளம் குருத்துவ மாணவர்களிடம், கிறிஸ்துவுக்குத் தங்கள் வாழ்க்கையை முழுமையாக அர்ப்பணிக்கப் பயப்பட வேண்டாம் என்று கூறினார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 16:21-27
   அக்காலத்தில், இயேசு தாம் எருசலேமுக்குப் போய் மூப்பர்கள், தலைமைக் குருக்கள், மறைநூல் அறிஞர்கள் ஆகியோரால் பலவாறு துன்பப்படவும் கொலை செய்யப்படவும் மூன்றாம் நாள் உயிருடன் எழுப்பப்படவும் வேண்டும் என்பதைத் தம் சீடருக்கு அந்நேரம் முதல் எடுத்துரைக்கத் தொடங்கினார். பேதுரு அவரைத் தனியே அழைத்துக் கடிந்து கொண்டு, "ஆண்டவரே, இது வேண்டாம். இப்படி உமக்கு நடக்கவே கூடாது" என்றார். ஆனால் இயேசு பேதுருவைத் திரும்பிப் பார்த்து, "என் கண்முன் நில்லாதே சாத்தானே, நீ எனக்குத் தடையாய் இருக்கிறாய்; ஏனெனில் நீ கடவுளுக்கு ஏற்றவை பற்றி எண்ணாமல் மனிதருக்கு ஏற்றவை பற்றியே எண்ணுகிறாய்" என்றார். பின்பு இயேசு தம் சீடரைப் பார்த்து, "என்னைப் பின்பற்ற விரும்பும் எவரும் தன்னலம் துறந்து, தம் சிலுவையைத் தூக்கிக்கொண்டு என்னைப் பின்பற்றட்டும். ஏனெனில் தம் உயிரைக் காத்துக்கொள்ள விரும்பும் எவரும் அதை இழந்துவிடுவர். மாறாக, என் பொருட்டுத் தம்மையே அழித்துக் கொள்கிற எவரும் வாழ்வடைவார். மனிதர் உலகம் முழுவதையும் ஆதாயமாக்கிக் கொண்டாலும் தம் வாழ்வையே இழப்பாரெனில் அவருக்குக் கிடைக்கும் பயன் என்ன? அவர் தம் வாழ்வுக்கு ஈடாக எதைக் கொடுப்பார்? மானிடமகன் தம் தந்தையின் மாட்சியோடு தம் வானதூதர்களுடன் வரப்போகிறார்; அப்பொழுது ஒவ்வொருவருக்கும் அவரவர் செயலுக் கேற்பக் கைம்மாறு அளிப்பார்'' என்றார்.

Thursday, August 25, 2011

ஆகஸ்ட் 24, 2011

புதன் மறைபோதகம்:  விசுவாசமுள்ள இளையோரே வருங்காலத் திருச்சபையின் நம்பிக்கை - திருத்தந்தை

    காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள வளாகத்திலேயே திருப் பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் சந்தித்து, அண்மை நாட்களில் இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெற்ற உலக இளையோர் தின நிகழ்வுகளுக்கு மனதளவில் திரும்பச் சென்று அந்நாட்களின் முக்கிய நிகழ்வுகள் குறித்து அவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் கூறி, தன் புதன் மறைபோதகத்தைத் துவக்கினார்.
   அனைத்துக் கண்டங்களிலிருந்தும் ஏறத்தாழ இருபது இலட்சம் இளையோர் மகிழ்வுடனும் சகோதரத்துவ உணர்வுடனும், இறைவனுடன் ஆன உரையாடலுக்கும், தங்கள் விசுவாசத்தைப் பகிரவும் அதில் வளரவும், வானிலிருந்து வரும் ஒளியைப்பெறவும் கூடியிருந்ததைக் காணமுடிந்தது. திருச்சபையோடு இணைந்து விசுவாச உறுதிப்பாட்டில் இணைந்திருக்கும் இந்த இளையோர், திருச்சபையின் வருங்கால நம்பிக்கையாக இருப்பது குறித்து இறைவனுக்கு நன்றி கூறுகிறேன். இளையோருடனானக் கொண்டாட்டங்களை ஓரிரு வார்த்தைகளில் மட்டும் என்னால் விவரித்துவிட முடியாது. இறை ஏக்கம் மற்றும் உண்மையை நோக்கிய ஆழமான, உறுதியான விருப்பம் ஆகியவைகளை வெளிப்படுத்துபவைகளாக இளையோரின் வார்த்தைகள் இருந்தன என்ற திருத்தந்தை, அவர்கள் ஆர்வமுடன் கலந்துகொண்ட சிலுவைப்பாதை நிகழ்வுகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
   மத்ரித்தின் அல்முதேனா பேராலயத்தில் இளம் குருமடமாணவர்களைச் சந்தித்தது பற்றியும் எடுத்தியம்பினார் பாப்பிறை. மத்ரித்தின் இளையோர் தினக் கொண்டாட்டங்கள், இஸ்பெயினுக்கும் உலகம் முழுமைக்கும் விசுவாசத்தின் மிகப்பெரும் வெளிபாட்டு நிகழ்வாக இருந்தது. மேலும், இளையோர் தங்களின் நல் அனுபவங்கள் குறித்துச் சிந்திப்பதற்கும், உரையாடுவதற்கும், பகிர்ந்து கொள்வதற்கும், இணைந்து செபிப்பதற்கும் இது ஒரு நல்ல தருணமாக இருந்தது. விசுவாசத்திலிருந்து பிறக்கும் நம்பிக்கையைக் கையிலெடுத்தவர்களாய், மக்களிடையே புளிக்காரமாய்ச் செயல்பட அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பியுள்ளார்கள் என்பதை உறுதியாக நம்புகிறேன். என் பங்காக நானும் என் செபங்களோடு அவர்களுடன் இணைந்துச் செல்கிறேன். இளையோர் தினக் கொண்டாட்டங்களின் கனிகளை அன்னை மரியிடம் ஒப்படைக்கிறேன்.
   இவ்வாறு தன் புதன் பொதுமறைபோதகத்தை வழங்கிய திருத்தந்தை, வரும் இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கான கருப்பொருள் குறித்தும் எடுத்துரைத்தார். வரும் ஆண்டு ஒவ்வொரு மறை மாவட்டத்திலும் கொண்டாடப் படவிருக்கும் இளையோர் தினக் கொண்டாட்டம் "ஆண்டவரோடு இணைந்து என்றும் மகிழுங்கள்" என்ற, பிலிப்பியருக்கு தூய பவுல் எழுதிய வார்த்தைகளைக் கருப்பொருளாகக் கொண்டிருக்கும். அதேவேளை, 2013ம் ஆண்டு ரியோ டி ஜெனேரோவில் இடம்பெற உள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்கள் "நீங்கள் போய் எல்லா மக்களினத்தாரையும் சீடராக்குங்கள்" என்ற இயேசுவின் கட்டளையை கருப்பொருளாகக் கொண்டிருக்கும். இந்நிகழ்வுகளின் தயாரிப்புக்கென என் செபங்களை ஒப்படைக்கிறேன் என்ற திருத்தந்தை, அவரின் உரைக்குச் செவிமடுக்க காஸ்தல் கந்தோல்ஃபோ திருத்தந்தையர் கோடை விடுமுறை இல்லத்தில் குழுமியிருந்த இளையோருக்கு தனிப்பட்ட முறையில் தன் வாழ்த்துக்களை வழங்கினார். பின் தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Sunday, August 21, 2011

ஆகஸ்ட் 21, 2011

உலக இளையோர் நாளின் இறுதித் திருப்பலி: கிறிஸ்துவின் அன்பை பகிர்ந்திட திருத்தந்தை அழைப்பு

    உலகின் பல பகுதிகளிலிருந்தும் பெரும் எண்ணிக்கையில் வந்து இங்கு கூடியிருக்கும் இளையோரே, உங்களைப் பார்க்கும்போது என் இதயம் மகிழ்வால் நிறைகிறது. நாம் இந்த உலக இளையோர் நாளின் உச்சக்கட்டத்தை இங்கு அடைந்துள்ளோம். உங்கள் மீது தனிப்பட்ட அன்பு கொண்டு, உங்களை தன் நண்பர்கள் என்று அழைத்த இயேசு, (யோவான் 15: 15) உங்களைச் சந்திக்க மீண்டும் ஒருமுறை இங்கு வருகிறார். உங்கள் வாழ்வுப் பயணத்தில் உங்களுடன் நடக்க அவர் விழைகிறார் என்று தன் மறையுரையைத் துவங்கிய திருத்தந்தை, தொடர்ந்து இஞ்ஞாயிறுக்கான நற்செய்தியைக் குறித்து தன் சிந்தனைகளை வழங்கினார்.
   கிறிஸ்துவை அறிந்துகொள்ளும் இரு வழிகளை இன்றைய நற்செய்தி நமக்கு வழங்குகிறது. (மத். 16: 13-20) சொந்த ஈடுபாடு எதுவும் இல்லாமல் கிறிஸ்துவைப் பற்றிய கருத்துக்களைத் திரட்டுவது முதல் வழி. “மானிடமகன் யாரென்று மக்கள் சொல்கிறார்கள்?” என்று இயேசு கேட்டபோது, இந்த முதல் வழியில் திரட்டிய பதில்களைச் சீடர்கள் இயேசுவிடம் கூறினர். பின்னர் இயேசு தன் சீடர்களிடம் திரும்பி, “ஆனால் நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்று கேட்டார். சீமோன் பேதுரு மறுமொழியாக, “நீர் மெசியா, வாழும் கடவுளின் மகன்” என்று உரைத்தார். பேதுருவின் பதில் வெறும் கருத்துக்களைத் தாண்டி, விசுவாசத்தின் அறிக்கையாக ஒலிக்கிறது. விசுவாசம் என்பது மனித அறிவு சார்ந்த முயற்சிகளைத் தாண்டி, இறைவன் வழங்கும் ஒரு கொடை. கிறிஸ்துவின் மீது கொள்ளும் தனிப்பட்ட ஓர் உறவால், அவரிடம் முழுமையாக சரண் அடையும் ஒரு முயற்சி. விசுவாசமும், இயேசுவைப் பின்பற்றுவதும் ஒன்றோடொன்று தொடர்புடையது. இவ்வாறு நற்செய்தியைக் குறித்த தன் சிந்தனைகளைக் கூறியத் திருத்தந்தை, இளையோரிடம் தனது ஆவலை வெளியிட்டார்.
   என் அன்பு மிகு இளையோரே, இன்று உங்களிடம் கிறிஸ்து “நீங்கள், நான் யார் எனச் சொல்கிறீர்கள்?” என்ற இதே கேள்வியைக் கேட்கிறார்: கிறிஸ்துவின் கேள்விக்கு தாராள மனதோடும், துணிவோடும் பதில் சொல்லுங்கள். பேதுருவின் விசுவாச அறிக்கைக்குப் பதிலாக இயேசு திருச்சபையைக் குறித்து பேசுகிறார். “எனவே நான் உனக்குக் கூறுகிறேன்; உன் பெயர் பேதுரு; இந்தப் பாறையின்மேல் என் திருச்சபையைக் கட்டுவேன்.” என்று கூறுகிறார். பேதுருவின் வழி வந்தவர் என்ற முறையில் நான் உங்களிடம் வேண்டுவது இதுவே. கிறிஸ்துவின் மீது நீங்கள் கொள்ளும் விசுவாசம் உங்கள் தனிப்பட்ட முயற்சியாக மட்டும் இல்லாமல், திருச்சபை என்ற குடும்பத்தில் இணைந்த ஒரு முயற்சியாக இருக்கட்டும்.
   எனவே, அன்பு இளையோரே, கிறிஸ்துவின் மீது அன்பு கொண்டிருப்பதுபோல், திருச்சபை மீதும் அன்பு கொள்ளுங்கள். உங்கள் தலத்திருச்சபை, பங்கு எனும் குடும்பம் அதன் பல்வேறு செயல்பாடுகள் ஆகியவற்றில் நீங்கள் முழு ஈடுபாடு கொள்வது கிறிஸ்துவின் அன்பில் நீங்கள் வளர்ந்து வருவதைக் காட்டும். இயேசுவுடன் நீங்கள் கொண்டுள்ள நட்பை, கிறிஸ்துவைக் குறித்து நீங்கள் பெற்றுள்ள ஆழமான அனுபவங்களை உங்கள் தனிப்பட்ட உடமை என்று பூட்டி வைக்காதீர்கள். அந்த நட்பை, அன்பை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் பகிர்வை இந்த உலகம் ஒதுக்கினாலோ, ஆர்வமின்றி விலகிச் சென்றாலோ, மனம் தளராமல் தொடர்ந்து பகிர்ந்து வாருங்கள். நன்னெறிகள் ஏதும் இல்லாமல், சுயநலத்தையே முக்கியப்படுத்தும் இன்றைய உலகில், நீங்கள் இங்கு ஆயிரக்கணக்கில் கூடி வந்திருப்பது ஒரு மாற்று சாட்சியாகத் திகழட்டும். இந்த உலகில் இன்னும் நன்னெறி, விசுவாசம் இவைகளுக்கு இடம் உள்ளதென்று நமது உலக இளையோர் தினம் உலகிற்குச் சொல்லட்டும் என்று தன் மறையுரையை நிறைவு செய்த திருத்தந்தை, இறுதியில் இளையோரை அன்னை மரியின் பாதுகாவலில் ஒப்படைப்பதாகக் கூறினார். மேலும், திருத்தந்தை, இறைபணியில் ஈடுபடுவோர் மற்றும் விசுவாசிகள் அனைவரும் இறைவனிடம் அதிகம் நெருங்கி வர இளையோர் செபிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

திருத்தந்தை வழங்கிய மூவேளை செப உரை:
   அன்பு நண்பர்களே, இதோ நீங்கள் வீடு திரும்பும் நேரம் வந்துவிட்டது. இந்த அற்புதமான அனுபவத்தி லிருந்து நீங்கள் திரும்பிச் செல்லும்போது, உங்கள் நண்பர்கள் உங்களிடம் என்ன மாற்றம் நிகழ்ந்துள்ள தென்று அறிய ஆவலாய் இருப்பார்கள். நீங்கள் அடைந்துள்ள புத்துணர்வை, கிறிஸ்துவின் மீது ஆழப்பட்டுள்ள உங்கள் நட்பை எடுத்துக் கூற தயங்க வேண்டாம். உங்களுடன் பயணம் செய்ய இயலாமல், உங்கள் வரவுக்காகக் காத்திருக்கும் உங்கள் நண்பர்களை இந்த நாட்களில் நான் அடிக்கடி நினைவு கூர்ந்தேன். உங்கள் நண்பர்களுக்கும், அவர்கள் குடும்பங்களுக்கும் என் அன்பு வாழ்த்துக்களைச் சுமந்து செல்லுங்கள். அதேபோல், உலகில் பல்வேறு பிரச்சனைகளில் சிக்குண்டிருக்கும் இளையோருக்கும் என் அன்பைச் சுமந்து செல்லுங்கள் என்று கூறிய திருத்தந்தை, உலக இளையோர் நாள் கொண்டாட்டங் களில் பங்கேற்ற இளையோருக்கு உறுதுணையாக இருந்த ஆயர்கள், குருக்கள் அனைவருக்கும் தன் நன்றியைத் தெரிவித்தார்.
   மூவேளை செபத்தின் இறுதியில், 2013ம் ஆண்டு பிரேசில் நாட்டின் ரியோ டி ஜெனீரோவில் அடுத்த உலக இளையோர் நாள் நடைபெறும் என்பதை அறிவித்தத் திருத்தந்தை, மீண்டும் ஒரு முறை கூடியிருந்த அனைவருக்கும் ஸ்பானியம், பிரெஞ்ச், ஆங்கிலம், ஜெர்மன், இத்தாலியம், போர்த்துகீஸ், போலந்து ஆகிய மொழிகளில் வாழ்த்துக்களைக் கூறினார்.

ஆகஸ்ட் 20, 2011

 திருச்சபையின் புதிய மறைவல்லுநர்

 அவிலா புனித ஜான் (1500-1569)
   இஸ்பெயின் நாட்டின் மத்ரித் அரச மாளிகைக்கு முன்புறம் அமைந்துள்ள அல்முதேனா மரியன்னை கதீட்ரலில், குருமட மாணவர்களுக்காக திருத்தந்தை 16ம் பெனடிக்ட் திருப்பலி நிறைவேற்றினார். இவ்விளையோர் தினத்தில் கலந்து கொண்ட சுமார் ஆறாயிரம் குருத்துவ மாணவர்க்கென மறையுரை ஆற்றிய திருத்தந்தை, குருக்கள் அனைவரும் புனிதமாக வாழவேண்டும் என்று அழைப்புவிடுத்தார். இத்திருப்பலியின் இறுதியில் இஸ்பெயினின் 16ம் நூற்றாண்டு மறையுரையாளர் அவிலா நகர் புனித ஜானை அகில உலகத் திருச்சபையின் மறைவல்லுநராக திருத்தந்தை அறிவித்தார். புனித அகுஸ்தீன், புனித பிரான்சிஸ் டி சேல்ஸ், புனித அவிலா தெரேசா, புனித குழந்தை தெரேசா உட்பட ஏற்கனவே திருச்சபையில் 33 மறைவல்லுநர்கள் இருக்கின்றனர். கடும் வெயிலையும் பொருட்படுத்தாது பேராலயத்திற்கு வெளியேயும் பல்லாயிரக்கணக்கானோர் நின்று கொண்டு இத்திருப்பலியில் பங்கு பெற்றனர்.

Saturday, August 20, 2011

ஆகஸ்ட் 19, 2011

‘இயேசுவோடு இணைந்த பணியில் சுதந்திரத்திற்கான சிறகுகளை நாம் பெறமுடியும்’ - திருத்தந்தை

    இளையோர் முன்னிலையில் திருத்தந்தை 16-ம் பெனடிக்ட் வழங்கிய சிறப்புரை பின்வருமாறு: இன்றைய இச்சந்திப்பின் போது வாசிக்கப்பட்ட நற்செய்தி வாசகம், இயேசுவின் வார்த்தைகளை வரவேற்பதையும் அதை நடைமுறைப்படுத்து வதையும் குறித்து எடுத்துரைக்கிறது. இயேசுவின் வார்த்தைகள் நம் இதயத்தை சென்றடைந்து, ஆழமாக வேரூன்றப்பட்டு, நம் வாழ்வில் பூத்து குலுங்கவேண்டும். நம் ஆசிரியராம் இயேசு நமக்குக் கற்றுத்தருவது, பிறரிடமிருந்து கற்றதையல்ல, மாறாக, தானே வாழ்ந்து காட்டியதை. இயேசுவின் வார்த்தைகள் வாழ்வையும் உயிர்துடிப்பையும் வழங்கும் வண்ணம், இளையோரே, அவ்வார்த்தைகளுக்குச் செவிமடுங்கள். இளையோர் கொண்டாட்ட இந்நாட்களை உங்களின் ஆன்மீக வளர்ச்சிக்கென நன்முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள். இன்றைய உலகில் பலர் தங்களுக்கான கடவுள்களை தாங்களே உருவாக்கிக் கொண்டு, தங்களைத்தவிர வேறு எந்த வித அடிப்படையோ ஆதாரமோ தேவையில்லை என்பதாய் வாழ்ந்து வருகின்றனர். எது உண்மை, எது உண்மையில்லை, எது நன்மை, எது தீமை, எது நீதி, எது அநீதி, யார் வாழவேண்டும், வேறு தேவைகளுக்காக யார் தியாகம் செய்யப்படவேண்டும், என்பவைகளை அவர்களே முடிவு செய்து கொண்டு எவ்வித தெளிவான பாதையுமின்றி மனம்போன போக்கில் வாழ்ந்து வருகின்றனர். இத்தகையச் சோதனைகளுக்கு உங்களைக் கையளிக்காதீர்கள். உண்மையில், இத்தகையப் போக்குகள், நோக்கமற்ற ஒரு வாழ்வுக்கும், இறைவனற்ற ஒரு சுதந்திரத்துக்குமே இட்டுச் செல்கின்றன. ஆனால், இறைச்சாயலில் சுதந்திரமாக படைக்கப்பட்ட நாம், உண்மை மற்றும் நன்மைத்தனத்திற்கானத் தேடலில் முன்னணியில் நிற்கவும், நம் செயற்பாடுகளுக்கு நாமே பொறுப்பேற்கவும், படைப்பை ஒழுங்காய் சீரமைத்து அழகுப்படுத்தும் பணியில் இணைப் பணியாளர்களாகச் செயல்படவும் அழைப்புப் பெற்றுள்ளோம். இயேசுவோடு இணைந்து இப்பணியில் நாம் வெற்றி பெறமுடியும் என்பது மட்டுமல்ல, நம் சுதந்திரத்திற்கானச் சிறகுகளையும் பெறமுடியும். கிறிஸ்துவில் உங்கள் வாழ்வைக் கட்டியெழுப்பும்போது, நீங்கள் எதற்கும் அஞ்சத்தேவையில்லை, உங்கள் இதயங்களில் அமைதி ஆட்சி புரியும். உங்களில் உருவாகும் மகிழ்வு பிறரையும் பாதிக்கும்போது, உங்கள் வாழ்வின் இரகசியத்தை அறிய ஆவல் கொள்ளும் அவர்கள், உங்களின் வாழ்வு இயேசுவின் மேல் கட்டப்பட்டிருப்பதைக் கண்டு கொள்வர்.

Friday, August 19, 2011

ஆகஸ்ட் 18, 2011

உலக இளையோர் தினம்: இளையோர் எப்பொழுதும் விசுவாசத்தில் நிலைத்து நிற்க திருத்தந்தை அழைப்பு

    'கிறிஸ்துவில்    வேரூன்றியவர்களாகவும், அவர் மீது கட்டியெழுப்பப்பட்டவர்களாகவும், விசுவாசத்தில் உறுதி உடையவர்களாகவும் நில்லுங்கள்' என்ற கருப்பொருளுடன் சிறப்பிக்கப் படும் உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் பங்கேற்பதற்காக இஸ்பெயின் சென்ற திருத்தந்தை 16ம் பெனடிக்ட், மத்ரித் விமான நிலையத்தில் வரவேற்பை ஏற்றுக்கொண்டு பின்வருமாறு உரை நிகழ்த்தினார்: உலகெங்கிலுமிருந்து வந்திருக்கும் பல்லாயிரக் கணக்கான இளையோரை, தங்கள் வாழ்க்கைக்கு மேலான அர்த்தம் கொடுக்கும் உண்மையைத் தேடும் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்துள்ள இளையோரைச் சந்திப்பதற்காக இங்கு வந்துள்ளேன். பேதுருவின் வழி வருபவராக, கிறிஸ்துவே வழியும் உண்மையும், வாழ்வும் என்பதை அறிவிக்கும் மேய்ப்புப்பணி நடவடிக்கைகளுடன், உங்கள் அனைவரையும் விசுவாசத்தில் உறுதிப்படுத்துவதற்காக மத்ரித் வந்துள்ளேன். இளையோர் பெருமளவில் மத்ரித் வந்திருப்பதன் நோக்கம் பற்றிய கேள்விக்கு அவர்களே பதில் கொடுக்க வேண்டும். இந்த உலக தினத்தின் விருதுவாக்கு அவர்களிடம் பரிந்துரைப்பது போன்று, கடவுளின் வார்த்தையை, இறைச்சொற்களைக் கேட்பதற்கு விருப்பம் கொண்டு மத்ரித் வந்திருக்கலாம். இதன்மூலம் கிறிஸ்துவில் வேரூன்றிக் கட்டியெழுப்பப்பட்ட தங்களின் உறுதியான விசுவாசத்தை வெளிப்படுத்த முடியும். இளையோர் உயிருள்ள இறைவனைக் கண்டு கொள்வது, அவர்கள் இவ்வுலகின் சவால்களைச் சந்திப்பதற்கு அவர்களின் கண்களைத் திறந்து விடும். மேலோட்டமான நிலை, நுகர்வுத்தன்மை, தான் என்ற கோட்பாடு, பாலியல் உறவுகளின் தூய்மையைக் குறைக்கும் பரவலானப் போக்குகள், ஊழல், ஒருமைப்பாட்டுணர்வு இல்லாமை ஆகியவற்றை எதிர்கொள்ளும் இளையோர், கடவுள் பற்று இன்றி இந்தச் சவால்களைச் சந்திப்பது மிகவும் கடினம் என்பதை அறிந்துள்ளார்கள். கடவுள் அவர்கள் அருகில் இருக்கும் போது வாழ்வுக்கான ஒளி கிடைக்கின்றது. அத்துடன் மனித மாண்பும், உண்மையான சகோதரத்துவமும் மதிக்கப்படும் சமூகத்தைக் கட்டியெழுப்புவதற்குத் தங்களைத் தாராளமாக அர்ப்பணிப்பதற்குத் தூண்டுதல் பெறுகிறார்கள்.
   இளையோர் தங்களது ஏக்கங்களையும், தங்களது கலாச்சார வளமையையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டு ஒருவர் ஒருவரை விசுவாசப் பயணத்தில் ஊக்குவிக்க நல்ல வாய்ப்பாக இந்த முக்கியமான நாள் அமைந்துள்ளது. இந்தப் பயணத்தில் தாங்கள் தனித்துவி்டப்பட்டுள்ளோம் அல்லது அன்றாட வாழ்வில் புறக்கணிப்படுகிறோம் என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அவர்கள் தனியாக இல்லை. இளையோரே, உங்களையொத்த வயதுடைய பலர் உங்கள் ஏக்கங்கள் போல உணர்வுகளைக் கொண்டு தங்களை முழுமையாகக் கிறிஸ்துவுக்கு அர்ப்பணித்து தங்களுக்கு முன்பாக உண்மையிலேயே ஓர் எதிர்காலம் இருக்கின்றது என்பதை அறிந்திருக்கிறார்கள். தங்கள் வாழ்க்கை முழுவதையும் அர்ப்பணிக்கும் தீர்மானம் எடுக்கும் இந்த முக்கிய தருணங்களைக் கண்டு அவர்கள் பயப்படவில்லை. இதனாலே நான் மகிழ்ச்சியுடன் அவர்கள் சொல்வதைக் கேட்கிறேன். அவர்களோடு செபிக்கின்றேன். அவர்களோடு திருப்பலி நிகழ்த்துகின்றேன். தூய்மையான மற்றும் இளமையான தென்றல் போன்று நம்பிக்கைச் செய்தியை உலக இளையோர் தினம் நமக்குக் கொண்டு வருகின்றது.
   அதேசமயம் இன்னல்களும் இல்லாமல் இல்லை. உலகெங்கும் இரத்தம் சிந்தும் அளவுக்குக்கூட பதட்டநிலைகளும் மோதல்களும் இடம் பெற்று வருகின்றன. நீதியும் மனிதனின் தனித்துவமிக்க மதிப்பீடும், தன்னலத்திற்கும் பொருளாதார மற்றும் கருத்தியல் கோட்பாடுகளுக்கும் எளிதாகச் சரணடைந்துள்ளன. மிகுந்த அன்போடு இறைவன் படைத்த இயற்கையும் சுற்றுச்சூழலும் மதிக்கப்படவில்லை. மேலும், வேலைதேடும் அல்லது வேலையை இழந்த பல இளையோர், தங்கள் எதிர் காலத்தைக் கவலையுடன் நோக்குகின்றனர். போதைப் பொருளைத் தவிர்க்க அல்லது அப்பழக்கத்திலிருந்து விடுபட பல இளையோருக்கு உதவி தேவைப் படுகின்றது. கிறிஸ்துவில் நம்பிக்கை வைத்திருப்பதால் சிலர் பாகுபாடுகளையும் வெறுப்பையும் அடக்குமுறைகளையும் மறைவாக அல்லது பொதுப்படையாகச் சந்திக்கின்றனர். இளையோரே, உங்களுக்கு நான் மீண்டும் எனது முழு இதயத்துடன் இதனைக் கூறுகிறேன். அதாவது உங்களது மனஅமைதியை எவராலும், எதனாலும் எடுத்துவிட முடியாது, நம் ஆண்டவர் குறித்து வெட்கமடையாதீர்கள். இளையோரே விசுவாசத்தில் நிலைத்து நில்லுங்கள். கிறிஸ்தவத் தனித்தன்மையை மறைக்காமல் விவேகத்துடன் தீர்மான மனத்துடன் சான்று பகரும் வாழ்வை வாழுங்கள். ஆழமான மற்றும் பலனுள்ள கிறிஸ்தவ மூலங்களால் நூற்றாண்டுகளாக வளமை பெற்றுள்ள இஸ்பெயின் நாட்டு மக்களின் நல்வாழ்வு மீது அதிக அக்கறை காட்ட வேண்டிய அவசியம் தற்சமயம் அதிகமாகவே ஏற்பட்டுள்ளது. இந்நாட்களில் நான் உங்களோடு இருக்கிறேன். உலகிலுள்ள எல்லா இளையோரை, குறிப்பாக பல்வேறு சோதனை களை எதிர்நோக்கும் இளையோரை நினைக்கிறேன். உங்கள் அனைவரையும் இஸ்பெயின் நாட்டையும் புனித கன்னிமரியின் பாதுகாவலில் வைக்கிறேன்.

Thursday, August 18, 2011

ஆகஸ்ட் 17, 2011

புதன் மறைபோதகம்: அன்னை மரியாவின் வழியாக இயேசுவிடம் நெருங்கி வர திருத்தந்தை அழைப்பு

   காஸ்தல் கந்தோல்ஃபோ கோடை விடுமுறை இல்லத்தில் ஓய்வெடுத்து வரும் திருத்தந்தை 16ம் பெனடிக்ட், அங்குள்ள வளாகத்திலேயே திருப் பயணிகளையும் உல்லாசப் பயணிகளையும் சந்தித்து, அன்னை மரியிடமிருந்து நாம் கற்றுக் கொள்ளும் தியான முயற்சிகள் குறித்து இவ்வாரப் புதன் பொது மறை போதகத்தை வழங்கினார்.
   அன்னை மரியின் விண்ணேற்பு விழா ஒளி இன்னும் நம்மில் தொடர்ந்துகொண்டிருக்கிறது. இது ஒரு நம்பிக்கையின் விழா. அன்னை மரி விண்ணகத்திற்குச் சென்றுள்ளார். நம் அனைவரின் இலக்கும் அதுவே. ஆனால் எவ்வாறு அங்குச் செல்வது என்பதே கேள்வி. ஆண்டவர் தமக்குச் சொன்னவை நிறைவேறும் என நம்பிய மரியா பேறுபெற்றவர் என மரியாவைக் குறித்து நற்செய்தியில் சொல்லப்பட்டுள்ளது. மரியா நம்பிக்கை உடையவராக இருந்தார், இறைவனிடம் தன்னை கையளித்தார். விசுவசிப்பதும், இறைவனிடம் நம்மைக் கையளிப்பதும், அவர் விருப்பத்தை நமதாக்குவதுமே விண்ணகத்திற்கான முகவரி. இன்று நாம், வார்த்தைச் செபத்தை அல்ல, மாறாக மனதிற்குள்ளேயான வார்த்தையற்ற ஒரு தியான நிலை குறித்து நோக்குவோம். அதுவே, நம் மனதை, இறைவனின் இதயத்துடனான தொடர்புக்குக் கொணர்வதாகும்.
   மரியாள் அனைத்தையும் தன் உள்ளத்தில் இருத்திச் சிந்தித்துக் கொண்டிருந்தாள் என விவிலியத்தில் வாசிக்கின்றோம். இது நம் அன்னையின் வாழ்வில், இயேசுவின் சிலுவைச்சாவு மற்றும் மகிமை நிறை உயிர்ப்புவரைத் தொடர்ந்தது. இன்றையக் காலத்தில் நாமும் பல்வேறு சவால்களாலும் பிரச்சனைகளாலும் கவலைகளாலும் மூழ்கடிக்கப்பட்டுள்ளோம். இறைவனோடு தொடர்பு கொண்டு நம் ஆன்மீக வாழ்விற்கு உரமூட்டும் வகையில், நின்று நிதானித்து தியானிக்க நமக்கு நேரம் கிட்டாமல் உள்ளது. இங்குதான் அன்னை மரியா, நம் நாளாந்திர நடவடிக்கைகளில் எங்கனம் தியானத்திற்கான நேரத்தைக் கண்டுகொள்வது எனக் கற்றுத் தருகிறாள் என்ற திருத்தந்தை, புனித அகுஸ்தினார், புனித பொனவெந்தூர் ஆகியோர் தியானம் குறித்துக் கூறியுள்ளவைகளையும் எடுத்துரைத்தார்.
   தியானித்தல் என்பது, சேகரிப்பு மனநிலையை, உள்மன அமைதியை நம்மில் உருவாக்குவதாகும். இது தியானிப்பதற்கும், நம் விசுவாசம் மற்றும் இறைவன் நம்மில் ஆற்றும் செயல்கள் ஆகியவை குறித்தவைகளைச் சேகரிப்பதற்கும் உதவுகிறது. விவிலியத்தின் சில பகுதிகளை அல்லது ஆன்மீகம் தொடர்புடைய எழுத்துக்கள் ஆகியவைகளை ஆழமாக வாசித்தல் போன்றவைகள் உட்பட பல்வேறு வழிகளில் இது இடம்பெறலாம். செபமாலை செபித்தலும் ஒரு தியான செபமே. ஆகவே, தியானித்து, இறைவனோடு தொடர்பு கொண்டு, அவர் அருகே நெருங்கி வந்து, அதன்வழி வானுலகை நோக்கி நடந்துச் செல்வதற்கு உதவுவதில் பல்வேறு வழிகள் உள்ளன. எப்போதும் இறைவனின் கைகளில் நம்மை ஒப்படைப்பதும், அவர் விருப்பத்தை நிறைவேற்றுவதில் மட்டுமே நாம் உண்மையான மகிழ்வைக்காண முடியும் என்பதை உறுதியாக நம்புவதுமே தியானித்தலின் நோக்கமாகும், எனத் தன் புதன் பொது மறைபோதகத்தை வழங்கினார் திருத்தந்தை.

    திங்களன்று நாம் சிறப்பித்த விண்ணேற்பு விழாவின் நாயகியாகிய அன்னை மரியின் பரிந்துரையின் மூலம் நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இயேசுவுக்கு மிக அருகாமையில் வருவீர்களாக என வேண்டி, தன் அப்போஸ்தலிக்க ஆசீரையும் அங்கு குழுமியிருந்த மக்களுக்கு அளித்தார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட்.

Tuesday, August 16, 2011

ஆகஸ்ட் 14, 2011

இறைவனின் கொடைகளை சுதந்திரமாகப் பெறும் வகையில் விசுவாசத்தில் வளர திருத்தந்தை அழைப்பு

   விசுவாசத்தில் வளர்ந்து, இறைவனின் கொடைகளைச் சுதந்திரமாகப் பெறும் வகையில் நம்மை உயர்த்திக் கொள்வதற்கு அனைத்து விசுவாசிகளும் அழைப்புப் பெறுகிறார்கள் என்றார் திருத்தந்தை 16ம் பெனடிக்ட். தன் மகளுக்கு குணம் தரும்படி இறைவனை வேண்டிய கானானியப் பெண் குறித்த இஞ்ஞாயிறு வாசகத்தின் அடிப்படையில் ஞாயிறு நண்பகல் மூவேளை ஜெப உரை வழங்கிய திருத்தந்தை, இயேசுவின் தனித் தன்மையையும், அவரின் வார்த்தைகளையும், இறைவனின் கொடைகளையும் அறிந்து ஏற்றுக்கொள்ள நம் விசுவாசம் உதவுகிறது என்றார். மனமாற்றம் எனும் அனுபவத்தை ஒவ்வொரு நாளும் வாழ்வதற்கான தேவை நம் இதயங்களுக்கு உள்ளது எனவும் எடுத்துரைத்தார் பாப்பிறை. இறைவார்த்தைகளுக்கு செவி மடுத்தல், திருவருட்சாதன நிறைவேற்றல், தனி செபங்கள் மற்றும் நம் அயலாருக்கான பிறரன்பு நடவடிக்கைகள் ஆகியவற்றின் மூலம் நம் விசுவாசம் ஊட்டம் பெறட்டும் என்ற பாப்பிறை, உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களில் கலந்துகொள்ளச் செல்லும் தனக்கு செபங்கள் மூலம் உதவுமாறு அனைவரையும் கேட்டுக்கொண்டார். 
    இந்தச் செவ்வாய் முதல் ஞாயிறு வரை இஸ்பெயினின் மத்ரித்தில் இடம்பெறும் 6 நாள் கொண்டாட்டங்களின் இறுதி 4 நாட்களும் இளைஞர்களுடன் இருப்பார் பாப்பிறை.

ஞாயிறு நற்செய்தி: மத்தேயு 15:21-28
   அக்காலத்தில், இயேசு அங்கிருந்து புறப்பட்டுத் தீர், சீதோன் ஆகிய பகுதிகளை நோக்கிச் சென்றார். அவற்றின் எல்லைப் பகுதியில் வாழ்ந்து வந்த கானானியப் பெண் ஒருவர் அவரிடம் வந்து, 'ஐயா, தாவிதீன் மகனே, எனக்கு இரங்கும்; என் மகள் பேய் பிடித்துக் கொடுமைக்குள்ளாகி இருக்கிறாள்' எனக் கதறினார். ஆனால் இயேசு அவரிடம் ஒரு வார்த்தைகூட மறுமொழியாகச் சொல்லவில்லை. சீடர்கள் அவரை அணுகி, 'நமக்குப் பின்னால் கத்திக்கொண்டு வருகிறாரே, இவரை அனுப்பிவிடும்' என வேண்டினர். அவரோ மறுமொழியாக, 'இஸ்ரயேல் குலத்தாருள் காணாமற் போன ஆடுகளாய் இருப்போரிடமே நான் அனுப்பப்பட்டேன்' என்றார். ஆனால் அப்பெண் அவர்முன் வந்து பணிந்து, 'ஐயா, எனக்கு உதவியருளும்' என்றார். அவர் மறுமொழியாக, 'பிள்ளைகளுக்குரிய உணவை எடுத்து நாய்க் குட்டிகளுக்குப் போடுவது முறையல்ல' என்றார். உடனே அப்பெண், 'ஆம் ஐயா, ஆனாலும் தங்கள் உரிமையாளரின் மேசையிலிருந்து விழும் சிறு துண்டுகளை நாய்க்குட்டிகள் தின்னுமே' என்றார். இயேசு மறுமொழியாக, 'அம்மா, உமது நம்பிக்கை பெரிது. நீர் விரும்பியவாறே உமக்கு நிகழட்டும்' என்று அவரிடம் கூறினார். அந்நேரம் அவர் மகளின் பிணி நீங்கியது.